ரப்புல் ஆலமீன் தரும் ரமலான் பரிசு!

Go down

ரப்புல் ஆலமீன் தரும் ரமலான் பரிசு!

Post by முஸ்லிம் on Mon Aug 22, 2011 9:32 pm


புனிதமிகு இந்த ரமலானிலே செய்யும் நல்லறங்களுக்கு நிகராக வேறு எந்த நாட்களிலும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.


நம்மில் அதிகமானோர் அதற்காக நம் ஓய்வு, உறக்கம் கூட மறந்து அல்லாஹ்வுக்காக செய்யவேண்டிய அமல்களில் ஈடுபடுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றாலும், இன்னும் சில பேர் இந்த ரமலானில்கூட இறைவழிபாடுகளின் விஷயத்தில் அலட்சியம் செய்பவர்களாக இருப்பதைக் காண்கிறோம். கடைகளில் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்குவதற்கு அந்த கூட்ட நெரிசலிலும் நாம் காட்டும் ஆர்வம், அல்லாஹ்வின் இந்த மகத்தான நற்கூலியை அடைவதில் காட்டுவதில்லை.


ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது; அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்:முஸ்லிம்


ஆக‌ ரமலானில் நாம் ஒரு நாள் செய்யும் நல்லறங்கள் அல்லாஹ்விடத்தில் 10 முதல் 700 நாட்கள் செய்யும் நல்லற‌ங்களுக்கு நிகரானதாக இருக்கிறது.


டிவி, இன்டர்நெட், செல் போன்கள், மற்ற பொழுது போக்குகள் மூலம் முடிந்தவரை நோன்பிருக்கும் நேரத்தை செலவழிப்பதில் முனைப்பாக‌ இருக்கும் நம் மக்கள், அல்லாஹ்வின் அளப்பரிய அருளைத் தேடுவதில் முனைப்புக் காட்டாமல், ரமலானின் நாட்களை வீணாக்கிக் கொண்டிருப்பது வேதனையான விஷயம்தான்! எனவே, கடந்த நாட்கள் கடந்ததாக இருக்கட்டும்; இனி மீதமிருக்கும் நாட்களிலாவது நம்மால் முடிந்த நல்ல அமல்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள முயற்சி செய்வோம்.


அடுத்த நொடி என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத நமக்கு, அடுத்த ரமலானை நாம் அடைவோம் என்பதில் யாரும் எந்த உத்திரவாதமும் கொடுக்க இயலாது. ஆகவே தொழுகையை சரியான முறையில் கடைப்பிடிப்பது, குர்ஆன் ஓதுதல், அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவது, இஸ்லாத்தின் ஒவ்வொரு அம்சங்களையும் பயான் கேட்பதின் மூலமோ, குர்ஆன்/ஹதீஸ் சம்பந்தமான இணையங்களைப் படிப்பதின் மூலமோ (எதன் மூலமாவது) அறிந்துக் கொள்வதில் ஆர்வத்துடன் ஈடுபடுவது, அல்லாஹ் நமக்கு பெருக்கித் தருவான் என்ற எண்ணத்தில் மனமுவந்து தாராளமாக தான தர்மங்கள் செய்வது, உங்களைப் போன்ற நோன்பாளிகளுக்கு உங்களால் இயன்றளவு நோன்பு திறக்க கொடுத்து உதவுவது மற்றும் பொதுநல சேவைகள் என மறுமைக்குரிய நற்காரியங்களை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்.


மேலும் உலகில் எவ்வளவு பெரிய‌ வெகுமதிகள் நமக்கு கிடைத்தாலும் அவையாவும் அல்லாஹ்வுடைய பரிசுக்கு எள் முனைய‌ளவும் நிகரானது கிடையாது! அதுவும் இன்று ஆரம்பமாகும் கடைசிப் பத்தில் ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்தஆலா நமக்கு தரக்கூடிய ஓர் உன்னத அன்பளிப்பு 'லைலத்துல் கத்ரு' என்று சொல்லப்படும் ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவாகும்! அந்த இரவை அடையக்கூடிய‌ நாளை நாம் இப்போது நெருங்கிவிட்டோம்.


அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்,


"லைலத்துல் கத்ரு எனும் ஓர் இரவானது, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்" என்று கூறுகின்றான்.(அல்குர்ஆன் 97 :3)


அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மைகளினைப் பெற்றுத் தரவல்லது என்பதை நினைத்துப் பார்க்கும்போதே நமக்கு அல்லாஹ்வின் இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் நிச்சயம் நமக்கு வரும்.


ஆனால், நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம் நாடியுள்ளோமா? அதற்காக முறையாக நபி(ஸல்) வழியில் முயன்றுள்ளோமா? என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


நபி(ஸல்)அவர்கள் எந்த நாட்களில் 'லைலத்துல் கத்ரு' இரவைத் தேடிக்கொண்டார்கள்?


லைலத்துல் கத்ரு இரவு கடைசி பத்து நாட்களில் உள்ளது. அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்தி மூன்றாவது இரவிலோ உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்: புகாரி


லைலத்துல் கத்ரு பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்)அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்)அவர்கள், "லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே அதை இருபத்தொன்பதாம் இரவிலும் இருபத்தேழாம் இரவிலும் இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்" எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி); நூல்:புகாரி,முஸ்லிம்


சில நபித்தோழர்கள் லைலத்துல் கத்ரு, கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக கனவு கண்டு நபி(ஸல்)அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் கனவைப்போல் நானும் கண்டேன். எவர் (லைலத்துல் கத்ரு)இரவை அடைய முயற்சிக்கின்றாரோ, அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி); நூல்:புகாரி


மேலேயுள்ள‌ ஹதீஸ்கள் அனைத்தும் பொதுவாக லைலத்துல் கத்ரு கடைசிப் பத்து இரவுகளில் இருப்பதாக அறிவிக்கின்றன.


"எனக்கு லைலத்துல் கத்ரு இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்!"
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி); நூல்கள்:புகாரி,முஸ்லிம்'லைலத்துல் கத்ரு இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்'.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி); நூல்:புகாரி


இந்த ஹதீஸ்களிலிருந்து லைலத்துல் கத்ரு இரவு கடைசிப் பத்து இரவுகளில், குறிப்பாக ஒற்றைப்படையான ஐந்து இரவுகளில் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.


லைலத்துல் கத்ரும் இருபத்து ஏழாம் கிழமை இரவும்..!


இவ்வாறு மேலே கண்ட ஹதீஸ்களில் நபி(ஸல்)அவர்கள் தெளிவாக அறிவித்த செய்திகள் இருக்க, லைலத்துல் கத்ரு இரவு ரமலான் மாதத்தின் 27 ஆம் இரவில்தான் என பெரும்பான்மையான இஸ்லாமிய‌ மக்கள் தவறாக விளங்கி வைத்துள்ளனர். இவ்வாறு தவறாக விளங்கி வைத்திருப்பதால், ரமலான் மாதத்தின் 27ஆம் இரவில் மட்டும் பள்ளிகளில் மக்கள் நிரம்பி வழிவதைக் காண்கிறோம். அதுவரைக் கண்டிராத கூட்டம் பள்ளியில் அலைமோதும். அன்றைய இரவில் பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டும், பண்டங்கள், பதார்த்தங்கள், நேர்ச்சைப் பொட்டலங்கள், பழங்கள் என்று குவித்து வைத்து, அந்த ஓரிரவை மட்டும் விசேஷமாக சிறப்பிக்கும் அமல்களில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.


இப்படி அமர்க்களப்படுத்தி, அந்த 27 ஆம் இரவில் மட்டும் தொழுதுவிட்டு மற்ற ஒன்பது இரவுகளையும் வீணாக‌ விட்டுவிடுவது சரியான‌ முறைதானா? அந்த லைலத்துல் கத்ரு இரவு எப்போது கிடைக்கும், எப்படி முயன்றால் கிடைக்கும் என்பதை நம் மக்கள் அறிந்திருந்தால், கடைசிப் பத்தின் எல்லா நாட்களிலும் கண்விழித்து இறைமன்னிப்பைத் தேடுவதை விட்டுவிட்டு, இப்படி ஒரே நாளில் கொண்டாடிவிட்டு, மற்ற நாட்களில் வீட்டில் குறட்டை விட மனம் இடம் கொடுக்குமா?


இந்த நிலை சரியானதுதானா என்பதை நாம் ஆய்வு செய்தோமானால், நபி(ஸல்)அவர்கள் இப்படி ரமலான் 27 எனும் ஒரே இரவை சிறப்பிக்குமாறு கூறாததாலும், அவர்கள் வாழ்க்கையில் இது 21, 23, 25, 27, 29 போன்ற வெவ்வேறு ஒற்றைப்படை இரவுகளில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும் 27 ஆவது இரவை மட்டுமே சிறப்பிப்பது நபிவழிக்கு மாற்றமானது என்பதை நாம் விளங்கமுடிகிறது. ஆக‌, முன்னோர்கள் செய்துவந்தார்கள் என்பதற்காக அல்லாமல், இதை நமது மறுமை வாழ்வுக்காக கவனத்தில் கொண்டு நமது அமல்களை நபிவழியில் மாற்றிக்கொண்டால் மட்டுமே மறுமையில் நாம் வெற்றிபெறமுடியும்!


-:லைலத்துல் கத்ரும் அதற்கான‌ ஸ்பெஷல் தொழுகையும்:-


'ரமலானில் நபி(ஸல்) அவர்கள் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டபோது, ரமலானிலும், ரமலான் அல்லாத மாதங்களிலும் நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்(8 3)மேல் தொழுததில்லை என்று விடையளித்தார்கள்.'
அறிவிப்பவர்: அபூஸலமா(ரலி); நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி


மேற்படி ஹதீஸில் கூறப்பட்ட பதினொரு ரக்அத் இரவுத் தொழுகையைத்தான் நபி(ஸல்)அவர்கள் - தொழுகையின் நிலை, குர்ஆனை ஓதுதல், ருகூவு, ஸுஜுது போன்றவற்றை தகுந்த முறையில் நீட்டி, ஸஹர் நேரம் தப்பிவிடுமோ என்று கருதும் அளவுக்குத் தொழுதிருக்கின்றார்கள். இவ்வாறானத் தொழுகையைத்தான் நாமும் தொழ வேண்டும்.


அதை விட்டுவிட்டு, மார்க்கத்தில் இல்லாத தஸ்பீஹ் தொழுகை, 'குல்குவல்லாஹு' சூராவை நூறு தடவை ஓதி தொழும் தொழுகை, ராத்திபுகள், குர்ஆன் ஓதி கத்தம் செய்தல், குர்ஆனில் வரும் ஸஜ்தா வசனங்கள் அனைத்தையும் அந்தந்த அத்தியாயத்தோடு ஓதி ஸஜ்தா செய்யாமல் மொத்தமாக 27 ஆம் இரவில் ஓதி ஸஜ்தா செய்வது என நபி(ஸல்)அவர்கள் கற்றுத்தராத வணக்க வழிபாடுகளையெல்லாம் இஸ்லாமியர்களில் பெரும்பாலோர் செய்து வருவது எதன் அடிப்படையில் என்பதற்கு அவர்கள்தான் இறைவனிடத்தில் பதில்சொல்லவேண்டும்.


ஆக, லைலத்துல் கத்ரு இரவுக்கென்று எந்தவொரு பிரத்யேகத் தொழுகையையோ, மேற்கூறப்பட்டவற்றையோ நபி(ஸல்) அவர்கள் காட்டித்தரவில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.இப்போது இந்த லைலத்துல் கத்ரு இரவில் நம்முடைய வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் நபிவழியில் நாம் பார்க்கலாம்:


நபி(ஸல்)அவர்கள் எவ்வாறு 'லைலத்துல் கத்ரு' இரவைத் தேடிக்கொண்டார்கள்?


ரமலானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்)அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை(அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்கள்: புகாரி,முஸ்லிம்


நபி(ஸல்)அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம் காட்டாத அளவு ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்:முஸ்லிம்


எனவே நபி(ஸல்) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல் நாமும் முயலவேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில்'இஃதிகாஃப்' இருந்ததைப் போல் இஃதிகாஃப் இருக்கவேண்டும். நமது வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு முறையேனும் நபிவழியான (ஸுன்னத்தான) இந்த 'இஃதிகாஃப்'இருக்கவேண்டும் என்று உள்ளத்தினால் நாட்டம் கொள்ளவேண்டும். எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து செயல்படும் நாம், இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும் பாவமன்னிப்பு பெரும் விதத்தில் துவா செய்யவும் லைலத்துல் கத்ரு இரவினை முறையாகப் பெற்றிடவும் முனைந்திட வேண்டும்.


ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி அவர்கள்,


اَللَّهُمَّ اِنَّكَ عَفُوٌّ ، تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي (அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபு அன்னீ) என்ற துஆவைக் கூறினார்கள். நூல்கள்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்


பொருள்: இறைவா நீ மன்னிப்பவன்; மன்னிப்பையே விரும்புபவன்; எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!மேற்கண்ட துஆவை நாம் அதிகமதிகம் ஓதி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடவேண்டும். இந்த வருடம் நம்முடைய கடைசி ரமலானாக இருக்கலாம்என்ற உள்ளச்சத்தோடு துஆ செய்வோமேயானால், அதுவே நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்கு போதுமானதாக அமைந்துவிடும், இன்ஷா அல்லாஹ்!


எவர் துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும் லைலத்துல் கத்ரைப் பெற்றுக்கொள்வார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாம் அந்த இரவைப் பெற்ற பாக்கியசாலிகளா, துர்பாக்கியசாலிகளா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக இதை மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும், குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது பொன்னான நேரத்தை இவற்றைவிடவும் அதிகமாக இதர அலுவல்களிலும், பெருநாளின் தேவைகள் என்று துணிமணிகள், அணிகலன்கள், அலங்காரப் பொருட்கள் போன்ற இதர பொருட்களை வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழித்து விடுவதும், அதிலும் தள்ளுபடி விளம்பரங்களுக்காக மாலையில் வெளியேறி கடை கடையாக அலைவதும், இரவில் தாமதமாக அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள், ஃபஜ்ரு தொழுகை, லைலத்துல் கத்ரு எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும் தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது. அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்கவைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றுதான் சொல்லவேண்டும். ஆக, இவற்றைத் தவிர்த்துக் கொள்ளும் விதமாக நமது தேவையானவற்றை கடைசிப் பத்து நாட்களுக்கு முன்னரே தாமதமின்றி வாங்கி தயார் பண்ணிக்கொண்டால், நேர விரயமின்றி கடைசிப் பத்து இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை பெற ஏதுவாக அமையும்.


-:லைலத்துல் கத்ரு இரவினால் கிடைக்கும் இன்னொரு பயன்:-


'யார் லைலத்துல் கத்ரு இரவில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி,முஸ்லிம்


எனவே ரப்புல் ஆலமீன் தரும் ரமலான் பரிசான‌ லைலத்துல் கத்ரு இரவை அடைய‌ ரமலானின் கடைசிப் பத்தில் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்)அவர்களும் அனுமதித்தவைகளை நடைமுறைப்படுத்தியும் அனுமதிக்காதவைகளை தவிர்ந்து நடந்தும், இஸ்லாம் கற்றுத்தந்த வழியில் நம் வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்வோம். அதற்குரிய அறிவையும், ஆற்றலையும், பக்குவத்தையும் தர வல்ல அல்லாஹ்வையே பிரார்த்திப்போம்.


மேலும் இத்தகைய சிறப்புவாய்ந்த லைலத்துல் கத்ருடைய இரவுகளில் நின்று வணங்கியும், குர்ஆனை அதிகமாக‌ ஓதியும், திக்ருகளை மொழிந்தும் நம்முடைய அமல்களை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும். வீணான பேச்சுக்கள், சண்டை சச்சரவுகள் இவற்றை அறவே தவிர்த்துக்கொண்டு இறைவனிடம் அதிகமதிகம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.


சிறப்புமிகு இந்நாட்களின் அமல்களை முறையாக நிறைவேற்ற உதவிடவும், அதன் மூலம் அல்லாஹ்தஆலா நமக்கு பாவமன்னிப்பு அளித்திடவும், நமது பிராத்தனைகளை ஏற்று அருள் புரிந்திடவும், நம் அனைவரையும் நரகில் இருந்து பாதுகாத்திடவும், புனித ரமலானின் அனைத்து நன்மைகளையும் முழுமையாக பெற்றிடும் விதத்தில் அல்லாஹ்வின் ஏற்பிற்குரியதாக நமது அமல்கள் அமைந்திடவும், அதன் மூலம் நமது இம்மை/மறுமை வாழ்க்கை வெற்றி பெற்றிடவும் இந்த புனித ரமலானில் நமக்காகவும் அனைவருக்காகவும் என்றென்றும் பிரார்த்திப்போமாக!


நன்றி : பயணிக்கும் பாதை
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8963
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum