தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!

Go down

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!  Empty உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!

Post by முஸ்லிம் Wed Nov 10, 2010 3:23 pm

1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.


நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். 




நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.

 

மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!


 

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

 

மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.

 

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

 

இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.

 


4. பொறாமை கொள்ளாதீர்!

 

வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!

 

நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

 

5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

 

உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.


 

6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!

 

இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.

 

7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

 

இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.

 

8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்


 

தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.


 


சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம்.  ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.

 

9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

 

வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.

 

10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!


 

"இது என்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

 

முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?


- வாசகர்: இளைய வைகை


நன்றி :


இந்நேரம்.காம்


முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10951
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum