பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப் பணி

Go down

பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப் பணி

Post by முஸ்லிம் on Thu Feb 24, 2011 5:55 pm

முன்னுரை

உலகையும் அதில் உள்ள மனிதர்கள் உட்பட அனைத்தையும் படைத்த படைப்பாளனைக் குறித்து அறிந்து கொள்ளாமல் படைப்புகளை வணங்கிக் கொண்டிருக்கும் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் பணியே அழைப்புப் பணியாகும்.

தொழுகை, நோன்பு ஆகியனபோல் அழைப்புப் பணியும் கலிமாச் சொன்ன ஒவ்வொரு முஸ்லிமின் அடிப்படைக் கடமையாகும். அதுபோல் முஸ்லிம்கள் சமகாலத்தில் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் அவர்கள்மீது இழைக்கப்படும் அனைத்துக் கொடுமைகளுக்கும் அழைப்புப் பணியைச் சரிவரச் செய்யாததும் ஒரு முக்கியக் காரணம் என்றால் அது மிகையானதல்ல. அந்தளவு முக்கியப் பணியான அழைப்புப் பணியைப் பற்றி விளக்கமாகவும் இயக்கப் பிரிவுகள் குறித்துச் சுருக்கமாகவும் பிரிவுகளுக்கு மத்தியில் எவ்வாறு அழைப்புப் பணி செய்வது என்பது குறித்தும் இன்ஷா அல்லாஹ் இக்கட்டுரையில் காண்போம்.

அழைப்புப் பணி – திருமறையின் பார்வையில்

திருக்குர்ஆனில் அழைப்புப் பணி குறித்து, “உதுஊ இலா ஸபீலி ரப்பிக்”, “வ தவா ஸவ்பில் ஹக்”, “தஃமுரூன பில் மஹ்ரூஃபி வதன்ஹவ்ன அனில் முன்கர்”, “இகாமத்துத் தீன்” எனப் பல்வேறு பெயர்களில் இறைவன் குறிப்பிட்டுக் காட்டுகிறான். திருமறையில் அழைப்புப் பணி குறித்து எண்ணற்ற வசனங்கள் இருப்பதால் உதாரணத்திற்கு ஓரேயொரு வசனத்தைக் குறிப்பிட்டு காட்டுகிறேன்: “எவர் அல்லாஹ்வின்பால் (மக்களை) அழைத்து, நல்ல செயல்களைச் செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களைச் சார்ந்தவன்” என்று கூறுகிறாரோ, அவரைவிட சொல்லில் அழகியவர் யார் ? (திருக் குர்ஆன் 41:33) என அல்லாஹ் இப்பணியைக் குறித்து சிலாகித்துச் சொல்லிக் காட்டுகிறான்.

அழைப்புப் பணி – சுன்னாவின் ஒளியில்

முஹம்மது (ஸல்) தம் இறுதிப் பேருரையில் கூடியிருந்த மக்களிடம், "என்னிடமிருந்து ஓரேயொரு செய்தி தெரிந்தாலும் பிற மக்களிடம் கொண்டு செல்லுங்கள்" என்று கூறிய கட்டளையை ஏற்று உத்தமத் தோழர்களான ஸஹாபாக்கள் உலகின் பல்வேறு பாகங்களுக்குச் சென்று அழைப்புப் பணியாற்றியதை வரலாற்றில் காண்கின்றோம். தனக்குப் பிடித்தமானவர்கள் என்றில்லாமல் தன்னைக் கடுமையாக எதிர்த்த அபூஜஹலும் எரிச்சல் அடையும்வரையில் அழைப்புப் பணியை அவனிடமும் நபி (ஸல்) செய்ததைக் காண்கின்றோம். அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக ! உம்மைக் கொண்டு ஒரு மனிதனுக்கு நேர்வழி கிடைப்பது சிவந்த ஒட்டகங்கள் கிடைப்பதைவிடச் சிறந்தது" எனக் கூறினார்கள் (புகாரி, முஸ்லீம்)

அழைப்புப் பணியும் இயக்க பிரிவுகளும்

இஸ்லாத்தை இம்மண்ணில் நிலைநாட்டுவதற்காகவே போராடுவதாக சொல்லும் இஸ்லாமிய, சமுதாய இயக்கங்கள், போராட்டத்தின் சமகால வடிவமான அழைப்புப் பணியை எடுத்து செல்வதில் பிறருக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆனால் வேதனைக்குரிய யதார்த்தம் என்னவென்றால் இயக்கங்களின் செயல்பாடுகள் அழைப்புப் பணியை வேகப்படுத்துவதற்குப் பதிலாக அழைப்புப் பணியின் வேகத்தை மட்டுப்படுத்துவதாகவும் அதற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் உள்ளன என்றால் அது பிழையான கருத்தல்ல.

பிரிவுகளால் ஏற்ப(ட்ட)டும் பாதிப்புகள்

தமிழகத்தில் 1990களுக்கு முன்னால் இயக்கங்கள் குறைவாக இருந்தாலும் அங்கங்கு சில தன்னலமற்ற தனிமனிதர்கள் மற்றும் சில அமைப்புகளின் தன்னலமற்ற தியாகம் காரணமாக மீனாட்சிபுரங்கள் ரஹ்மத் நகராக மாறும் அளவுக்கு அழைப்புப் பணி ஆரவாரமின்றி நடைபெறத்தான் செய்தது. ஆனால் 90களின் தொடக்கத்தில் இயக்கங்கள் அதிகரித்த பிறகு அழைப்புப் பணி வெகு ஆரவாரத்தோடு நடைபெறுவதாக காட்சியளித்தாலும் அதன் பக்க விளைவுகளும் அதிகம் என்பதை மறுக்க இயலாது. ஏனென்றால் ஒரே அடிப்படையில் உள்ள அமைப்புகளே வெகுசில காரணங்களுக்காகப் பலஅமைப்புகளாகச் சிதறிக் கிடப்பதால் ஒவ்வொன்றும் தத்தம் இருப்பை உறுதி செய்யவும் தங்கள் செல்வாக்கை அதிகரிப்பதிலுமே அதிகக் கவனம் செலுத்துவதால் அழைப்புப் பணியை இலக்காகக் கொண்டு செயற்படுவதற்குப் பதிலாக ஓய்வுநேர/பகுதிநேரப் பணியக்ச் செய்யும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அழைப்புப் பணி நிகழ்ச்சிகளை நடத்துவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி ஸ்லாட்டுகளில்கூட அழைப்புப் பணியைவிட அதிகமாகப் பிறசகோதர இயக்கங்களின் மீதான வசைபாடலே அதிகரித்து உள்ளது. இதனால் இயல்பாக அந்த நேரத்தில் இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் தொலைக்காட்சியைப் பார்க்கும் பிறமதச் சகோதரர்கள் இஸ்லாம் மீது வெறுப்பு கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இஸ்லாமிய அமைப்புகள் பிரிவுபடாமல் ஒற்றுமையாக இருந்தால் எந்தளவு வலிமையாக அழைப்புப் பணி இருக்கும் என்பதற்கு ஒரு நேரடியான உதாரணம். சென்னை மண்ணடிப்பகுதி முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பகுதி மட்டுமல்ல, பிற சமூக மக்களும் அதிகமாக கலந்து வாழ்வதால் அழைப்புப் பணிக்கு ஏற்ற களமாய் உள்ளது. மண்ணடியில் சமுதாய இயக்கங்களின் அலுவலகங்கள் பல குறுகிய சந்துகளில் இருக்கின்றன. எளிதாக அடையாளம் காண முடியாமல் குறுகிய சந்துகளில் இருக்கும் எத்தனையோ அமைப்புகளின் அலுவலகங்களில் உள்ள அழைப்புப் பணி மையங்களுக்கு எந்தப் பிறமதச் சகோதரர்கள் ஆர்வத்தோடு வருவார்கள்? எப்படி மக்களைத் தங்களை நோக்கி அழைக்க முடியும்?. அதேநேரத்தில் எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து அல்லது குறைந்தபட்சம் அழைப்புப் பணிக்காக மட்டுமாவது இணைந்து, சென்னை கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் மிகப்பெரும் கட்டடத்தில் Jesus Calls எனும் பெயரில் மிகப்பெரும் அழைப்பு நிலையம்போல் வைத்திருந்தால் அல்லாஹ் நாடினால் நம் முயற்சிகள் இப்போது இருப்பதைவிடப் பலமடங்கு பலன் தரும் என்பதில் ஐயமில்லை.

பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புபணி

இன்றைய சூழலில் பிரிவுகள் என்பன யதார்த்தபூர்வமானது. அவற்றையெல்லாம் ஒழித்து, ஓரே நாளில் ஓரே அமைப்பாக மாற வேண்டும் என்பது நல்ல இலட்சியமாக இருந்தாலும் உடனடியாக நடப்பதற்கான சாத்தியம் குறைவானது. எனவே அவற்றிற்கு மத்தியில் அழைப்புப் பணி எவ்வாறு செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

இருக்கின்ற அமைப்புகளில் பெரும்பான்மையானவை அழைப்புப் பணி செய்ய கூடியதாக அல்லது அதற்கு உதவி செய்ய கூடிய ஒன்றாக அல்லது குறைந்த பட்சம் ஆர்வப்படக் கூடிய ஒன்றாக உள்ளதைப் பார்க்கின்றோம். எனவே பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப் பணி இரண்டு விதமாகச் செய்யலாம்.

முதலாவதாக ஒவ்வொரு அமைப்பும் பல பணிகளைச் செய்தாலும் அவை ஒவ்வொன்றும் மக்கள் சேவை, பத்திரிகையியல், கல்வி், மருத்துவ உதவி, தற்காப்பு, சமூக சீர்திருத்தம், அமல்களில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், ஃபிக்ஹ் என ஏதேனும் ஒரு தளத்தில் பிரதானமாக செயற்படுவதைக் காண்கின்றோம். அதுபோல் சில அமைப்புகள் ஒரு சில மாநிலத்தில் மட்டும் அல்லது ஒரு சில பகுதிகளில் மட்டும் செயற்படுவதைக் காண்கின்றோம். எனவே எல்லா அமைப்புகளும் தங்கள் பகுதிகளில் தங்கள் தளங்களில் செயற்பட்டுக் கொண்டு, தங்கள் தொண்டர்களில் ஒரு பகுதியினரையும், அதுபோல் தங்கள் பொருளாதாரத்தில் ஒரு பகுதியையும் அழைப்புப் பணிக்கென அர்ப்பணிக்க வேண்டும். இப்படியாக எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து மேலே சொன்னதுபோல் சென்னை Jesus calls போன்று முக்கிய நகரங்களில் எல்லா வசதிகளுடன் எல்லாரையும் சென்றடையும் வகையில் மையங்களை நிறுவிக் கூட்டாக அழைப்புப் பணி செய்யலாம்.

எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து மேற்கண்டவாறு அழைப்புப் பணியில் ஈடுபட முடியாவிட்டால், குறைந்த பட்சம் எல்லா அமைப்புகளும் தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில், தங்கள் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவாறு அழைப்புப் பணியை திறம்படச் செய்ய வேண்டும். ஆனால் தங்கள் பிரசார பணியில் எக்காரணத்தைக் கொண்டும் பிற அமைப்புகளை விமர்சித்தலை, அதிலும் குறிப்பாகத் தனிமனித விமர்சனத்தை முழுமையாய்த் தவிர்க்க வேண்டும். பிறமதச் சகோதரர்களுக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ள பிரிவு பிரச்னைகளைப் பேசக் கூடாது. இஸ்லாத்துக்கு எதிரான தர்கா வழிபாடு, பித்அத்தான செயல்களை எதிர்ப்பதில் எச்சமரசமும் தேவையில்லை. தங்கள் பகுதியில் பிற அமைப்புகள் நடத்தும் அழைப்புப் பணி நிகழ்ச்சிகளுக்கு முடிந்த ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் தடைகற்களை ஏற்படுத்தாமலாவது இருக்க வேண்டும்.

எக்குழுவிலும் இல்லாத தனிநபர்களும் தங்களால் முடிந்த அளவு இஸ்லாத்தைப் பிறமக்களுக்கு எடுத்துச் சொல்வதில் முனைப்பாக இருக்க வேண்டும். தாங்கள் ஒரு ஜமாஅத்தில் இல்லை என்பது இப்பணியைத் தட்டிக் கழிப்பதற்கான காரணமாக இருக்கக் கூடாது. முடிந்தவரை மஹல்லா போன்ற குறுகிய வட்டத்திலாவது ஒத்த கருத்துள்ளவர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாக செயல்பட்டால் அவர்களின் பணி இன்னும் மிகப் பெரிய பலனைத் தோற்றுவிக்கும். இஸ்லாத்தைப் பற்றிய அறிவை, புத்தகங்கள் படித்தல், ஒலி – ஒளி பேழைகளைக் கேட்டல், அறிஞர்களுடன் கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அழைப்பு பணியின் பல் வேறு முறைகள்

எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஓரேஅமைப்பாக செயல்பட்டாலும் அல்லது ஒவ்வொன்றும் தனித்தனியே அழைப்புப் பணியைச் செய்தாலும் அல்லது தனித்தனி மனிதர்கள் அழைப்புப் பணியில் ஈடுபட்டாலும் எல்லோருக்கும் பொதுவான அழைப்புப் பணி முறைகளில் ஒரு சிலவற்றை விவரிக்கிறேன்.

தனிப்பட்ட மனிதர்கள் அழைப்புப் பணி செய்யும் உத்திகள்

இயக்க பின்புலம் இல்லாத தனிப்பட்ட மனிதர்கள்கூட அழைப்புப் பணி செய்ய ஏற்றமுறை தனிப்பட்ட முறையில் மக்களைச் சந்திப்பது. நாம் ஒவ்வொருவரும் தினந்தோறும் சந்திக்கும் மனிதர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். ஒன்று நாம் எப்போதும் அல்லது அடிக்கடி சந்திக்கும் அலுவலக நண்பர்கள், அண்டை வீட்டார்கள், அடிக்கடி போகும் கடை அல்லது உணவகத்தில் வேலை செய்பவர்கள் போன்றவர்கள். மற்றொன்று நம் பிரயாணத்தில் சந்திக்கும் நபர்கள், கடைவீதிகளில், டீ கடைகளில் சந்திக்கும் நபர்கள் போன்றோர்கள். இருவேறு குழுக்களிடம் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளைக் கையாண்டு அழைப்புப் பணி செய்ய வேண்டும்.

நடைமுறையில் கிறித்துவர்கள் செய்வதைப் போன்று பேருந்து நிலையம், இரயில் நிலையம், கடைகள் போன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இஸ்லாம் குறித்த பிரசுரங்களையும் புத்தகங்களையும் விநியோகிக்கலாம். மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் பொதுவாகத் தங்களை யாரும் விசாரிக்க வரமாட்டார்களா என்ற ஏக்கத்தில் இருப்பார்கள். அப்படிப்பட்ட நிலையிலுள்ளவர்களிடம் சென்று நோய் விசாரித்து ஆறுதல் மொழி சொல்லி அவர்களுக்காகப் பிராத்திப்பது அவர்களிடத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டுமல்ல, அது ஒரு சுன்னாவும் ஆகும். ஆனால் வருந்தத்தக்க விதத்தில் நமக்கு இதில் முன்னோடியாக அரபு நாடுகளில்கூட கிறித்துவர்களே உள்ளனர். அதுபோல் சிறைச்சாலைகளில் குறிப்பாக அமீரகத்தில் உள்ள சிறைகளில் முஸ்லிம்களில் சிலரே அவர்களை எந்த ஒரு சமுதாயச் சொந்தமும் சந்திக்காமல், கிறித்துவர்களின் குழு சென்று சந்தித்து பொருளாதார உதவி செய்ததன் ஒரே காரணத்தால் தன்னை விசாரிக்க சிறைக்கு வராத இஸ்லாமியச் சகோதரர்களைவிட, தன்ன்னிடம் வந்து கனிவான சொற்கள்பேசி, காசுபண உதவியும் செய்யக்கூடிய கிருஸ்த்துவக் குழுவினரிடம் ஈர்ப்பும் கொண்ட முஸ்லிம்களையும் நாம் காணமுடிகிறது. கிருஸ்த்துவர்கள் பின்பற்றும் பிரச்சார உத்தியைக் கையிலெடுத்து, சிறைகளில் நாம் அழைப்பு பணியைச் செய்தால் இறைவன் நாடினால் அதிலிருந்து வாய்மையான முஸ்லிம்கள் கிடைப்பார்கள்.

குழு ரீதியாக அழைப்புப் பணி செய்யும் உத்திகள்

தனிப்பட்ட முறையில் செய்வதைவிட ஜமாஅத்தாக அழைப்புப் பணி செய்வது கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குழுவாகச் செய்யப்பட வேண்டிய அழைப்புப் பணி உத்திகளில் சில:

* ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் விடுமுறை தினங்களில் எல்லா சமய மக்களையும் ஒன்று கூட்டி இஸ்லாம் குறித்த சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கு வரும் மக்களின் இஸ்லாம் குறித்த ஐயங்களுக்குத் தெளிவு தரும் வகையில் கேள்வி – பதில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யலாம்
* இஸ்லாம் குறித்த தெருமுனைப் பிரசாரங்கள் சேரிகள்முதல் அக்ரஹாரம்வரை நடத்தப்பட வேண்டும். நகரின் மையப்பகுதியில் இஸ்லாம் குறித்த செய்திகளை உதாரணத்திற்கு 112 வது அத்தியாயத்தை, "இறைவன் என்பவன் யார்?" அல்லது "இறைவனின் பண்புகள்" எனும் தலைப்பில் டிஜிட்டல் போர்டுகளாக வைக்கலாம்.
* பெருநாள் விடுமுறைகளில் பிற சமூக மக்களுக்கு விருந்து கொடுத்து இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் “ஈத் மிலன்” நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
* பொதுவான தலைப்புகளில் அனைத்து மதத்தாரையும் சேர்த்து, கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
* சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது தாராளமாக உதவி செய்வதன் மூலம் இஸ்லாம் குறித்த நல்லபிப்ராயத்தைப் பிறமக்களிடம் ஏற்படுத்தலாம்.
* இலவச ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள் போன்றவற்றை அனைத்து சமூகத்தினரும் வாழும் பகுதியில் நடத்தலாம்.
* முஸ்லிம்கள் தாங்கள் நடத்தும், தங்கும் உணவகங்களில் (Hotels) விருந்தினர் அறைகளில் குர்ஆன் மற்றும் இதர இஸ்லாமிய புத்தகங்களை வைக்கலாம்.
* தங்களுடைய திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலான குத்பாவில் பிறமதத்தாரை மையப்படுத்திப் பேசலாம். இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் புத்தகங்களையும் அவர்களுக்கு விநியோகிக்கலாம்.


ஊடகங்களின் மூலம் அழைப்புப் பணி உத்திகள்

இன்றைய உலகில் ஒரு கொள்கையைப் பிரசாரம் செய்வதில், ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்களிப்பை யாரும் புறக்கணிக்க முடியாது. அவ்வளவு வலிமையான ஊடகங்களை பயன்படுத்தி அழைப்புப் பணி செய்யும் உத்திகளில் சில:

* இஸ்லாத்தின் கொள்கைகளை எளிமையான நடையில் சொல்லும் புத்தகங்களை மலிவு விலைப் பதிப்பாக வெளியிடலாம்.
* புத்தகக் கண்காட்சிகளில் ஸ்டால் எடுத்து இஸ்லாமியப் புத்தகங்கள், அல்குர்ஆன், முஹம்மது (ஸல்) வரலாறு போன்ற புத்தகங்களைப் பிற சமூகத்தினருக்குக் கழிவு விலையில் கொடுக்க வேண்டும்.
* அஞ்சல் வழியாக மாற்று சமூகத்தினரின் வீடுகளுக்குப் புத்தகங்கள் அனுப்ப வேண்டும்.
* ஒவ்வோர் ஊரிலும் ஒரு பொது நூலகம் ஒன்றை ஏற்படுத்தி, அதில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் வைக்க வேண்டும்.
* முக்கிய செய்தித்தாள்களில் தினமும் அல்லது வாரம் ஒருமுறை அச்சூழலுக்கு ஏற்ற மாதிரி - உதாரணத்திற்கு அண்மையில் புதிதாக வந்துபோன ஸ்வைன் ப்ளு நோய் பற்றி - குரான் வசனங்கள், ஹதீஸ்களை வெளியிடலாம்.
* கேபிள் டி.வி. நெட்வொர்க்கைப் பயன்படுத்தி தினமும் இஸ்லாமியச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
* இணையத்தளங்களிலும் chat groupகளிலும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட விளக்கங்களை அளிக்கலாம்
* தற்போது தொலைக்காட்சிகளில் இஸ்லாமிய அமைப்புகள் கைவசம் உள்ள ஸ்லாட்டுகளில் பிற இயக்கத்தினரை விமர்சிப்பதை விடுத்து, அழைப்புப் பணி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

முடிவுரை

அழைப்புப் பணி என்பது ஒரு சில இயக்கங்களின் மீதோ அல்லது ஒரு சில குழுக்களின் மீதோ மட்டும் கடமையானதல்ல. மாறாக அது கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையானதாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதைத் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் செய்ய வேண்டும். இயக்கங்களின் பிரிவுகள் அழைப்புப் பணியில் பக்கவிளைவுகளை (side effects) ஏற்படுத்தியிருந்தாலும் அது நாம் அப்பணியைச் செய்யாமல் கைவிடுவதற்கு ஒரு காரணமாய் இருக்கக் கூடாது. மாறாக பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப் பணி பல்வேறு உத்திகளின் மூலம் செய்வது என்று இதுவரை பார்த்தவற்றிற்கு ஏற்ப நம் சக்திக்கு உட்பட்ட வகையில் அழைப்புப் பணி செய்ய வேண்டியது அவசியமானது மட்டுமல்ல இன்றைய சூழலில் அவசரமானதும் கூட.

- முஹம்மது ஃபெரோஸ்கான், அபூதபி


நன்றி : சத்திய மார்க்கம்


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8966
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum