கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் விசித்திரம்

Go down

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் விசித்திரம்

Post by முஸ்லிம் on Sun Feb 13, 2011 2:57 pm


"ழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" எனப் பாரதி சொன்னதில் முற்பாதியைக் கண்டுகொள்ளாமல் பிற்பாதியை ஊக்குவித்ததால் இன்று விவசாயம் அழிந்துகொண்டிருக்கிறது தமிழ்நாட்டில். விதைகளுக்கும் பூச்சிமருந்துக்கும் உரத்துக்கும் விலையேற்றம், பாசனத்துக்கு நீர் வரத்து இல்லை, மின்வெட்டு, வறட்சி, புயல், மழைவெள்ளப் பெருக்கு, இவற்றைச் சமாளித்து அறுவடை செய்தால் விளைபொருளுக்கு ஏற்ற விலையில்லை எனப் பல்வேறு சங்கடங்களைச் சந்திக்கிறான் விவசாயி.
 


நாட்டின் முதுகெலும்பான பயிர்த்தொழில் செய்பவனை அந்நியச் செலாவணிக்காக அழியவிட்டுக் கொண்டிருப்பது என்ன நியாயம்?


பின்னலாடைத் தொழிலில் கடந்த முப்பது ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்த திருப்பூர் இன்று ஆண்டுக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி செய்யும் அளவு செழித்து, 'டாலர்சிட்டி' என அழைக்கப்படுகிறது. பின்னலாடைத் தொழிலில் வண்ண ஆடைகள் ஏற்றுமதி தொடங்கிய பிறகு, அதைச் சார்ந்த சாயப்பட்டறைகள் உருவாயின. துவக்கத்தில் இலகு வண்ணங்கள் ஏற்றப்பட்டு வந்த பின்னலாடைகள் காலப்போக்கில் பெரிதான விற்பனைத் தேவைக்கேற்ப அடர் வண்ணங்கள் ஏற்றப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. அப்போதிருந்தே சாயக் கழிவுகளான இரசாயனங்களும் அமிலங்களும் உப்பும் சேர்ந்து ஆற்று நீரை மாசுபடுத்தி விஷமாக்கி விட்டன.


மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகிக் கோவை, ஈரோடு, கரூர் வழியாக ஏறத்தாழ 170 கி மீ பயணித்து நொய்யல் அருகே காவிரியுடன் கலக்கும் 'நொய்யல் ஆறு' இன்று விஷமாகி விட்டது. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பட்டுப்போயின ; நெல் விளைவிக்கும் வயல்கள் கருகின; ஆற்றுநீரைக் குடித்த ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்தன; தோல் நோயும் புற்று நோயும் மக்களைத் தாக்கின.


சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரைச் சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும் என்று அரசும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் நீதிமன்றங்களும் உத்தரவிட்ட போதும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஆற்றையும் மண்ணையும் விஷமாக்கிக் கொண்டிருந்தனர் சாயப்பட்டறை உரிமையாளர்கள். இறுதியாக ஜனுவரி 31 ஆம் தேதியுடன் கழிவு நீரைச் சுத்திகரித்து வெளியேற்றாத அனைத்துச் சாயப்பட்டறைகளையும் இழுத்து மூடவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் பின்னலாடைத் தொழிலை நம்பி ஐந்துலட்சம்பேர் பிழைக்கின்றனர்; சாயத்தொழிலில் மட்டும் எழுநூற்றியிருபது பட்டறைகளும் அறுபதாயிரம் தொழிலாளர்களும் பிழைக்கின்றனர் என இப்போது குமுறுகின்றனர். ஆனால் மண்ணையே நம்பித் தம் வாழ்வையும் பொருளாதாரத்தையும் அடகு வைத்துப் பயிர்த்தொழில் செய்யும் விவசாயியைப் பற்றிக் கவலைப்படுவார் யாருமில்லை.


"ஆற்றங் கரையின் மரமும் அரசறிய


வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே – ஏற்றம்


உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்


பழுதுண்டு வேறோர் பணிக்கு"


எனப் பள்ளியில் சிறு வகுப்பில் படித்தது இன்று பொய்த்து விட்டது.


உழவுத்தொழில் உயர் தொழிலாக இருந்த காலத்தில் இப்பாடல் பொருந்தியிருக்கலாம். ஆனால் இன்று பயிர்த்தொழில் என்பது உழவனின் தற்கொலை முயற்சியாகி விட்டது. ஆம்! இந்தியாவில் பயிர்த்தொழில் செய்வோரில் லட்சக்கணக்கானோர் 1990 ஆம் ஆண்டுக்குப் பின் கடன் சுமையால் தற்கொலை செய்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்த துயரச் செய்தியன்றோ?


பண்டைய நாட்களில் மன்னர்கள் ஆண்டபோது மாதம் மும்மாரி பெய்ததாம். அவர்கள், "காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கிப் பசியும் பிணியும் நீங்கி வசியும் வளனும் சுரக்க" நாடாண்டனர்.


"சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை"யானது.


"உழுதுண்டு வாழ்வோரே உயர்ந்தோராக" இருந்தனர்.


உணவும் மக்கள் தொகையின் தேவைக்கேற்ப விளைவிக்கப்பட்டது. அந்த நிலை இந்தியாவை அந்நியர்களான முகலாயர் ஆண்ட போதும் ஆங்கிலேயர் முதலான ஐரோப்பியர் ஆண்ட போதும் தொடர்ந்தது. இந்தியா முழு விடுதலை பெற்று நம்மை நாமே ஆளத்தொடங்கி 1950 ஆம் ஆண்டில் குடியரசான பின் 1951 ஆம் ஆண்டில் முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் தீட்டப்பட்டபோது விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது பண்டைய மன்னர்கள் குளம் தொட்டு வளம் பெருக்கியதுபோல் நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டுப் பெரும் அணைகள் கட்டப்பட்டன. தண்ணீர்ப் பஞ்சம் பற்றிய கவலையின்றிப் பயிர்த்தொழில் வளர்ந்தது.


ஆனால் 1965 காலகட்டத்தில் வானம் பொய்த்துக் கடும் வறட்சி ஏற்பட்டபோது மக்கள் உணவுக்கு ஏங்கினர். நாளுக்கு ஒரு நேரம் பட்டினி கிடக்கவும் எலிக்கறி சாப்பிடவும் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை வழங்கிய அக்கொடிய பஞ்சமே தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அற்றுப்போகச் செய்த காரணங்களுள் ஒன்றாக அமைந்தது


மக்களின் பசியைப் போக்க அமெரிக்காவிலிருந்து ஏறத்தாழ ஆறரை மில்லியன் டன் கோதுமை இறகுமதி செய்யப்பட்ட அவலமும் நடந்தது.


அதன் பிறகு இந்தியாவில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டுக் குறைந்த காலப் பயிர்களாக அரிசியும் கோதுமையும் விளைவிக்கப்பட்டன. மக்கள் உணவுப்பஞ்சம் பற்றிய அச்சம் நீங்கி வாழத்தொடங்கினர். அதைத் தொடர்ந்து புதிய ஒட்டு ரக வீரிய விதைகளும் இரசாயன உரங்களும் விவசாயிகளிடம் புழக்கத்துக்கு வந்தன. நீர் மேலாண்மைத் திட்டத்தால் அணை நீர் பகிர்ந்தளிக்கப்பட்டது.எல்லாம் சுபமே என நினைத்தபோது எதிர் வினைகளும் உருவாயின.


முன்பெல்லாம் -- நாற்பது ஆண்டுகளுக்கு முன் -எங்கள் வீட்டுக் கிணற்றில் சுவையான நீர் நீல நிறத்தில் தளும்பிக் கொண்டிருக்கும். இரண்டு முழக் கயிற்றின் முனையில் கட்டிய இரும்பு வாளியில் ஒரே வீச்சில் தண்ணீரை இறைத்து இறைத்து வேகமாய்க் குளிப்போம். உடலுக்குப் பயிற்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் அமைந்திருந்தது அது. பிறகு நாள் செல்லச் செல்ல நீர் மட்டம் கீழே போகக் கயிற்றின் நீளம் கூடியதோடு ஒரே எட்டில் இறைத்ததற்கு மாறாகப் பல எட்டுகளில் நீர் இறைக்க வேண்டி வந்தது.அவ்வயதில் காரணம் புரியவில்லை. வயது ஏற அறிவும் தெளிவும் வரவே , கிணற்று நீர் மாயமாய் மறைந்ததைப் புரிந்து கொண்டேன். தெருக்கள் முழுவதும் தாரும் ஜல்லியும் இட்டுப் பளபளப்பாக்கினர். வீட்டின் பின்புறத்தில் துப்புரவுத் தொழிலாளி வரும் சந்தை, சிமெண்ட் காங்கிரீட்டால் பூசினர். வயலுக்கு நீர் கொண்டு வரும் பெரிய ஓடையிலும் நீர் வீணாகாமல் பாசனத்துக்குக் கொண்டு சேர்க்கிறோம் என்ற பெயரில் காங்கிரீட்டால் தளம் அமைத்தனர்.நீர் எவ்வழியிலும் நிலத்துக்குள் புகாதவாறு செய்து விட்டதால் கிணறு வறண்டது. அக்கிணற்றை மூடிவிட்டுப் பூமியில் குடைந்து குழாய்க்கிணறு அமைத்தோம். இப்படித் தமிழகம் முழுவதும் நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டது. பாசனத்துக்கு நீர் வரத்துக் குறைந்து போனதால் விவசாயிகளும் குழாய்க்கிணறு மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சினர்..நான் பள்ளிப் பருவத்தில் இருந்தபோது , நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வரை எங்கள் வீட்டு மாட்டுத் தொழுவத்திலிருந்த மாடுகளின் சாணம் மற்றும் வீட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளின் புழுக்கை என அனைத்தும் வீட்டின் கடைக்கோடியில் பின் சந்தை அடுத்து இருந்த எருக்குழியில் சேமிக்கப்படும். அறுவடை முடிந்து அடுத்த சாகுபடிக்குத் தயாராகும்போது, ஐந்தாறு மாட்டு வண்டிகளில் எருக்குழியிலிருந்து சாணம் ஏற்றிச் செல்லப்பட்டு எங்கள் வயலில் இடப்படும். மேலும் வயலின் நடுவே பதித்து வைக்கப்பட்டஒரு பெரிய மரக்கட்டை மீது சிறு துண்டுகளாக ஒடிக்கப்பட்ட வேப்பமரக் கிளைகளைக் காய்களுடன் வைத்துக் குறுகத் தறித்து வயலில் பரப்புவர். இதுதான் வயலுக்கு இட்ட உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து . சிலகாலம் கழிந்த பிறகு, வீட்டில் சிறு சிறு மூட்டைகளாக வெண்மை நிறத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டபோது சர்க்கரையா உப்பா என எழும் ஐயத்தைப் போக்க வாயில் வைக்கப் போகும்போது தந்தை சொன்னார் " இது வயலுக்குப் போடும் உரம்" என.


இரசாயன உரமும் இரசாயனப் பூச்சி மருந்தும் நிலத்தின் இயற்கைச் சத்தை உறிஞ்சி விட்டன.


காலப்போக்கில் விதைகள், உரம் மற்றும் பூச்சிமருந்துகளின் விலையேற்றம் விவசாயியைக் கடன் வாங்க வைத்தது. விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயி கடனாளியாகித் தற்கொலை செய்து கொண்டான். தற்கொலைக்குத் துணியாதவர்கள், வந்த விலைக்கு நிலத்தை விற்றுவிட்டு வயிற்றுப்பாட்டுக்காக நகரச்சேரிகளில் குடியேறினர்.விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளாகவும் வீட்டு மனைகளாகவும் அடுக்கு மாடிக்குடியிருப்புகளாகவும் மாறின.


இன்னும் பிடிவாதமாக விவசாயம்தான் செய்வேன் என்று மல்லுக் கட்டிப் போராடும் ஒருசிலருக்குப் பாசன வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன. விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்கும் கண்மாய்களும் ஏரிகளும் பெரிய நீரோடைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுக் கட்டடங்களாகவும் கல்யாண மண்டபங்களாகவும் ஆனபின் எப்படிப் பயிர்த்தொழில் செய்வான்? இன்னும் கடனை உடனை வாங்கி ஆழ்குழாய்க் கிணறு அமைக்கலாம் என நினைத்தாலும் நிலத்தடி நீர் கீழே, கீழே இறங்கிப் போய்க்கொண்டிருப்பதால் கிணற்றின் ஆழம் கூடுகிறது; அதற்கேற்ப அவனின் கடன் தொகையும் மேலே மேலே ஏறிக்கொண்டே போகிறது. ஒரு வழியாக ஆழ்குழாய்க் கிணறு அமைத்தாலும் மின்சார வெட்டு. இதுதான் விவசாயியின் தலை எழுத்தா?


இவை போன்ற சிக்கல்கள் இல்லாமல் ஆற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வந்த நொய்யல் ஆற்றுப் பாசனக்காரர்களின் வயல்களும் தோட்டங்களும் வீட்டுக் கிணறுகளும் விஷமாகி விட்டன.


ஆயிரக்கணக்கான கோடிகளில் ஏற்றுமதி நடப்பதன் மூலம் பின்னலாடைத்தொழிலால் அரசுக்கு அந்நியச் செலாவணியாகவும் வரியாகவும் ஏராளமான வருகிறது என்பதால் ஓர் உண்மையை மறைக்கலாகாது. நம்மிடமிருந்து இறக்குமதி செய்யும் நாடுகளில் நம்மைவிடச் சிறப்பாகப் பின்னலாடையும் வண்ணச் சேர்க்கையும் செய்யும் வாய்ப்புகள் இருந்தும் தம் நாட்டில் மாசுபடிவதையோ, தம் மண் விஷமாவதையோ அந்நாடுகள் அனுமதிக்கவில்லை என்பதை அரசும் மறந்துவிடக்கூடாது. இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வு சம்பந்தப்படுள்ளதால் பின்னலாடைத் தொழில் நசிந்து போகாமலும் பயிர்த்தொழில் அழிந்து போகாமலும் காக்கும் கடமை அரசுக்கு உள்ளது. எனவே சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் அமிலமும் இரசாயனமும் கலந்த நீரை zero discharge மூலம் சுத்திகரித்து வெளியேற்ற, சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு நீண்டகாலக் கடனையும் மானியத்தையும் வழங்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்ய'லாம்.அந்நியச்செலாவணியை மட்டுமே குறியாகக் கொண்டிருந்தால் அது கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கியதற்கு ஒப்பாகும்.


- ரஸ்ஸல்.நன்றி : இந்நேரம்


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8966
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum