கடைசிப் பத்தும் 'இஃதிகாஃப்' என்ற வணக்கமும்

Go down

கடைசிப் பத்தும் 'இஃதிகாஃப்' என்ற வணக்கமும்

Post by முஸ்லிம் on Mon Aug 22, 2011 9:34 pm

ஒருசில நாட்களுக்கு முன்புதான் ரமலான் பிறையைக் கண்டதுபோல் வெகு விரைவாக ரமலானின் 2 பத்துகளும் கடந்துவிட்டன. 20 நாட்களின் நோன்புக‌ளையும் வழக்கம்போல் சிறப்பாகவும், சந்தோஷமானதாகவும், உற்சாகம் மிக்கதாகவும் ஆக்கித்தந்த வல்ல நாயன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! இந்த ரமலானிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்த (மீதியுள்ள 10 நாட்களான) கடைசிப் பத்து நாட்களையும் அதன் மகத்துவமிக்க இரவுகளையும் மேலும் அதிகமதிகமான நல்ல அமல்களோடு சிறப்பித்து, நன்மைகளை வாரிக் கொள்வதற்கு அல்லாஹுதஆலா நம்மனைவருக்கும் உதவி செய்தருள்வானாக!

கடைசிப் பத்து நாட்களின் சிறப்பையும் மகத்துவத்தையும் அறிய "ரப்புல் ஆலமீன் தரும் ரமலான் பரிசு" என்ற இடுகையைப் பார்க்கவும். இப்போது இந்த கடைசிப் பத்தில் செய்யவேண்டிய இன்னொரு சிறப்பு வணக்கமான "இஃதிகாப்"பற்றிப் பார்ப்போம்.


"இஃதிகாஃப்" என்ற பொதுவான அரபி சொல்லுக்கு "தங்குவது" என்று சொல்லப்படும். மார்க்க அடிப்படையில் நாம் சொல்வதானால், அல்லாஹ்வுக்காக சில நாட்களை ஒதுக்கி, பள்ளிவாசலில் சென்று தங்கி, இறைவனிடம் நன்மைகளை எதிர்ப்பார்த்த நிலையில் இயன்றவரை அதிகமாக வணக்கங்கள் புரிவதை "இஃதிகாஃப்" என்கிறோம்.


"இஃதிகாஃப்" இருப்பது கட்டாயமா?

இதில் இரண்டு வகை உள்ளது. முதல் வகை,

நன்மையை எதிர்ப்பார்த்து ரமலானில் கடைசி பத்திலோ அல்லது மற்ற மாதங்களின் சில‌ நாட்களிலோ பள்ளியில் தங்குவது நபிவழியாகும். இதற்கு பல ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

(அவற்றில் சில: புஹாரி 2029, 2035, 2033)

இது சிறப்பு வாய்ந்த ஒரு வணக்கமாக இருந்தாலும் கட்டாயக் கடமை அல்ல.

இரண்டாவது வகை,

தன்னுடைய‌ தேவை நிறைவேறவேண்டும் என்பதற்காக தொழுகை, நோன்பு, தர்மங்கள் என அனுமதிக்கப்பட்ட வணக்கங்களை நேர்ச்சை செய்துக் கொள்வதுபோல், பள்ளியில் குறிப்பிட்ட நாள் தங்கி (இஃதிகாஃப்) இருப்பதாக நேர்ச்சை செய்வது. இந்த வகை இஃதிகாஃப் நேர்ச்சை செய்தவர் மீதுநிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையாகிவிடுகிறது.

இப்னு உமர்(ரலி­) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'அல்லாஹ்வின் தூதரே! மஸ்ஜிதுல் ஹரமில் ஒரு இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக்காலத்தில் நான் நேர்சை செய்திருந்தேன்' என்று உமர்(ர­லி) அவர்கள் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றும்!' என்றார்கள். (பிறகு) உமர்(ரலி­) ஒரு இரவு இஃதிகாஃப் இருந்தார்கள்.

நூல்: புஹாரி (2042)

ரமலானில் இஃதிகாஃப் இருப்பதின் நோக்கம்

ரமலானில் இருக்கக்கூடிய 'இஃதிகாஃப்' என்பது நபி(ஸல்) அவர்களின் சிறப்பான‌ வழிகாட்டல்களில் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும், ரமலான் அல்லாத மற்ற நாட்களிலும் நடைமுறைப் படுத்திக்காட்டிய 'இஃதிகாஃப்' எனும் இந்த இறைவழிபாடு நம் மக்களிடையே அதிகமாக நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. ஏனெனில் பெரும்பாலான மக்கள் இதுபற்றிய சிறப்புகளை அறியாமல் இருப்பதால், அதன் மீதுள்ள ஆர்வக் குறைவினால் மிக சொற்பமான மக்கள் மட்டுமே இந்த 'இஃதிகாஃப்' என்ற வணக்கத்தை மேற்கொள்கிறார்கள்.

ஆனால் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் நாம் தேடவேண்டிய, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவான‌ 'லைத்துல் கத்ர்' இரவை அடைய வேண்டும் என்பதற்காக இஃதிகாஃப் இருப்போமானால், உலகின் மற்ற தேவைகளிலும் அன்றாட ஈடுபாடுகளிலும் வழக்கம்போல் முக்கியத்துவம் கொடுத்து நாம் செய்யவேண்டிய வணக்கங்களைக் குறைத்து விடாமல் இருக்கவும், அந்த நாட்களில் அதிகமதிகமாக‌ நன்மைகளைச் செய்வதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அது அமைந்துவிடுகிறது. இந்த நோக்கத்திற்காகதான் நபி(ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். ஆதாரம்: புஹாரி (813)

நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். "ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!" எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); நூல்: புஹாரி (2020)

"நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!"

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); நூல்: புஹாரி (2026)

நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். அவர்கள் மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஆதாரம்: புஹாரி

இஃதிகாஃப் இருப்பதின் ஆரம்ப நேர‌ம்

இஃதிகாஃப் இருப்பவர்கள் பெரும்பாலும் 21 வது இரவின் மக்ரிப் தொழுகைக்கு முன் ஆரம்பிக்கின்றனர். ஆனால் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளும்படி நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க: புஹாரி 2027). மேலும் ஃபஜ்ரு தொழுதவுடன் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தியும் உள்ளது.

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் ஃபஜ்ரு தொழுகையை முடித்துவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள்.

நூல்: முஸ்லிம் (2007)

அப்படியானால் ஃபஜ்ரு தொழுதவுடன் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள் என்றால், அது 21 ஆம் நாள் ஃபஜ்ராக இருக்க முடியாது. ஏனெனில் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடும் வாய்ப்பில் அந்த 21 ஆம் இரவு தவறிவிடும் வாய்ப்புள்ளதால், 20 ஆம் நாள் ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகுதான் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃபை துவங்கி இருப்பார்கள் என்று நாம் விளங்குவதே பேணுதலாகவும், இரண்டு ஹதீஸ்களுக்கும் பொருத்தமாகவும் இருக்கும். ஆக, ரமலானில் இஃதிகாஃப் இருக்க விரும்புபவர்கள் 20 ஆம் நாள் காலை ஃபஜ்ரு தொழுகையை முடித்துவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்றுவிட வேண்டும்.

இஃதிகாஃபின் முடிவு நேரம்

அபூஸயீத்(ரலி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் நாள் முடிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
நூல்: புஹாரி (2018)

நபி(ஸல்) அவர்கள் நடுப்பத்தில் இஃதிகாஃப் இருக்கும்போது இருபதாம் நாள் முடிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தங்கள் வீட்டிற்கு செல்வார்கள் என்ற ஹதீஸிலிருந்து கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருப்பவர்கள் 29 ஆம் நாள் முடிந்து அல்லது 30 ஆம் நாள் முடிந்து மாலையாகி, ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்ற வழிமுறை நமக்கு கிடைக்கிறது.

ஆக இஃதிகாஃப் இருப்பவர்கள், ரமலான் மாதத்தின் பிறை 29 ல் அந்த மாதம் முடிந்து ஷவ்வால் பிறை தென்பட்டாலோ அல்லது ரமலான் பிறை 30 ஆக பூர்த்தியடைந்த பிறகோ அன்றைய மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இஃதிகாஃபை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிவிட‌லாம். ஆனால் பெருநாள் தொழுகையை முடித்து விட்டுதான் வீடு திரும்பவேண்டும் என்று சிலர் கூறுவதற்கு நபிமொழிகளில் ஆதாரங்கள் எதுவுமில்லை.

பெண்களும் இஃதிகாப் இருக்கலாமா?

பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்கு பின்வரும் செய்திகள் ஆதாரமாக உள்ளன.

"நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!"

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); நூல்: புஹாரி (2026)

மேலும் ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். 'சுப்ஹு' தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விடுவார்கள். அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள். அங்கே நான் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா(ரலி) ஒரு கூடாரத்தை அமைத்தார்கள். ஸைனப்(ரலி) அவர்களும் இதனைக் கேள்விப்பட்டு மற்றொரு கூடாரத்தை அமைத்துக் கொண்டார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பிய போது நான்கு கூடாரங்களைக் கண்டு, "இவை என்ன?" என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், "இவ்வாறு செய்வதற்கு நற்செயல் புரியும் எண்ணம்தான் இவர்களைத் தூண்டியதா? இவர்கள் நன்மையைத்தான் நாடுகிறார்களா? இவற்றை நான் காண முடியாதவாறு அகற்றுங்கள்!" என்று சொன்னவுடன் அவை அகற்றப்பட்டன. (பிறகு) நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் (அந்த வருடம்) ரமலானில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வால் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.

நூல் : புஹாரி (2041)

முதலில் ஆயிஷா(ரலி) இஃதிகாஃப் இருப்பதற்கு அனுமதி கோரியபோது நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்குகிறார்கள். ஆனால் பள்ளியில் நெருக்கடி ஏற்படும் அளவுக்கு கூடாரங்களை அவர்கள் அமைத்துக் கொண்டதைத்தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள். இதிலிருந்து பெண்கள் இஃதிகாஃப் இருப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை என்பதை அறிய முடிகின்றது. மேலும் நபி(ஸல்) அவர்கள் தனது மனைவி ஒருவருடன் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களின் மனைவியரில் ஒருவரும் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புஹாரி (309)

பெண்கள் தங்கள் வீட்டிலேயே இஃதிகாஃப் இருக்கலாமா?

பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருக்கலாம் என்று சிலர் கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் கிடையாது. எனவே பெண்களும் இஃதிகாஃப் என்ற இந்த வணக்கத்தைப் பள்ளிவாசலில்தான் நிறைவேற்றவேண்டும். அதேசமயம் அந்நிய ஆணுடன் எந்த ஒரு பெண்ணும் தனித்து இருக்கக்கூடாது என்பதால், இதைத் தவிர்ப்பதற்காக‌ இஃதிகாஃப் இருக்கும் பெண்ணுக்குத் துணையாக இன்னொரு பெண்ணோ, பல பெண்கள் சேர்ந்தோ அல்லது அவர்களுக்கு மஹ்ரமான ஆணோ அவர்களுடன் இஃதிகாஃப் இருப்பதுதான் நல்ல‌து.பள்ளிவாசல்களில் பெண்கள் இஃதிகாஃப் இருப்பதற்கான‌ வசதிகள் செய்யப்பட்டிருக்குமானால் கணவனின் துணையுடன் அவர்கள் இஃதிகாஃப் இருக்கலாம். ஏனெனில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களுடன்தான் அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். மேலும் பல குடும்பங்களின் ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து இஃதிகாஃப் இருக்கும்போது, பெண்கள் பகுதிக்கென‌ தனியாக திரை மறைவுடன் கூடிய வசதிகளை செய்துக் கொள்ளவேண்டும்.

இஃதிகாஃபில் கடைபிடிக்க‌ வேண்டிய ஒழுங்குமுறைகள்


இஃதிகாப் இருப்பவருக்கு தடுக்கப்பட்டவையும் அனுமதிக்கப்பட்டவையும்:

1. இஃதிகாஃப் இருக்கும்போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது.

"பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்". (அல்குர்ஆன் 2:187)

2. தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது

ஆயிஷா(ரலி­) அவர்கள் கூறினார்கள்:

நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது தமது தலையை வீட்டி­லிருக்கும் என் பக்கம் (வாருவதற்காக) நீட்டுவார்கள்; நான் வாருவேன். இஃதிகாஃப் இருக்கும்போது தேவைப்பட்டாலே தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள். நூல்: புஹாரி (2029)

இதிலிருந்து தேவையில்லாமல் வெளியில் செல்லக்கூடாது என்பதையும்அவசியத் தேவை ஏற்பட்டால் மட்டுமே வெளியே சென்று வர‌லாம் என்பதையும் அறியலாம்.

இஃதிகாஃப் இருப்பவர்களை சந்திப்பதும் பேசுவதும்:

இஃதிகாஃப் இருக்கும்போது (சிலர் நினைப்பதுபோல்) வெளியிலிருந்து வரக்கூடிய மற்றவர்களிடம் பேசுவது கூடாது என்பது தவறானதாகும். தேவையில்லாத/பொழுதுபோக்கான பேச்சுகளைத் தவிர்ந்துக் கொள்ளலாமே தவிர அவசியம் ஏற்படும்போது பேசிக்கொள்வதில் எந்த தவறுமில்லை. மேலும் இஸ்லாம் ஒருபோதும் மௌன விரதத்தை அனுமதித்ததில்லை.

ஸபிய்யா(ரலி­) அவர்கள் கூறினார்கள்

நபி(ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருக்கும் போது அவர்களிடம் நான் சென்று, சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன் (ஹதீஸின் சுருக்கம்

நூல்: புஹாரி (2035)

இதிலிருந்து அவசியத்தேவை ஏற்பட்டால் மற்றவ‌ர்களுடன் பேசலாம் என்பதையும் இஃதிகாஃப் உள்ளவர்களை சந்திக்கச் செல்வதற்கு மற்றவர்களுக்கு தடையில்லை என்பதையும் நாம் விளங்க முடிகிறது.

இஃதிகாஃப் இருப்பது ரமலானில் மட்டும்தானா?

இந்த வணக்கத்தை ரமலான் மாதத்தில் மட்டும்தான் நிறைவேற்றவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. ரமலான் அல்லாத மற்ற நாட்களிலும் இஃதிகாஃப் இருக்கலாம். நபி(ஸல்) அவ‌ர்கள் ஷவ்வால் மாதத்திலும் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.

("பெண்களும் இஃதிகாப் இருக்கலாமா?" என்ற மேலுள்ள தலைப்பில், ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் புகாரியின் 2041 வது ஹதீஸின் கடைசி வரிகளை மீண்டும் பார்க்கவும்)

மேலும் உமர்(ரலி) அவர்கள் ஒரு இரவு மட்டும் இஃதிகாஃப் இருப்பதாக (கால நேரம் குறிப்பிடாமல் பொதுவாக) நேர்ச்சை செய்தார்கள். அவர்கள் அதுபற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது, அதை நிறைவேற்றுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

"மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்" என்று உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "உமது நேர்ச்சையை நிறைவேற்றும்" என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி); நூல் : புஹாரி (2032)

ஆக‌வே இஃதிகாஃப் என்ற வணக்கத்தை செய்ய விரும்புபவர்கள், ரமலான் அல்லாத காலங்களிலும் அதை நிறைவேற்றலாம்.

நாம் கவனிக்கவேண்டிய இன்னும் சில விஷயங்கள்:

1. அல்லாஹுதஆலா தனது திருமறையில்,

"நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்" (அல்குர்ஆன் 5:2)

என்று கூறுவதற்கேற்ப, இஃதிகாஃப் இருக்கக்கூடியவர்களுக்கு தேவையான உதவிகளை மற்றவர்கள் செய்துக் கொடுத்தும் நன்மைகளை நாம் தேடிக் கொள்ளலாம். ஏனெனில் தன் குடும்பங்களை விட்டுவிட்டு இஃதிகாஃப் செல்லக்கூடியவர்களுக்கு நிச்சயம் நிறைய உதவிகள் தேவைப்படும்.

2. ஆண்கள் இஃதிகாஃப் செல்லும்போது தன் குடும்பத்தை கவனிக்கவேண்டிய அந்த 10 நாட்களுக்குரிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து வைத்துவிட்டு, அதாவது தன் மனைவி, மக்களுக்குரிய கடமைகளும், தான் செய்யும் பணியோ அல்லது தொழிலோ நஷ்டமடையும் அளவுக்கு பாதிக்காத வகையிலான முன்னேற்பாடுகளை செய்துவிட்டு செல்லவேண்டும். அதுபோல் பெண்களும் தன்னுடைய குழந்தைகளும் குடும்பப் பொறுப்புகளும் பாதிக்காத வகையில் யாராவது அவர்களுக்கு உதவி செய்யும்பட்சத்தில்/அதற்கான ஏற்பாடுகள் செய்துக்கொண்ட நிலையில் செல்வதே நல்லது. ஏனெனில்,

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே! உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார்; அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான்; அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள்; அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான்; அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்

ஆதாரம்: புகாரி (2554)

எனவே யாருக்கெல்லாம் இத்தகைய முன்னேற்பாடுகளோடு கூடிய இஃதிகாஃப் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறதோ, அவர்கள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வோம். சிறப்புமிக்க நபிவழியான இந்த வணக்கம் மறக்கடிக்க‌ட்டு விடாமல் இருப்பதற்காக‌ இயன்றவரை நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்நாளில் அதற்காக முயன்று, அதை நிறைவேற்றி, மறுமையில் அளப்பரிய நன்மைகளைப் பெற்றிட வல்ல நாய‌ன் அருள் புரிவானாக!


நன்றி : பயணிக்கும் பாதை
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8972
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum