தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வாழ்வின் இறுதி நாள்

Go down

வாழ்வின் இறுதி நாள்  Empty வாழ்வின் இறுதி நாள்

Post by முஸ்லிம் Thu Jun 16, 2011 3:49 pm

அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கிறார்கள்: திங்கட்கிழமையன்று முஸ்லிம்கள் அபூபக்ர் (ரழி) அவர்களைப் பின்தொடர்ந்து ஃபஜ்ர் தொழுது கொண்டிருக்கும் போது திடீரென ஆயிஷாவுடைய அறையின் திரையை நபி (ஸல்) அவர்கள் நீக்கி மக்கள் அணி அணியாக தொழுகையில் நிற்பதைப் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தார்கள். தொழ வைப்பதற்கு நபி (ஸல்) வருகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரழி) அவர்கள், தொழ வைக்கும் இடத்திலிருந்து சற்று பின்னே வரிசையை நோக்கி நகர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகையைப் பார்த்த மகிழ்ச்சியினால் முஸ்லிம்கள் தொழுகையில் நிலை குலைய ஆரம்பித்தனர். நபி (ஸல்) அவர்கள் 'உங்களது தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டு அறையில் நுழைந்து
திரையிட்டுக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இந்நிகழ்ச்சிக்குப் பின் இன்னொரு தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்களுக்குக் கிட்டவில்லை. முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) ஃபாத்திமாவை வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாகப் பேசினார்கள். அதைக் கேட்டவுடன் ஃபாத்திமா (ரழி) அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக் கூறவே ஃபாத்திமா (ரழி) சிரித்தார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:

இந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள் ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். எனக்கு ஏற்பட்ட இதே வலியினாலே நான் இறந்து விடுவேன் என நபி (ஸல்) கூறியபோது நான் அழுதேன். அவர்களது குடும்பத்தால் நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன் என்று நபி (ஸல்) கூறியபோது நான் சிரித்தேன்'' என்று ஃபாத்திமா (ரழி) பதில் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மேலும், ''அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா'' என்று நபி (ஸல்) நற்செய்தி கூறினார்கள்.
(ரஹ்மத்துல் லில் ஆலமீன்)

நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட ஃபாத்திமா (ரழி) ''எனது தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே!'' என்று வேதனைப்பட்டார்கள். உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு என்றுமே சிரமம் இருக்காது என்று நபி (ஸல்) ஆறுதல் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ஹசன், ஹுசைனை வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும் நல்கினார்கள்.

முன்பை விட வேதனை அதிகமானது. கைபர் போரின் போது உட்கொண்ட உணவில் கலக்கப்பட்ட
விஷத்தின் விளைவை நபி (ஸல்) உணர ஆரம்பித்தார்கள். ''ஆயிஷாவே! கைபர் தினத்தில் நான் உண்ட உணவின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த விஷத்தினால் எனது நரம்புகள் துண்டாவதை நான் உணர்கிறேன்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

தங்கள் முகத்திலிருந்த போர்வையை நபி (ஸல்) தூக்கி எறிந்தார்கள். அவர்கள் மீது திரும்ப போர்த்தினால் முகத்தில் இருப்பதை மட்டும் அகற்றி விடுவார்கள். இந்நிலையில் சிலவற்றை நபி (ஸல்) கூறினார்கள். அதுவே அவர்களது கடைசி பேச்சாகும். அதாவது: அல்லாஹ்வின் சாபம் யூத, கிறிஸ்தவர்கள் மீது உண்டாகட்டும்! அவர்கள் தங்களது இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை வணங்குமிடமாக மாற்றிக் கொண்டார்கள். அரபிகளின் பூமியில் இரண்டு மார்க்கங்கள் இருக்கக் கூடாது.'' (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅத்)

தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைகள்) பேணுங்கள் என்று பலமுறை அறிவுறுத்தினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மரணத் தருவாயில்...

இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக்
கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:
''நபி (ஸல்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில்
மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும்
ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். ''நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?'' என்று கேட்டபோது, ''ஆம்!'' என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது
அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. ''நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?'' என்று கேட்டேன். தலை அசைத்து ''ஆம்!'' என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.''

இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: ''நபி (ஸல்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல்
துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். ''லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன'' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என
ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள்.நபி (ஸல்) அப்போது ''இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்... அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை... (ஸஹீஹுல் புகாரி)

கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.
ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.

அர்ரஹீக்குல் மக்தூம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum