தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தேசபக்த வேடம் கலைய வேண்டுமா?

Go down

 தேசபக்த வேடம் கலைய வேண்டுமா?  Empty தேசபக்த வேடம் கலைய வேண்டுமா?

Post by முஸ்லிம் Sun Jan 23, 2011 5:03 pm




தேசபக்தி என்பது தங்களுக்கு மட்டுமே சொந்தமானது எனப் பம்மாத்துப் பண்ணிக்கொண்டிருப்பவை இந்துத்துவா பேசும் சங்பரிவார் அங்கங்கள்.  தேசம் என்பது வெறும் எல்லைகளுக்குள் அடங்கிய நிலப்பரப்போ தொழிற்சாலைகளோ விளை நிலங்களோ அல்ல; மாறாக மக்களும் அவர்களது நாகரீகமும் பண்பாடும் நிறைந்த விழுமியங்களே என நம் தளத்தின் முதல் அலசலில்  சொல்லியிருந்தேன். அந்த விழுமியங்களை விலைபேசிவிட்டு இன்னும் நாங்களே தேசபக்திக்குச் சொந்தக்காரர்கள்; இந்நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், கம்யூனிஸ்ட்கள், நாத்திகர்கள் எல்லோரும் அந்நியநாட்டு விசுவாசிகள் எனச் சங்பரிவார் சொல்வது இனியும் செல்லுபடியாகாது.






ஒரு நாட்டில் அமைதியும் ஒருமைப்பாடும் நிலவும்போதுதான் அந்நாடு மற்றவர்களால் மதிக்கப்படும். எட்டு மதங்களும் எண்ணத்தொலையா ஜாதிகளும் அவற்றின் உட்பிரிவுகளும் நூற்றுக்கணக்கான மொழிகளும் அவற்றைவிட அதிகமான கட்சிகளும் இருந்தும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால் இந்தியாவில் வாழும் அனைவரின் தேசபக்தியும் அர்ப்பணிப்பும் உழைப்பும்தாம் காரணங்களே தவிர, வெற்று 'தேசபக்திக் கூச்சல்' போடும் சங்பரிவார் அங்கங்கள் அல்ல. இந்த மாபெரும் தேசத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயக முகத்தின்மீது கரி பூசும் வேலையையே அவை செய்து வந்துள்ளன..

மத்தியப் பிரதேசத்தில் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரீகளைச் சங்பரிவார் குண்டர்கள் கற்பழித்தபோது "தேசபக்தி மிக செயல்" என அதை வருணித்தவர் வி எச் பி தலைவர் அசோக் சிங்கால். ஒரிஸ்ஸாவில் தொழுநோயாளிகளுக்குச் சேவை செய்து வந்த கிரஹாம் ஸ்டெயின்ஸையும் ஏழு மற்றும் ஒன்பதே வயதான அவரது இரு  மகன்களையும் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த ஜீப்போடு தீவைத்துக் கொளுத்திக் கொன்றபோதும் இவர்களது தேசபக்தி வெளிப்பட்டது.. அதன் பிறகும் ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களை வேட்டையாடினர். அங்கும் கன்னியாஸ்திரிகளைக் கற்பழித்தனர். கேரளா உட்படப் பல இடங்களில் பயங்கர வெடிகுண்டு தயாரிக்கும் போது பல ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் தென்காசியில் தங்கள் அலுவலகத்தில் குண்டு வெடிக்கச் செய்து, முஸ்லிம்கள் மீது பழி சுமத்தினர். கேரளாவின் வடமாவட்டங்களான கண்ணூர், காசர்கோடு போன்ற இடங்களில் குண்டுகள் வெடித்த வழக்குகளிலும் இவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.


நாட்டு விடுதலைக்கு முன்னும் பின்னும் இவர்கள் நடத்திய கலவரங்களும் கொலைகளும் கணக்கில் அடங்காதவை. இந்தியாவில் நடந்த மதக்கலவரங்களில் ஆர் எஸ் எஸ் சங்பரிவாரின் பங்கைப் பல விசாரணை அறிக்கைகள் வெட்டவெளிச்சமாக்கியுள்ளன.

அகமதாபாத் கலவரத்தைப் பற்றி விசாரணை செய்த ஜகமோகன் கமிஷன் அறிக்கை (1969)

மகாராஷ்ட்ர மாநிலம் பிவாண்டி கலவரத்தை விசாரித்த மதோன் கமிஷன் அறிக்கை (1970)

கேரள மாநிலம் தலச்சேரிக் கலவரத்தை விசாரித்த வித்யத்தில் கமிஷன் அறிக்கை(1971)

ஜாம்ஷெட்பூர் கலவரத்தை விசாரித்த ஜிதேந்திர நாராயண் கமிஷன் அறிக்கை (1979)

குமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரத்தை விசாரித்த வேணுகோபால் அறிக்கை(1982)

போன்றவை சான்றுக்குத் தரப்பட்ட சிலவாம்.

பாபர் மசூதியை இடிப்பதற்கு முன் இவர்கள் நடத்திய ரதயாத்திரைகளிலும் இடித்த பின் நடத்திய மும்பைக் கலவரத்திலும் தமிழ்நாட்டில் கோவையில் போக்குவரத்துக் காவலர் செல்வராஜின் கொலையைத் தொடர்ந்து நடந்த கலவரத்திலும் கொள்ளைகளிலும் குஜராத் இனப்படுகொலையிலும் இவர்களின் பங்கு பற்றி விசாரணைக் கமிஷன்கள் இல்லாமலேயே உலகம் அறிந்துள்ளது.

நாட்டில் எங்கு குண்டுவெடித்தாலும் கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு முஸ்லிம்களின் மேல் குற்றம் சுமத்தும் ஊடகங்களும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் காவல் துறையும் ஒருதலைப்பட்சமாகவே நடந்து கொண்டுள்ளன.



ஸம்ஜெளதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா மசூதி, அஜ்மீர் தர்கா, தானே சினிமா கொட்டகை, கோவா போன்ற இடங்களிலும் மாலேகானில் இரு முறையும் குண்டு வைத்துப் பலரைப்  பலிகொண்ட பயங்கரவாதிகள் ஆர் எஸ் எஸ்ஸின் தீவிர உறுப்பினர்கள் என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது..


நாட்டுப் பாதுகாப்புக்கு  மக்கள் நம்பிப் பெரு மரியாதை கொடுக்கும் ராணுவ அதிகாரித் தகுதியில் இருந்தவர்கள் கூட குண்டு வெடிப்புகளில் சம்பந்தப் பட்டு சங்பரிவாரத்துக்கு வெடி மருந்து ஸப்ளை செய்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்திருப்பதால் ஆர் எஸ் எஸ்ஸின் தாக்கத்தின் அளவு நாட்டு மக்களிடம்  பெருத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


"பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்று அரசு குற்றம்சாட்டும் பெரும்பான்மையோர் தாங்களாகவே ஆர் எஸ்  எஸ் ஸில் இருந்து விலகிவிட்டனர். மேலும் சிலரை விலகுமாறு கேட்டுக் கொண்டு விலக்கிவிட்டோம்." என்று இப்போது நல்ல பிள்ளை வேடம் போடுகிறார் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத். பயங்கரவாதிகள் ஆர் எஸ் எஸில் இருந்து விலகி, இயக்கத்தின் பெயரை வெளிப்படுத்தாமல் கலவரங்களையும் குண்டு வெடிப்புகளையும்  நடத்திக் கொள்ளலாம் என்கிறாரா? இங்கேதான் ஆர் எஸ் எஸ்ஸின் தேசபக்தி பல்லிளிக்கிறது. குண்டு வைக்கும் பயங்கரவாதிகள் எனத் தெரிந்த பின் அவர்களைச் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வர அரசுக்கு உதவித்  தம் தேசபக்தியை நிரூபித்திருக்க வேண்டாமா? தேசபக்தி என்பது பிற கொள்கையாளர்களைக் கருவறுப்பது இல்லை; மாறாக வேற்றுமையில் ஒற்றுமை கண்டு விழுமியங்களின் மூலம்  நாட்டின் பெருமையை உலகுக்கு உணர்த்துவதே என்பதை ஆர் எஸ் எஸ் சங்கபரிவாரம் உணர்ந்தாலே இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும்.



- ரஸ்ஸல்.



நன்றி : இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum