தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

லிபியாவில் எண்ணெய் வெறி பயங்கரவாதிகளின் அட்டூழியம் ஆரம்பம்

Go down

லிபியாவில் எண்ணெய் வெறி பயங்கரவாதிகளின் அட்டூழியம் ஆரம்பம்  Empty லிபியாவில் எண்ணெய் வெறி பயங்கரவாதிகளின் அட்டூழியம் ஆரம்பம்

Post by முஸ்லிம் Thu Mar 24, 2011 4:32 pm

முன்கதை சுருக்கம் :


இந்த உலகில்  எண்ணெய் வள நாடுகளின் எண்ணெய் வளத்தை, தக்க கூலியை பெற்றுக்கொண்டு தன் தொழில்நுட்பத்தின் மூலம் வெளிக்கொணர்ந்து, அவர்களை சிறு பணக்காரர்களாக்கி, பின்னர் தன் பலமிக்க ஆயுத அடக்குமுறை மற்றும் பரந்த பொருளாதார நிர்பந்தம் மூலம், மேலும் மேலும் எண்ணெயை உறிஞ்சி, இதன் மூலம் இந்நாடுகளை விட  மிக அதிக பயன் அடைந்து பெரும்பணக்காரனாகி தன் வயிற்றை கழுவும்'தொழில்நுட்ப வல்லரசு நாட்டாமை' நாடுகள் இவ்வுலகில் சில உண்டு. 'இந்த அநியாயத்தை தட்டிக்கேட்பதால் தமக்கு பாதகத்தை தவிர வேறு எந்த ஒரு சாதகமும் இல்லை' என்பதை நன்கு உணர்ந்து, தன்னிடம் மனிதாபிமானம் என்ற ஒன்றையே கொன்று புதைத்துவிட்டு அமைதியாக வேடிக்கை பார்க்கும் சுயநல நாடுகள்  பல உள்ளன இவ்வுலகில்.


இனி  விரிவாக......,



அல்ஜீரியா, நைஜீரியா போன்ற ஆஃப்ரிக்க நாடுகள், லிபியாவைவிட அதிக அளவுக்கு பூமியிலிருந்து எண்ணெய் உறிஞ்சினாலும், ஆஃப்ரிக்காவின் எண்ணெய் வள இருப்பு நாடுகளில் லிபியாவிற்குத்தான் முதலிடம். மேலும் இதன் கச்சா எண்ணெயில் Sulphur எனும் impurity மிகவும் குறைவு என்பதால், அதிக தரமானது. சந்தையில் இதன் விலை அதிகம். 



லிபியாவிற்கு கச்சா எண்ணெய் எடுப்பதில் உலகில் 17-வது இடம். நாளொன்றுக்கு 1.6 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் எடுத்தாலும், அதில் 85% அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு ரிஃபைனரிகளுக்குத்தான் ஏற்றுமதி செய்கிறது. வெனிசூலா, சீனா, ரஷ்யா போன்ற சோஷலிச கம்யுனிஸ  நாடுகள் கூட  ஓட்டுக்காக சும்மா ஒப்புக்கு போலியாகத்தான் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பை காட்டினாலும், இந்நாடுகள் தங்கள் கச்சா எண்ணெயில் ஒரு பெரும் பகுதியை மறக்காமல் 'எண்ணெய் மோகம் கெட்டு அலையும்' அமெரிக்க ரிஃபைனரிகளுக்கு ஏற்றுமதி செய்ய தவறுவதேயில்லை. பின்னே...? நாட்டாமைகளின் எண்ணற்ற கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் ரிஃபைனரிகளுக்கு லாபம் கிடைக்க வேண்டாமா...? 


இவ்வுலகில், அமெரிக்காவிற்கு ஒரு சொட்டு கச்சா எண்ணெயைக்கூட ஏற்றுமதி செய்யாத ஒரே நாடு ஈரான் மட்டுமே..! இது கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது..! எனில், இவ்வுலகில் அமெரிக்காவின் உண்மையான ஒரே எதிரி நாடு ஈரான்தானா..?



இவ்வளவு எண்ணெய் வளமிருந்தும் லிபியாவில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகளாக உள்ளனர். இந்நிலையில்தான், ஜனநாயகம் என்ற போர்வைக்குள் தம்மை அதிபராக பிரகடனப்படுத்திக்கொண்டு கடந்த 41 ஆண்டுகளாக மேற்கத்திய வல்லரசுகளின் ஆதரவுடன் லிபியாவை தனது குடும்ப சொத்தைப்போல் ஆண்டு அனுபவித்து வந்த சர்வாதிகாரி முஅம்மர் கட்டாஃபியை அதிகாரத்திலிருந்து அகற்றிவிட்டு, உண்மையான ஜனநாயகத்தை அந்நாட்டில் நிலை நாட்டுவதற்கான மக்கள் போராட்டம் சென்ற மாதங்களில் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. 


தம்மை எதிர்ப்போரை, அவர்கள் தம் சொந்த நாட்டுமக்களே ஆயினும், "அவர்களில் கடைசியாக ஒருவர் மிஞ்சும் வரையிலும் ஒட்டுமொத்தமாக கொன்றொழித்தே தீருவேன்" என்று டிவியில் சூளுரைத்த கொலைகார கட்டாஃபியின் எல்லாவித கொடூரமான நடவடிக்கைகளையும், அவரின் மிகச்சிறுபான்மை ஆதரவு இனக்குழுவினரின் அடாவடி தாக்குதல்களையும் ஒரேநேரத்தில் துணிவுடன் எதிர்கொண்டு போராடி வந்தனர் அந்நாட்டு பெரும்பாண்மை போராட்ட புரட்சியாளர்களான பொதுமக்கள். 


சிறிது சிறிதாக எண்ணெய் வளமிக்க பகுதிகள் உள்பட லிபியாவின் முக்கிய பிரதேசங்களை எல்லாம் கைப்பற்றிய போராளிகள் தலைநகருக்கு மிக அருகே வரை முன்னேறி தங்களது கட்டுப்பாட்டிற்குள் அவற்றை கொண்டு வந்து விட்டனர். தனக்கு ஆதரவான ராணுவத்தின் தோல்வியினால் கொதிப்படைந்த கட்டாஃபி சுற்றுவட்டார ஆப்ரிக்க அயல் நாடுகளிலுருந்து கூலிப் படைகளை இறக்குமதி செய்து, அவர்கள் கையில் ராணுவ ஆயுதங்களை கொடுத்து, புரட்சியாளர்களை கொன்று குவிப்பத்தின் மூலம் தன் 'ஆட்சி'யையும் லிபியா என்ற தன் சொத்தையும் காப்பாற்றுவதற்கான இறுதிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்.


இந்த சூழலில், நாட்டின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள 'லிபிய தேசிய தற்காலிக ஆட்சிமாற்றக்குழு' (Libyan National Transitional Council) என்று ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, கட்டாஃபியின் (முன்னாள்) சட்ட அமைச்சர் முஸ்தஃபா அப்துல் ஜலீலின் தலைமையில் தற்காலிக அரசு நிறுவப்பட்டு உள்ளதாக புரட்சியாளர்கள் அறிவித்தனர். 'ஒருவேளை புரட்சியின் போது கட்டாஃபி பதவி விலகவோ அல்லது நாட்டை விட்டு ஓடவோ அல்லது தற்கொலை செய்து கொள்ளவோ அல்லது கொல்லப்படவோ செய்தால் கூட லிபியா தலைமை இல்லாமல் திண்டாடும் சூழலுக்கு தள்ளப்படாது' என்பதைத்தான் இச்சம்பவங்கள் உலகத்திற்கு உணர்த்தின.


அதேநேரம், கட்டாஃபியின் வீழ்ச்சியும், மக்கள் எழுச்சியும் நிதர்சனமாகலாம் என்பதை தெள்ளத்தெளிவாக அறிந்துக்கொண்ட அமெரிக்கா, புரட்சியை முறியடிக்கவும், அதன் வெற்றியை தானே தட்டிச்செல்லவும் முயல்கிறது. முதலில் பொறுமையாக வேடிக்கை பார்த்துவிட்டு, கட்டாஃபி வீழும் நிலை வந்ததும், 'லிபியா மக்களை காப்போம், கடாஃபியை அகற்றுவோம்' என்ற அமெரிக்காவின் உத்வேகம் இதனை நிரூபிக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை, இந்த கட்டாஃபி இல்லையேல் இவரை விட 'சிறந்த' (சொன்ன சொல்லுக்கு மறு பேச்சு பேசாத) வேறு ஒரு முட்டா(ள்)ஃபி...!


ஆனால், அமெரிக்காவின் சதிவலையை உடனே அடையாளங்கண்டு கொண்டு விட்ட 'லிபியாவின் தேசிய தற்காலிக ஆட்சிமாற்றக் குழு', அமெரிக்கா உட்பட எல்லாவிதமான வெளிநாட்டு தலையீட்டையும், ராணுவ தலையீட்டையும் தாங்கள் எதிர்ப்பதாக உறுதியாக தெரிவித்தது. லிபிய உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு இல்லாமலேயே லிபியாவின் எதிர்கட்சியினருக்கு அவர்கள் பொறுப்பேற்ற வேலையை பூரணப்படுத்த முடியும் என்ற தன்னம்பிக்கை இருப்பதை, 'தனது கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அடிக்கப்படும் ஆப்பு' என்பதை நன்கு அறிந்த அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் விழித்துக்கொண்டன. 



இதுபோன்ற அடிபொடிகளின் ஆட்சி அகற்றப்படும் போது, இஸ்ரேலுக்கு சலுகை விலையில் பல்லாண்டுகளாய் இருபத்து நான்கு மணிநேரமும் ஹோஸ்னி முபாரக்கால் தரப்பட்டு வந்த  எரிவாயுவை இறுக்கி மூடச்சொல்லி எகிப்து நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது போன்ற விபரீதங்கள் நிகழ்வது வேறு மேற்குலகத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.



லிபிய புரட்சியாளர்களின் தீரமிக்க விவேகமான நேர்மையான நிலைப்பாடு இது, என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. தினமும் ஏறத்தாழ 1 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெக்கும் மேலே தினமும் ஏற்றுமதி செய்யும் லிபியாவின் எண்ணெய் வளத்தின் மீதுதான் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு நாட்டமெல்லாம். அதையே வாலை ஆட்டிக்கொண்டு சுற்றி சுற்றி வருகின்றன. அதற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. அதுதான் அவர்களின் லட்சியம். மாறாக, லிபிய உள்நாட்டு ஜனநாயகமோ, மக்களுக்கு சுதந்திரமோ நோக்கமே அல்ல. இதைவிட கொடூரமாக ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த ராஜபக்சேயை ஏன் கண்டுகொள்ளவில்லை? அங்கே எண்ணெய் இல்லை. இதனை உணர்ந்த அரபு எண்ணெய் நாடுகளின் கூட்டமைப்பான OIC-யும் லிபியாவில் வெளிநாட்டு தலையீட்டை கண்டித்துள்ளது.


ஆக, தங்களின் லிபியாவிலிருந்தான இந்த எண்ணெய் இறக்குமதிக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் ஈராக், ஆப்கானிஸ்தான் என இன்னும் பல நாடுகளில் நிறுவியது போல லிபியாவிலும் ஒரு பொம்மை அரசை உருவாக்குவதுதான் அமெரிக்காவின் லட்சியம். அந்நாடுகளிலெல்லாம் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு பின்னரும் உள்நாட்டு அமைதியோ, ஜனநாயகமோ தழைத்தோங்கவில்லை என்பதும் பயங்கரவாதம் தலையெடுத்ததும்தான்  இதுவரை  நிரூபணமாகியுள்ளது.


பொதுவாக, தம்மை ஆதரிக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்கள், அவர்கள் எவ்வளவு கொடூரங்களை புரிந்த பிறகும் இறுதிவரை ஆதரிப்பதும், கடைசியில் அவர்கள் மக்கள் எழுச்சியினால் பதவி விலக நேரும் வேளையில், மக்களிடமிருந்து ஆட்சியை தந்திரமாக தட்டிப்பறிப்பதும்தான் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியம் இதுநாள் வரை கடைப்பிடித்துவரும் கொள்கையாகும். விதிவிலக்காக... அன்று ஈரான், இன்று எகிப்து போன்ற சில நாடுகளில், மொத்த நாட்டு மக்களின் புத்திசாலித்தனமான தனித்துவ ஒற்றுமையால், வல்லரசுகளின் எண்ணம் நிறைவேறாமலோ அல்லது சூழ்ச்சிகள் பலிக்காமலோ இருந்த்திருக்கலாம். (டுனிசியாவை மறந்து விடுங்கள்... அது எண்ணெய் அல்லது எரிவாயு இல்லாத வல்லரசுகளுக்கு உபயோகமற்ற நாடு).



சென்றவாரம், வான் தாக்குதல் மூலமாகவும் தன் மக்களையே கொல்லும் கொடூர கொலைகார ராட்சஸனாக மாறியுள்ள கட்டாஃபிக்கு எதிராக, உள்நாட்டு கலவரத்தின் மூலம் இரத்தக்களரியாகும் லிபியாவில் வான்வழிப் போக்குவரத்திற்கு தடைவிதிக்க இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்தது. இவ்விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டுமெனவும் அதேவேளையில் வெளிநாட்டு தலையீடு கூடாது எனவும் மீண்டும் O.I.C கேட்டுக்கொண்டது. 


ஆனால், ஐ.நா, அமெரிக்க-ஐரோப்பிய யூனியன் முதலில் லிபியாவின் வானில் தம்மை தவிர(?) வேறு எந்த விமானமும் பறக்க கூடாது என்று முன்னெச்செரிக்கையாக தடை விதித்துக்கொண்டன. இதே நேரம், கட்டாஃபி மக்கள் மீதான தன் வான் மற்றும் தரைவழி தாக்குதலை நிறுத்திக்கொண்டு சமரச பேச்சுவார்த்தைக்கு அறிவித்த பின்னும், அதை பொருட்படுத்தாது, அமெரிக்க-ஐரோப்பிய நேச படையினர் லிபியாவின் கடற்பகுதிக்கு போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பி, தங்களின் வான் தாக்குதல் போரை லிபியாவின் மீது பிடிவாதமாக கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன.


"லிபிய மக்களை கட்டாஃபியிடம் இருந்து காக்க" என்று புறப்படுவோர்கள், 'இத்தாக்குதலில் லிபிய மக்களும் இறக்கலாம் (!?!?!?)' என்றும் சொல்லியுள்ளார்கள்...! சொன்னது போலவே நேற்று முன்தினம் லிபிய மருத்துவமனையையும் கல்விக் கூடத்தையும் கூட தாக்கி 50 அப்பாவி லிபிய மக்கள் மரணம்..! இதுவரை உள்நாட்டு சர்வாதிகாரி கட்டாஃபியின் பயங்கரவாதம் ஆயிரக்கணக்கான மக்களை பலிவாங்கி முடிந்து, இப்போது அயல்நாட்டு சர்வாதிகாரி அமெரிக்கா தலைமையில் பன்னாட்டு கூட்டுப்படைகளின் பயங்கரவாதம் லிபியாவில் ஆரம்பமாகிவிட்டது.


இவ்விவகாரத்தில் லிபிய மக்களுக்கு உதவுவதுதான் ஜனநாயக நாடுகள் மற்றும் அமைப்புகளின் கடமையாகும். தாக்கி அழிப்பது அல்ல. கட்டாஃபியின் ஆட்சிக் கவிழ்ந்து புதிய பொம்மை அரசை அமெரிக்கா உருவாக்கும் பொழுது பயங்கரவாதம் நாட்டியமாடும் இன்னொரு இராக்காகவும், லிபியா மாறலாம்.


மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மூலம் ஜனநாயகம் மலர்ந்தால், அதற்கு அமெரிக்க ஐரோப்பிய தடைகள் இருந்தாலும், லிபியாவிற்கு அதன் இறையாண்மையையும், சுய நிர்ணய உரிமையையும் பாதுகாக்க உதவி செய்வதுதான் சர்வதேச சமூகத்தின் கடமையாகும். எந்த நாட்டிக்கு இதற்கான தகுதியும் பொதுநல எண்ணமும் உள்ளது..? சிந்தியுங்கள்.


எண்ணெய் தராத தன் எதிரி ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வளர்த்த கடா (சதாம் ஹுசேன்), பேராசையால் தன்னுடைய இன்னொரு எண்ணெய் அடிமையான  குவைத்தை கைப்பற்றி அதன்மூலம் தன் மாரில் பாய்ந்த போது அவரை அழித்து இராக்கிய எண்ணெய் வளத்தை கைப்பற்றியது.



அளவிட முடியாத அளவு இயற்கை எரிவாயுவும் மொத்தமாக தன் எதிரி ரஷ்யாவிற்கு செல்லக்கூடாது என்பதற்காக, ஆப்கன் அதிபர் நஜிபுல்லாவிற்கு எதிராக அமெரிக்கா  வளர்த்த கடா (ஒசாமா பின் லேடன் & தலிபான்), பிற்காலத்தில் அவர்களின் ஆட்சியின் போது, தன் மாரில் பாய்ந்த போது அவர்களை அழித்து எரிவாயுக்காக ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது.


இப்போது, லிபியாவில் தான் வளர்த்த கடா,  "அல் கைதா பயங்கரவாதிகள் உன் நாட்டில் கலகம்செய்தால் நீ என்ன செய்வாயோ அதேயேதானே நான் லிபியாவில் செய்கிறேன்" ---என்று தன்னைப்போலவே பயங்கரவாதியாக உதார் விடுவதை பார்த்து பொறுக்காமல், கட்டாஃபியை அழிக்க முன்வந்திருக்கிறது. 



''எண்ணெய்  வளம் இல்லாத நாட்டில் பிறந்தது வரமா அல்லது எண்ணெய் வளம் உள்ள நாட்டில் பிறப்பது சாபமா என்று புரியவில்லை...'' என்று என்னுடன் பணிபுரியும் ஒரு வட இந்திய சகோ ஒருவர் அடிக்கடி சொல்வார்...!


இராக், ஆஃப்கானிஸ்தான் அடுத்து லிபியா என இன்றைய தேதியில் மொழி, சாதி, மத, இன, கொள்கை வெறிகளை விட மிக அதிக பயங்கரங்களை உண்டாக்கும் என்று தணியும் அமெரிக்காவின் இந்த 'எண்ணெய் வெறி'..?


முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10942
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum