ரமளான் மாதத்தின் சிறப்பு !

Go down

ரமளான் மாதத்தின் சிறப்பு !

Post by முஸ்லிம் on Sat Jul 30, 2011 4:53 pm

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,


அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நாம் வெகு விரைவில் புனிதமிக்க ரமளான்மாதத்தை அடைய இருக்கிறோம்.அந்த மாதத்தை அடைவதற்கு முன் அதன் சிறப்பையும் கண்ணியத்தையும் , நம் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டு நடப்பது அவசியம்.


அல்லாஹ் ரமளான் மாதத்தை சிறப்புமிக்க மாதமாக ஆக்கியிருக்கிறான் காரணம் நமக்கு நேர்வழி காட்டும் சங்கைமிக்க திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாக ரமளான் மாதம் திகழ்கிறது.


இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.(அல்குர்ஆன் 2:185)

ரமளான் மாதத்திற்கு சிறப்பாக அமைந்த திருக்குர்ஆனை அதிகமாக இந்த மாதத்தில் ஓதவேண்டும் குறிப்பாக அதன் பொருளோடு ஓதுவது சிறந்தது.
நோன்பு


ரமளான் மாதத்தின் மிகப் பெரும் பரிசாக அல்லாஹ் நோன்பை நமக்கு கடமையாக்கி இருக்கிறான்.நோன்பின் நன்மைகளை பற்றி நபி(ஸல்) அவர்கள் பல இடங்களில் கூறி இருக்கிறார்கள்.ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: முஸ்லிம் 1945)


என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: புகாரி 1894, 1904)
சாதாரணமாக நோன்பிற்கு அதிக நன்மை இருந்தாலும் ரமாளான் மாதத்தின் நோன்பிற்கு வேறு எந்த வணக்கத்திற்கும் இல்லாத அளவு சிறப்பு இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.ரமளான் மாதத்தில் நம்பிக்கை கொண்டு எதிர்பார்த்து நோன்பு நோர்பவர்களுக்கு நாம் செய்த முன் பாவங்களை மண்ணிப்பதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்.நோன்பு எனும் சிறிய அமலுக்காக இவ்வளவு பெரிய பரிசை,நன்மையை விட்டுவிடக் கூடாது.
யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: புகாரி 38, 1901, 2014)

இந்த ஹதீஸில் நாம் மேலும் கவனிக்க வேண்டியது ,நோன்பை நோற்கும் முன் அல்லாஹ் மேல் அதிக நம்பிக்கை கொண்டு இந்த செயலுக்காக அல்லாஹ் மிகப் பெரிய கூலியை நமக்கு வழங்க இருக்கிறான் என்று உறுதியாக நம்புபவருக்கே முன் பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்.
லைலதுல் கத்ர்


இந்த ரமளான் மாதத்தில் நோன்பை தவிர்த்து இன்னொரு அருட்கொடையாக திருக்குர்ஆன் இறக்கப்பட்ட லைலதுல் கத்ர் எனும் பரக்கத் நிறைந்த இரவை அல்லாஹ் பொக்கிஷமாக கொடுத்திருக்கிறான்.ஆயிரம் மாதங்களை விட இந்த ஒரு இரவு சிறப்பு மிக்கதாக அல்லாஹ் தன் திருமறையில் தெரிவிக்கிறான்.

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குரான் 97:1-5)

இந்த இரவின் புனிதத்தை அறியாத பலர், இதை ஒரு அலட்சியமாக கருதி இந்த இரவை வீண் காரியம் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.இப்படிப் பட்ட ஒரு வாய்ப்பை நாம் தழுவ விடக் கூடாது.வெறும் 10 இரவுகள் கண் விழிப்பதற்கு 1000 மாதங்களை விட அதிகமான நன்மைகளை பெற்றுத் தரும் இந்த தொழுகையை நாமும் தொழுது நமது குடும்பத்தினரையும்,நண்பர்களையும் தொழுமாறு வலியுறுத்த வேண்டும்.பிரார்த்தனை
நோன்பு நோர்கும்போது நம் பிரார்த்தனைகளை அதிகப் படுத்திக் கொள்ளவேண்டும்.நம்முடைய தேவைகளையும் ,செய்த பாவங்களுக்கு மன்னிப்பையும் அதிகமாக இறைவனிடம் கேட்டு அழுது மன்றாட வேண்டும் ஏனெனில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப் படுவதில்லை என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறி இருக்கிறார்கள்.'மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. தனது நோன்பைத் துறக்கும் நோன்பாளியின் பிரார்த்தனை, நேர்மையான அரசனின் பிரார்த்தனை, (அநீதி இழைக்கப்பட்ட) பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவைதாம் அவை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668).தர்மம்


ரமளான் மாதத்தில் நம்முடைய தர்மத்தை அதிகப் படுத்திக் கொள்ளவேண்டும்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் வாரி வழங்கியதை ஜிப்ரில்(அலை) அவர்களே சிறப்பித்து கூறி இருப்பதை புகாரியில் நாம் பார்க்க முடிகிறது.


நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமளான் மாதத்தில் நபி(ஸல்)அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி,வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை)ரமலானின் ஒவ்வொரு இரவும் -ரமளான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். நூல் புகாரி. 1902

அனைத்து தரப்பு மக்களும் நல்ல விதத்தில் பெருநாளை கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் ஸதகத்துல் ஃபித்ர் எனும் தர்மத்தை கடமையாக்கி உள்ளது.ஒரு ஆளுக்கு 10 ரூபாயை மோதினாருக்கு கொடுத்து நம் கடமையை செய்து விட்டோம் என்று இல்லாமல் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு அளவு அருசி(தானியம்) அல்லது அதற்குண்டான தொகையை கொடுக்க வேண்டும்.இரு கைகள் கொள்ளுமளவுக்கு அரிசியை நான்கு தடவை அள்ளினானால் எவ்வளவு வருமோ அது தான் ஒரு ஸாவு எனப்படும்.


முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1503)ஒழுக்கம்


ஒரு முஸ்லிம் எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் ஒழுக்கத்தை பேணுவதை தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.ஆயினும் இந்த ரமளான் மாதத்தில் கூடுதல் பேணுதலாக இருப்பது அவசியம்.கஷ்டப்பட்டு 30 நாட்கள் நோன்பு நோற்று இரவு நின்று வணங்கியும் எந்த பயனும் இல்லாமல் போய்விடக் கூடாது. தீய செயல் செய்யக் கூடியவர் பசியாக இருந்து நோன்பு நோற்பது எனக்கு தேவையில்லாதது என்று கடுமையாக அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.


பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும், தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: புகாரி 1903, 6057
பொய் சொல்வதை நாம் சிறிய பாவம் என்றே எண்ணி வருகிறோம் ஆனால் பொய் பேச்சு நோன்பை நிராகரிக்கக் கூடிய அளவுக்கு தீய செயலாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.வியாபாபாரிகள் தங்களுடைய வியாபாரம் பெருக வேண்டும் என்பதற்காக சர்வ சாதாரணமாக பொய் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளட்டும் ! தங்களுடைய நோன்பின் நன்மையை பாதுகாத்துக் கொள்ளட்டும்.நம் சமுதாயத்தில் அவதூறு பரப்புவதும் மிக சாதாரணமாக நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது குறிப்பாக பெண்கள் அவதூறு பரப்புவதில் அதிகமாக ஈடுபடுகின்றனர்.இவர்களும் தங்கள் நாவை பாதுகாத்து நல்ல விஷயங்களை பேசி நன்மையை தேடிக் கொள்ளவேண்டும்.இன்றைய கால கட்டத்தில் கூற வேண்டிய முக்கியமான ஒன்று தொலைகாட்சி.தொலைகாட்சியில் நல்ல விஷயங்களும் இருந்தாலும் கெட்ட விஷயங்களே அதிகமாக இருக்கிறது.ஷைத்தான் தன் வேலையை சுலபமாக செய்ய ஒரு கருவி.இஸ்லாமிய நிகழ்ச்சி,செய்திகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தொலைகாட்சியை பயன்படுத்தி விட்டு ஆட்டம் பாட்டம் ,சினிமா போன்ற மார்க்கம் தடை செய்த நிகழ்ச்சிகளை விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள்.உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் தொலைக்காட்சி பக்கம் நெருங்க அனுமதிக்காதீர்கள்.எனவே அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே ! வர இருக்கும் ரமளான் மதத்தில் இருந்தாவது பொய் சொல்வதை விட்டும் ,அவதூறு பரப்புவதை விட்டும்,மார்க்க முரனான காரியங்களில் கலந்து கொள்வதை விட்டும் இன்னும் பிற தீய காரியங்களை விட்டும் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.இது போன்ற தீய காரியங்களை தவிர்த்து விட்டு திருக் குர்ஆனை ஓதுதல்,தொழுகை மற்றும் பிரார்த்தனைகளை அதிககப்படுத்திக் கொள்ளுங்கள்.நாம் மேற் கூறிய காரியம் ரமளான் மாதத்திற்கு மட்டும் உள்ளது அல்ல மாறாக மற்ற அனைத்து மாதத்திற்கும் நாம் பேணுதலாக இருப்பதற்கு இது ஒரு பயிற்சி காலமாக இருக்கிறது என்பதாக புரிந்து கொள்ளவேண்டும்.


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:184)

நாம் இறைவனை அஞ்சுவதர்காகவே நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளதாக நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் கூறுகிறான்.இறைவனை அதிகமாக அஞ்சி நற்காரியங்களில் அதிகமாக ஈடுபட்டு தீமையான காரியங்களில் இருந்து விலகி ,வர இருக்கும் ரமளான் மாதத்தை பயனுள்ளதாகவும் அதிக நன்மை பெற்றுத் தரக்கூடியதாகவும் ஆக்கிக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

நன்றி
ஆசிரியர் : முஹமது ரஃபீக் அவர்கள்
ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்

avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8972
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum