பாழாக்கப்படும் ஃபஜ்ர் தொழுகை

Go down

பாழாக்கப்படும் ஃபஜ்ர் தொழுகை

Post by முஸ்லிம் on Wed Nov 24, 2010 4:54 pm

தொழுகை என்பது இஸ்லாத்தின் தூண் என்று போற்றப்படும் ஒரு சிறப்புமிக்க வணக்கம் என்பதை அனைத்து இஸ்லாமியர்களும் அறிந்து வைத்திருக்கின்றார்கள். இதையும் தாண்டி தொழுகை, இறைவனுக்கு மிகவும் விருப்பமானதாகும். இறைவனிடத்தில் மிக நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.


மறுமை நாளில் முதன் முதலாய் இறைவன் நம்மிடம் விசாரிப்பது இந்த தொழுகையைப் பற்றிதான். இதற்கான பதில் சரியாய் அமைந்து விடுமாயின் பின்னுள்ள அனைத்து கேள்விகளுக்கும் திருப்திகரமான பதிலை கொடுத்து வெற்றிக்கனியை எட்டிப்பறித்து விடுவோம். மாறாக, தொழுகையின் கேள்விக்கு சரியான பதில் நம்மிடத்தில் இல்லை என்றால் நாம் தோல்வியை தழுவுவது சர்வநிச்சயம். இவ்வாறு தொழுகையின் அவசியத்தை நபி(ஸல்) அவர்கள் நமக்கு பல்வேறு சந்தர்ப்பத்தில் விளக்கியுள்ளார்கள்.


என்னதான் தொழுகையைப்பற்றி பல சமயங்களில் கேள்விப்பட்டாலும் நாம் தொழுகையில் போதிய அக்கறை இல்லாதவர்களாக இருக்கின்றோம். இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான தொழுகை நம்மிடத்தில் பெரிதும் ஆட்டம் காணக்கூடியதாகவே இருக்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் தனது மரணத்தருவாயில் கூட இந்த தொழுகையை பற்றி நினைவூட்ட தவறவில்லை என்ற செய்தியை குறிப்பிட்டாலும் அதனால் என்ன? என்பது போல் தொழுகை விஷயத்தில் மிகவும் அலட்சியமாக நமது செயல்பாடு அமைந்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக நம்மில் ஏராளமானோர் ஃபஜ்ர் தொழுகையை சர்வ சாதரணமாய் தவறவிட்டு விடுகிறோம். அதை பெரிதாய் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. இன்னும் பலர் சுப்;ஹ் தொழுகையை விடுவதை அன்றாட வழக்கமாக ஆக்கி கொள்கின்றனர். ஏனைய தொழுகைகளை தவறாமல தொழுவார்கள். ஆனால் சுப்ஹ் தொழுகையை தவறியும் தொழ மாட்டார்கள்.
சுப்ஹ் தொழுகையும் மறுமை பரிசுகளும்


ஒன்றின் உண்மையான மதிப்பை உணர்ந்தால் தான் அதை சரியான முறையில் பேணும் பழக்கம் நம்மிடத்தில் தழையோடும். இது போலத்தான் சுப்ஹ் தொழுகையை சரிவர பேணாமல் இருப்பதோடு, அதைப்பற்றி சற்றும் கண்டு கொள்ளாமல் இருப்பது அதன் மதிப்பை நாம் சரிவர உணரவில்லை என்பதே காரணமாகும்.'இஷாத்தொழுகையிலும், ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது வந்து விடுவார்கள்'.  (அபூஹூரைரா(ரலி) புகாரி 615
மலக்குமார்களின் நற்சான்று


'இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக உங்களிடையே வருகின்றனர். ஃபஜ்ர் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் ஒன்று கூடுகின்றார்கள். பிறகு, உங்களிடையே இரவு தங்கிவர்கள் மேலேறி செல்கின்றனர். அப்போது மக்களைப்பற்றி மிகவும் அறிந்தவனான அல்லாஹ் அவர்(வானவர்)களிடம் (பூமியில் உள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்? என்ற கேட்பதற்க்கு அவர்கள், அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டு வந்தோம்: அவர்கள் தொழுதுக் கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம் என்பார்கள்' (அபூஹூரைரா(ரலி) புகாரி 555


இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் சுப்ஹ் தொழுகையை நாம் பங்கெடுத்தவர்களாக இருந்தால் அம்மலக்குமார்கள் நம்மை பற்றி இறைவனிடம் சொல்லும்போது உன்னுடைய அடியார்களை உன்னை தொழுத நிலையில் அவர்களிடம் சென்றோம். தொழுத நிலையிலேயே அவர்களை விட்டு பிரிந்து வந்தோம் என்பதாக நற்சான்று கொடுப்பார்களாம்.  இந்த புனிதமிக்க சபையில் நாம் பங்கெடுக்காதவர்களாக இருந்தால் இந்த  கண்ணியமிக்க மலக்குமார்களின் நற்சான்றை இழந்த கைசேதவான்களாக ஆகி விடுவோம். மேலும் நாம் சுப்ஹ் தொழுகைகளை நிறைவேற்றினால், நாம் கற்பனை செய்திடாத பல மகத்தான பரிசுகளை உள்ளடக்கியிருக்கும் சொர்க்கத்தையே பரிசாக தருகிறான். 


அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:


'பகலின் இரு ஓரங்களிலுள்ள (ஃபஜ்ர் அஸர் ஆகிய) இரு நேரத் தொழுகைகளை யார் தொழுகின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்'.   அபூமூசா (ரலி) புகாரி 574இப்படிப்பட்ட பாக்கியத்தை நாம் இனியும் இழக்கலாமா? சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற நம்முடைய தீராத ஆசையை இந்த சுப்ஹ் தொழுகையின் மூலம் நிறைவேற்ற முடியும் என்பதை அறிந்த பிறகும் இதை கோட்டை விடலாமா? சுப்ஹ் தொழுகையின் மூலம் இறைவன் தரும் பரிசை நாம் பெற்று விடக்கூடாது என்பதற்காகவே ஷைத்தான் இந்த தொழுகையில் பார்த்து நமக்கு வேட்டு வைக்கிறான்.  ஷைத்தானின் சதிவலையை அறுத்தெறிந்தால் மட்டுமே சொர்க்கத்தின் கதவை திறக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சொர்க்கத்திற்கான முன்பதிவு டிக்கெட்டை சுப்ஹ் தொழுகையின் மூலம் பெற்றிடுங்கள்.
இறைபொறுப்பில் சுப்ஹ் தொழுத அடியார்


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:   'சுப்ஹ் தொழுகையைத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து அவன் உங்களிடம் விசாரனை செய்(யும் நிலையை நீங்கள் ஏற்படுத்)திட வேண்டாம். ஏனெனில் அவன் தன் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து ஒருவரிடம் விசாரிக்கத் தொடங்கினால் அதைக் கண்டுபிடித்தே தீருவான். பின்னர்(வரம்பு மீறி நடந்துக் கொண்ட) அவனை நரக நெருப்பில் முகங் குப்புற தள்ளிவிடுவான்'(முஸ்லிம் 1164)


நம்மை படைத்த இறைவனே நமக்கு பொறுப்பாளியாக மாறும் பெரும்பாக்கியம் இந்த சுப்ஹ் தொழுகையில் இருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும்போது உண்மையில் மெய்சிலிர்த்து போகின்றோம். எனவே, நம்மை இறைவன் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள விரும்புவர்கள் சுப்ஹ் தொழுகையை பேணி தொழுபவர்களாக மாற வேண்டும். மேலும், 'உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலுக்கு வந்து தனியாக அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் சென்று நானும் அமர்ந்தேன். அப்போது அவர்கள், என் சகோதரரின் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், பாதி இரவு வரை நின்று வணங்கியவரைப் போன்றவராவார். சுப்ஹ் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், இரவு முழுவதும் நின்று வணங்கியவரை போன்றவர் ஆவார்' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். (முஸ்லிம் : 1162)


ஜமாஅத்துடன் சுப்ஹ் தொழுகையை நிறைவேற்றினால் முழு இரவும் நின்று வணங்கிய நன்மையை இறைவன் வாரி வழங்குகின்றான். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நாம் ஒரு காலத்திலும் செய்ய முடியாத நன்மையை இறைவன் இந்த சுப்ஹ் தொழுவதின் மூலமே தந்து விடுகின்றான் எனும்போது சுப்ஹ் தொழுகையின் மகத்துவம் இப்போது புரிகிறதல்லவா?


நன்மையை அதிகமதிகம் கொள்ளையடிக்க விரும்பினால் முழு இரவும் நின்று வணங்கிய நன்மையை பெற வேண்டும் என்று ஆசை கொண்டால் சுப்ஹ் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதாலே போதுமானது. இதையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சர்வசாதாரணமாய் இந்த தொழுகையை புறக்கணித்தால் இந்த தொழுகையை நிறைவேற்ற இனியும் முன்வரவில்லை என்றால் நம்மை விட துர்பாக்கியவான்கள் வேறு யாருமில்லை. 

ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் உற்சாக நன்மையும்


அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் ஒருவர் உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளை பொட்டு விடுகின்றான். ஒவ்வொரு முடிச்சின்போதும், இன்னும் உனக்கு நீண்ட இரவு இருக்கிறது. ஆகவே நீ உறங்கு! என்று கூறி விடுகிறான். நிங்கள் கண் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் உளு செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்து விடுகின்றன. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக் குழப்பத்துடனும், சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள்' (அபூஹூரைரா(ரலி) புகாரி 1142


இறைவனை நினைவு கூர்ந்து உளு செய்து சுப்ஹ் தொழுது விட்டால் சுறுசுறுப்பு கிடைப்பதோடு ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்பும் கிடைத்து விடுகின்றது. அதே நேரம் சுப்;ஹ் தொழாமல் உறங்கி விட்டால் சோம்பலுடனே எழுவதாக நபி (ஸல்) கூறுகின்றார்கள். இந்த சுப்ஹ் தொழுகை நமக்கு பல நன்மைகளை பெரிதும் பெற்றுத் தருவதோடு உற்சாகத்தையும் பெற்று தரும் என்று கேட்டாலே நம்மையும் அறியாமல் நம்மிடையே உற்சாகம் தொற்றிக் கொள்ளத்தான் செய்கிறதல்லவா?


நபித்தோழியர்களின் பங்கெடுப்பு


'நம்பிக்கையுள்ள பெண்கள் தங்களை கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் கலந்துக் கொள்வார்கள். தொழுகையை முடித்துக் கொண்டு தங்கள் இல்லங்களுக்கு திரும்பிச் செல்வார்கள். இருட்டின் காரணமாக அவர்களை யாரும் அறிந்துக் கொள்ள முடியாது. (ஆயிஷா(ரலி) புகாரி 578


உமர்(ரலீ) அவர்களின் மனைவியரில் (ஆத்திகா எனும்) ஒருவர் சுப்ஹ், இஷா ஆகியத் தொழுகையைப் பள்ளியில் தொழச் செல்வார். அவரிடம், (உங்கள் கணவர்) உமர்(ரலி) அவர்கள் இதை வெறுக்கிறார்கள்: ரோஷப்படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்திருந்தும் நீங்கள் ஏன் (பள்ளிக்கு) செல்கிறீர்கள்? என்று  கேட்கப்பட்டது. அதற்கு அவர், (என்னைப் பள்ளிக்குச் செல்ல விடாமல்) அவரை எது தடுக்கிறது? என்ற கேட்க, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை தடுக்காதீர்கள் என்ற கூறியதே உமர்(ரலி) அவர்களை தடுக்கிறது என்று பதில் வந்தது. (இப்னு உமர்(ரலி) புகாரி 900


சுப்ஹ் தொழுவதின் மூலம் அபரிமிதமான நன்மைகளை பெற்றுவிட முடியும் என்று அறிந்து, அதை அடைந்தே தீர வேண்டும் என்பதற்காக இந்த நபித்தோழியர்கள் பங்கெடுத்துள்ளார்கள். பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே தொழலாம் என்றாலும் மற்ற தொழுகைகளை தொழுகிறார்களா? என்பதே கேள்விக்குறி எனும் போது சுப்ஹ் தொழுகையை பற்றி விளக்கி கூற வேண்டிய அவசியமில்லை. வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் காரணம் காட்டுவதை விடுத்து, எவ்வாறு அந்த நபித்தோழியர்கள் இந்த சுப்ஹ் தொழுகையில் பங்கெடுக்க ஆர்வம் செலுத்தினார்களோ அதுபோல இன்றைய பெண்களும் சரி ஆண்களும் சரி பெரிதும் கவனம் செலுத்திட வேண்டும்

சுப்ஹ் தொழாதவருக்குரிய தண்டனை


சுப்ஹ் தொழுகையை நிறைவேற்றினால் நாம் இது வரையிலும் எண்ணிப்பார்த்திராத பெருவாரியான வெகுமதிகள் கிடைக்கும் என்பதை நபிகளாரின் பொன்மொழிகளிலிருந்து விளங்கி விட்டோம். இதையெல்லாம் அறிந்த பிறகும் சுப்ஹ் தொழுகையை கோட்டை விடும் பாக்கியவான்கள்? இருக்கத்தான் செய்வார்கள். இவர்களுக்கு சுப்ஹ் தொழுகையின் நன்மைகள் பெரிதாய் தெரியாது. மாறாக, அந்த சொற்ப நேரத்து தூக்கமே பெரும் சுகமாய் இருக்கும். இதற்கிடையில் அந்த தூக்கத்தின் சிற்றின்பத்தை அனுபவிக்க நமக்கும் அழைப்பு விடுப்பார்கள். இவ்வாறாக சுப்ஹ் தொழுகையை பாழாக்கியவர்களின் மறுமை நிலையை நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கின்றார்கள்.


நபி(ஸல்) அவர்கள் தாம் கனவில் கண்ட கல்லால் தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றி குறிப்பிடுகையில், அவர் குர்ஆனைக் கற்று அ(தன் செயல்படுவ)தை விட்டு விட்டவர். கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர் என்று கூறினார்கள். (சமூரா பின் ஜூன்துப் (ரலி) புகாரி 1143
லேசான தலைவலி ஏற்பட்டாலே நம்மால் தாங்க இயலவில்லை. பெரும் பாறையினால் நமது தலை நசுக்கப்படுவதை எப்படி தாங்க முடியும். இந்த கடுமையான தண்டனையிலிருந்து நம்மை காத்துக் கொள்ள சுப்ஹ் தொழுகையை பேணி கொள்வோம். இத்தனை வெகுமதிகளை உள்ளடக்கியுள்ள இந்த தொழுகைக்காக அற்ப தூக்கத்தை கலைப்போமாக!

நன்றி : சத்தியப்பாதை


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8908
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Re: பாழாக்கப்படும் ஃபஜ்ர் தொழுகை

Post by srivai.khader on Sun Nov 20, 2011 1:20 pm

பஃஐர் தொலுகையின் சிறப்பை பற்றி நாம் இன்னும் தெளிவாகா மற்றும் அதற்க்குண்டான
நன்மை பற்றி விரிவாக தெரிந்து கொண்டோம்
அல்லாஹ் சிறப்பாக்கிதர போதுமானவன் .

-ஸ்ரீவை.காதர்-


மு.அ.காதர்.
avatar
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2846
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum