தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

'காதலர் தினம்' இளைஞர்களுக்கு சாபக்கேடு!

Go down

'காதலர் தினம்' இளைஞர்களுக்கு சாபக்கேடு!  Empty 'காதலர் தினம்' இளைஞர்களுக்கு சாபக்கேடு!

Post by முஸ்லிம் Sun Feb 13, 2011 10:54 pm

வாழ்க்கையில் எந்த ஒரு நெறிமுறைகளும் இல்லாமல் எதையும் பின்பற்றி, எப்படியும் வாழலாம் என்பவர்களைப் பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் உண்ணும் முறையிலிருந்து வாழ்க்கையின் அத்தனை விஷயங்களுக்கும் அழகிய வழிமுறைகள் வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கும் சமுதாய மக்களே இந்த கேடுகெட்ட காதலர் தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடுவது என்பது மிகவும் வேதனையான விஷயம்தான்!



'பிப்ரவரி 14' அன்று கொண்டாடப்படும் 'வேலன்டைன் தினம்' என்ற இந்த 'காதலர் தினம்', ரோமப் பாரம்பரியத்தில் சீரழிந்துப் போன கலாச்சாரத்தின் சிந்தனையால் வணிக நோக்கத்திற்காக உருவானதாகும். இளம்வயது மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதைப் பணமாக்கத் துடிக்கக்கூடிய‌, வியாபரம் மட்டுமே நோக்கமாகக் கொண்ட மேற்கத்திய பண‌ முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம், சமீப காலமாக நம் இந்திய மக்களிடையேயும் ஊடுருவி, பெரும் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி வருகிறது.



'டீன் ஏஜ்' என்று சொல்லப்படும் பருவமானது தனக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒரு செயல் அது சரியா அல்லது தவறா, அதனால் வரக்கூடிய பின்விளைவுகள் என்ன‌ என்பதையெல்லாம் தூர நோக்கோடு சிந்திப்பதற்கு தடைக்கல்லாக இருக்கும் ஒரு பருவமாகும். அத்தகைய வயதுடையவர்கள்தான் நிதானமில்லாத தன் சிந்தனைகளினால் காதல், கத்தரிக்காய் என்று வெகு சுலபமாக சீரழிவின் படுகுழியில் விழுந்துவிடுகின்றனர். பெரும்பாலும் மாணவ, மாணவிகள் இதில் முதலிடம் என்று சொல்லலாம். இவற்றுக்கெல்லாம் மீடியாக்களின் அட்டூழிய‌ங்களும் தூண்டுகோல்கள் என்றால் அது மிகையாகாது! காதலை ஊக்கப்படுத்தும் விதமாக‌ பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவதன் மூலம் சமூக சீரழிவிற்காக‌ ஆற்றும் மீடியாக்களின் அரிய(?)பங்கைத் தட்டிக் கேட்கவோ, தடுத்து நிறுத்தவோ அரசாங்கமே முயல்வதில்லை.




சரி அவர்கள் போகட்டும், பெற்றோர்களுக்காவது பொறுப்பு வரவேண்டாமா? சினிமாக்களும், டிவி சீரியல்களும் இப்படிதான் காதலிக்க வேண்டும் என்ற கேடுகெட்ட கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்கும்போது அதைப் புறக்கணிக்காமல், பெற்றோரும் தங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து அவற்றைப் பார்ப்பது, பற்றாக்குறைக்கு பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வு பாழாக துணை நிற்கும் செல்ஃபோன்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, அதன் மூலம் தன் பிள்ளைகள் வெளியுலகில் தொடர்புக் கொண்டிருப்பதை அறியாமல் ஒரு கட்டத்தில் யாருடனாவது ஓடிப்போன பிறகு ஒப்பாரி வைத்து என்ன பயன்?



SMS மூலம் பரிமாறப்ப‌டும் ஆபாச உரையாடல்கள், மானங்கெட்ட‌ காதல்(கழிசடைக்) கவிதைகளினால் இன்றைக்கு இளைய தலைமுறைகள் பயன்படுத்தும் செல்ஃபோன்கள் எல்லாம் செக்ஸ் போன்களாக மாறிவருகின்றன என்பதை, தங்களின் பிள்ளைகளின் மீதுள்ள அபரிமிதமான நம்பிக்கையில் பெற்றோர்கள் அறிவதில்லை. ஆக தங்கு தடையில்லாமல் கிடைக்கும் இந்த செல்ஃபோன் காதலோடு, சினிமாவின் காட்சிகளைக் கற்பனையில் கொண்டு வந்து கலந்து, கடைசியில் இந்தக் காதலெனும் நோய் முற்றிப்போய் பெற்றோர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அவர்களைப் பிரிந்து செல்கின்றனர். ஆனால் இதுவல்ல வாழ்க்கை முறை என்பதை அவர்களுக்கு தலையில் கொட்டி புரிய வைக்கவேண்டிய சமுதாயம், அவர்களையெல்லாம் தட்டிக் கொடுத்து வளர்க்கவே இன்று காதலர் தினத்தை அங்கீகரித்துக் கொண்டிருக்கிற‌து. 'காதல்' என்பது கணவன், மனைவிக்கு இடையேயான  'தூய்மையான நேசம்' மட்டுமே என்ற நிலை மாறிப்போன இக்காலத்தில், 'காதலர் தினம்' என்று சொல்வதைவிட 'கழிசடைகள் தினம்' என்று சொல்வதுதான் ரொம்ப பொருத்தமாக இருக்கும்.



இந்த காதல் கலாச்சாரத்தினால் ஒழுக்கக் கேடுகள் ஒருபுறம் என்றால், பல‌ உயிர்கள் பறிபோகும் கொலைகளும் தற்கொலைகளும் மறுபுறம்! கடந்த 2009 ஆம் ஆண்டு மட்டும் (தமிழ்நாட்டில்) காதல் விவகாரத்தினால் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217! (தினமணி: 8-5-2010). கடந்த(2010 ஆம்) ஆண்டின் கணக்கெடுப்பு வெளிவந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடலாம்!





- பிள்ளை ஓடிப்போன‌தால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை




- காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை



- வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை



- தன் காதலியைக் காதலித்ததால் காதலனால் செய்யப்படும் கொலை அல்லது மற்றவனைக் காதலித்ததால் தன் காதலியைக் கொல்வது!



- தான் காதலிக்கும் திருமணமான ஒரு பெண் அந்த காதலுக்கு சம்மதிக்காததால் ஆத்திரம் தீர அவளின் குழந்தையைக் கடத்திக் கொலை!



- கள்ளக் காதலன் கொலை அல்லது கள்ளக் காதலி கொலை



- கள்ளக் காதலால் வந்த குழந்தை குப்பைத் தொட்டியில் வீசி கொலை




- காதலை ஏற்க மறுத்த மாணவி ஆசிரியனால் கற்பழிக்கப்பட்டு கொலை



- கள்ளக் காதலன்/காதலி சேர்ந்து அவர்களின் கணவன்/மனைவி கொலை



இதுபோன்ற செய்திகளைப் பத்திரிக்கைகளில் படிக்காத நாள் உண்டா? பிள்ளைகளை வளர்க்கும்போதே ஒழுக்கத்தை முறையாக சொல்லி வளர்த்திருந்தால் இந்த அவல நிலைகள் ஏற்படுமா? அனுமதிக்கப்படாத காதல் என்பது வாழ்வின் சீர்கேடு என்பதை பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலேயே புரிய வைத்திருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகுமா?



தமிழ்க் கலாச்சாரத்தை நாங்கள்தான் கட்டிக் காக்கிறோம் என்று சொல்லும் தமிழ்க் காவலர்கள்(?) இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? சமுதாய அக்கறை கொஞ்சமும் இல்லாமல், 'எவன் செத்தால் எங்களுக்கு என்ன, மீடியாக்கள் மூலம் சம்பாதிக்கும் பணம்தான் எங்களுக்கு முக்கியம்' என்று செயல்படும் மீடியாக்களின் உத்தமர்கள் இந்த காதலை இனியும் ஊக்கப்படுத்தாமல் இருப்பார்களா?



மேற்கத்தியர்களுக்கு வேண்டுமானால் இதெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஏனெனில், அவர்கள் யாரும் கற்பைப் பற்றி கவலைப் படுவதில்லை.




மாடலிங் என்னும் பெயரில் இளம் பெண்களின் உடைகளை இயன்றவரைக் குறைத்து அதற்கு மார்க்குகள் போடுவதும், 'அழகு ராணி'யைத் தேர்ந்தெடுக்கிறோம் என்று அங்கங்களை அள‌ந்துப் பார்த்து கிரீடம் சூட்டுவதும் அவர்களின் நாறிப்போன நாகரிகம்! அங்கெல்லாம் ஒரு தாய், வளர்ந்த தன் பிள்ளைகளை தன்னந்தனியே வெளியில் அனுப்பி வைக்கும்போது சொல்லும் முதல் அட்வைஸ் என்ன தெரியுமா? 'நீ யாரோடு கூடினாலும் கருத்தடை உறையை பயன்படுத்த‌ மறவாதே!' என்பதுதான். இதனால் கல்லூரி செல்லும் பிள்ளைகளும் வேலைக்கு செல்லும் பெண்களும் ஹேண்ட் பேக்குகளில் கருத்தடை சாதனங்கள் வைத்துக் கொள்ளும் நாகரிகம்(?) உடையவர்கள் அவர்கள்!



ஆனால் அவர்களின் கேடுகெட்ட இதுபோன்ற‌ (அ)நாகரிகத்தினை அங்கீகரிக்கும் ஒரு கொண்டாட்டமான இந்த 'காதலர் தினம்', இந்தியாவிலும் இற‌க்குமதி செய்யப்பட்டுவிட்டதின் விபரீதத்தை இன்னும் நாம் உணராமல், மேலை நாகரிகத்தினைப் பின்பற்றி புதுமையாக வாழ்கிறோம் என்ற பெயரில் இதை நீடிக்க விட்டோமானால், அப்பன் பெயர் தெரியாமல் அநாதை இல்லங்களுக்கு அனுப்பப்பட்டு தாயின் பாசமும் கிடைக்காமல் ஏங்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நம் நாட்டிலும் அதிகமாகலாம்! அத்தகைய மோசமான நிலையை விட்டும் நம் சமுதாயத்தைப் பாதுகாக்க‌வேண்டிய பொறுப்பு நம்மீது உள்ளது.



பொதுவாகவே எல்லா வயதுடைய ஆண், பெண் இருபாலரும் கவனிக்கவேண்டியது,



சொந்தத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது ஏற்கனவே பழக்கப்பட்ட நபர்களோ யாராக இருந்தாலும் அவர்கள் அந்நிய‌வர்களாக இருக்கும் பட்சத்தில், ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக நினைத்து எல்லை மீறிய வார்த்தைகளில் உரையாடுவது முதல், தேவையில்லாத கற்பனைகளை உருவாக்கும் ஆசை வார்த்தைகள் அனைத்தும்தான், தன்னையும் தன் பெற்றோர்களையும் கண்ணியமாக வாழும் தன் குடும்பத்தையும் மறந்து தறிகெட்டுப்போக வழி வகுக்கிறது. இதனால்தான் 'தவறான சிந்தனையும், தவறான பார்வையும், அசிங்கமான பேச்சுகளும் விபச்சாரத்தின் ஒரு பகுதி' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு அந்நிய ஆணும் ஒரு பெண்ணும் தன் அத்தியாவசிய தேவைகளில் கூட, உதாரணமாக கடைகளுக்குச் செல்லும்போது, வாடகைக் கார்/ஆட்டோ போன்ற வாகனங்களில் செல்லும்போது, அலுவலக வேலையாக செல்லும்போது போன்ற சந்தர்ப்பங்களிலும் சரி, தெருக்களில் அன்றாடம் வரும் வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கும்போது கூட‌ தன் நடை/உடை, பேச்சு/பாவனை, பார்வைகளில் மிக மிக ஜாக்கிரதையாக நடந்துக் கொள்ள வேண்டும்.



'விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (கெட்ட) பார்வையாகும்! நாவு செய்யும் விபச்சாரம் (கெட்ட) பேச்சாகும்! மனம் ஏங்குகின்றது; இச்சைக் கொள்கின்றது; பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது அல்லது பொய்யாக்குகின்றது' என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.




அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி);  நூல்: புகாரி(6243)




ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பதும், ஊர் சுற்றுவதும், உலா வருவதும்தான் காதல் என்றால், அப்படிப்பட்ட‌வர்களை ஊக்குவிப்ப‌தற்காகத்தான் காதலர் தினம் என்றால் அத்தகைய‌ ஒரு கலாச்சார‌த்தை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. கற்பு என்பது புனிதமானது; அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. எனவே இருவரும் கற்பைப் பாதுகாக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை!



"தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கைக் கொண்ட‌ ஆண்களுக்கும் பெண்களுக்கும் (நபியே!)நீர் கூறுவீராக!" (அல்குர்ஆன் 24:30-31 வசன‌ங்களின் சுருக்கம்)



"உங்களில் ஒருவர் ஓர் அந்நியப் பெண்ணிடம் அவளுடைய (தந்தை, மகன், பேரன், சகோதரன், தந்தையின் சகோதரன், தாயின் சகோதரன்) போன்ற மஹ்ரமான உறவினர்களுடன் இருந்தாலே தவிர‌ தனியே இருக்க வேண்டாம்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 



அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி);  நூல்:புகாரி,முஸ்லிம்





பலஹீனமாகப் படைக்கப்பட்ட‌ பெண்களின் நன்மை கருதிதான் இஸ்லாம் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பது, பேசுவது, பிரயாணிப்பது போன்றவற்றைத் தடுக்கிறது. அதே சமயம் தவிர்க்க முடியாத அவசிய/அவசரத் தேவைகள் தனிமை நிலையில் ஏற்பட்டாலும் ஆண், பெண்ணுடன் பேசக் கூடாது என இஸ்லாம் கூறவில்லை. அதுபோன்ற‌ சந்தர்ப்பங்களில் கற்புக்கு பங்கம் ஏற்படாதவாறு, இறைவனை அஞ்சி கண்ணியத்துடன் நடந்துக் கொள்ளுமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது. எனவே இஸ்லாம் கூறும் ஆண்/பெண் நடந்துக் கொள்ளவேண்டிய சட்ட முறைகள் மிகவும் தெளிவானவை, அர்த்தம் நிறைந்தவை, மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழிவகுக்கக் கூடியவை. அவற்றைத் தாண்டி வரம்பு மீறும்போதுதான் விபரீதங்கள் உருவெடுக்கின்றன.



ஆகவே சமுதாய அக்கறையுள்ள சகோதர, சகோதரிகளே! எய்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணவு பிரச்சாரத்திற்காக 'டிசம்பர் 1' ஆம் தேதி உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதே, அந்த உயிர்க் கொல்லி நோய்க்கு அடிப்படையான காதலைக் கொண்டாடும் 'பிப்ரவரி 14' கொண்டாட்டத்தை இல்லாமல் ஆக்குவதற்குதான் மக்களிடத்தில் முதலில் விழிப்புணர்வு வரவேண்டும். அதற்காக நாமனைவரும் இந்த 'பிப்ரவரி 14' -ஐ புறக்கணிக்கவேண்டும். அதனால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்லி, நம் சமுதாயத்தின் உயிர் பலிகளும், சமூக சீர்கேடுகளும், அசிங்கங்களும் மற்றும் திருமணத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் இருக்க இந்த நன்மையான காரியத்தில் ஒன்றுபடுவோம்! இறைவன் உதவியால் நமது சமுதாயத்தை காப்பாற்றுவோம்!

முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10920
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

'காதலர் தினம்' இளைஞர்களுக்கு சாபக்கேடு!  Empty Re: 'காதலர் தினம்' இளைஞர்களுக்கு சாபக்கேடு!

Post by முஸ்லிம் Mon Feb 13, 2012 6:51 pm

UPDATED
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10920
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum