தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குர்பானி கொடுப்பதின் சட்டங்கள்

Go down

குர்பானி கொடுப்பதின் சட்டங்கள்  Empty குர்பானி கொடுப்பதின் சட்டங்கள்

Post by முஸ்லிம் Sat Nov 13, 2010 4:33 pm

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான "ஹஜ்" கடமையை நிறைவேற்ற உலகின் அனைத்து திசைகளிலுமுள்ள இஸ்லாமியர்கள் கஃஅபத்துல்லாஹ்வை நோக்கிப் புனிதப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் இந்நிலையில், நாம் துல்ஹஜ் மாதத்தை அடைந்திருக்கிறோம்.



இந்த துல்ஹஜ் மாதமானது ஹஜ் செய்யக்கூடியவர்களுக்கு மட்டும் வணக்கத்திற்குரிய‌ மாதமல்ல‌! நபி இப்ராஹீம்(அலை)மற்றும் அவர்களின் மைந்தரான‌ இஸ்மாயீல்(அலை)அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக, உலக முஸ்லிம்கள் அனைவரும் இறைவனுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளை அறுத்துப் பலியிடும் ஒரு வணக்க‌த்தை நிறைவேற்றும் "ஈதுல் அள்ஹா" என்று சொல்லப்படும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் மாதமாகும். எனவே, இந்த துல்ஹஜ் மாதத்தில் "குர்பானி" என்று சொல்லப்படும் 'அறுத்துப் பலியிடுதல்' பற்றி இஸ்லாம் வகுத்துள்ள சட்டங்களை இப்போது நினைவுபடுத்திக் கொள்வோம்.




இஸ்லாத்தின் பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் "ஸதகத்துல் ஃபித்ரு" என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பதுபோல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் "உள்ஹியா" எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது.



நபி(ஸல்)அவர்கள் காட்டித் தந்த வணக்கங்களில் "குர்பானி" கொடுப்பது என்பதும் ஒரு வண‌க்கமாகும். அல்லாஹ்தஆலா தனது திருமறையில் கூறுகிறான்.



"உமது இறைவனுக்காக தொழுது, மேலும் (அவனுக்காக) அறுத்துப் பலியிடுவீராக!" (அல்குர்ஆன் 108:2)



நபி இப்ராஹீம்(அலை)அவர்கள் தமது மகனைப் பலியிடுவதாகக் கனவு கண்டு, அது இறைக் கட்டளை என்பதையுணர்ந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள். அப்போது இறைக் கட்டளைக்கு உடனே அடிபணியும் அவர்களின் பணிவையும் தியாகத்தையும் இறைவன் ஏற்றுக்கொண்டு, அதைத் தடுத்து நிறுத்தி ஓர் ஆட்டைப் பலியிடச் செய்தான். இந்த வரலாற்று நிகழ்ச்சி திருக்குர்ஆனில் 37:102- 108 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. அதன் இறுதியில் "பின்வரும் மக்களிடையே இந்த நடைமுறையை நாம் விட்டுவைத்தோம்" என்று இறைவன் குறிப்பிடுகிறான்.




குர்பானி யார் மீது கடமை?



குர்பானி கொடுப்பது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்றவேண்டும். ஏழ்மைப்பட்டவர்கள் மீது கடமையில்லை என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் வசதி இருக்கிறதோ இல்லையோ, மற்ற தேவையற்ற விஷய‌ங்களுக்கெல்லாம் கணக்கு பார்க்காமல் செலவு செய்யும் சிலர் , குர்பானி போன்றவற்றுக்கு மட்டும் ரொம்ப யோசனை செய்வார்கள். எனவே இதுபோன்ற‌ விஷயத்தில் தங்கள் மீது இது கடமையாகிவிட்டதா, இல்லையா என்பதை அவரவர் மனசாட்சியுடன் முடிவு செய்துக் கொள்வதே நல்லது. அதே சமயம் உண்மையிலேயே வசதியில்லாதவர்கள் சிரமப்பட்டு கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டுமென்பது அவசியமல்லாத ஒன்று. ஏனெனில் எந்த ஒருவரையும் அவரது சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். எனவே குர்பானி கொடுக்குமளவு வசதி பெற்றவர்கள், அவரவர் தகுதிக்குத் தக்கவாறு தனியாகவோ, கூட்டாகவோ கொடுக்கலாம்.



ஆடு, மாடு, ஒட்டகம்



இஸ்லாம் குறிப்பிட்ட சில பிராணிகளை மட்டும் உண்பதற்கு ஹலாலாக்கியுள்ளது. அவற்றில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளில் மட்டும்தான் குர்பானி கொடுக்க வேண்டும்.



அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காக அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!(அல்குர்ஆன் 22:28)




குர்பானிக்குரிய‌ பிராணிகளைப் பற்றிய‌ மேற்கண்ட வசனத்தில் சொல்லப்படும் "அன்ஆம்" என்ற வார்த்தை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளை மட்டும் குறிப்பதாகும். எனவே அல்லாஹ்தஆலா குறிப்பிடும் இம்மூன்றைத் தவிர மற்ற எந்தப் பிராணியும் குர்பானிக்கு உரியதல்ல‌.



குர்பானி கொடுக்கும் ஆரம்ப நேரம்



பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பிறகிலிருந்து குர்பானிக்கான நேரம் ஆரம்பமாகின்றது. தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாகாது என்று நபி(ஸல்)அவ‌ர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.



யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த செலவுக்காகவே) அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது (குர்பானி என்ற‌) வழிபாடு பூர்த்தியாகிவிடும். மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

               அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக்(ரலி); நூல்:புகாரி (5546)




நபி(ஸல்)அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், யார் இத்தொழுகையை நிறைவேற்றிவிட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர்தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் எனக் குறிப்பிட்டார்கள்.

                      அறிவிப்ப‌வர்: பராஃ(ரலி); நூல்: புகாரி(955,5556)



நபி(ஸல்) அவர்களுடன் நான் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை தொழுதேன். தொழுது முடிந்தபின் ஆடு ஒன்று அறுக்கப்பட்டுக் கிடப்பதை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்பொது "யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டானோ, அந்த இடத்தில் வேறொன்றை (தொழுகைக்குப் பின்) அறுக்க வேண்டும்" என்று கூறினார்கள்.


        அறிவிப்பவர் : ஜுன்துப் இப்னு சுப்யான்(ரலி); நூல்கள் : புகாரி, முஸ்லிம்



இந்த ஹதீஸ்களிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியதிலிருந்து தொடங்குகிறது என்பதையும் தொழுகைக்கு முன்பே யாராவது கொடுத்திருந்தால், மீண்டும் கொடுக்கவேண்டும் என்பதையும் அறிந்துக் கொள்ளலாம்.



'அஹ்மத்' என்ற ஹதீஸ் கிரந்தத்தின் குர்பானி பற்றி வர‌க்கூடிய 16151 வது ஹதீஸின் மூலமாக‌, 10 வது நாளான ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமல்லாமல் அதைத் தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும் என்பதை அறிய முடிகிறது.



எனவே பெருநாள் தினத்தில் குர்பானி கொடுக்காவிட்டால், அதைத் தொடர்ந்து வரக்கூடிய‌ 3 நாட்களிலும் கொடுத்துக் கொள்ளலாம்.



குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை




ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
              அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி);  நூல்: நஸாயீ(4285)


அதாவது, ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் முடி, நகங்களை களையாமல் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. குடும்பத்தை நடத்திச் செல்லும் குடும்பத் தலைவர், தன் குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பார். அவர் மட்டும் முதல் பிறையிலிருந்து குர்பானியை நிறைவேற்றும் வரை முடி, நகங்களை களையாமல் இருக்கவேண்டும்.


ஆனால், தானாகவே நகம், முடி ஆகியவை விழுந்தால் தவறேதுமில்லை. அதுபோல் நிர்பந்த நிலையில் உள்ளவர்களுக்கும் குற்றமில்லை. அதாவது நகம் கிழிந்து தொங்கிக் கொண்டு வலியை அதிகப்படுத்திக் கொண்டிருப்பதோ, அறுவை சிகிச்சை போன்ற காரணங்களுக்காகவோ அல்லது காயத்தை குணப்படுத்துவதற்காகவோ முடியை வெட்டவேண்டிய நிலை ஏற்பட்டாலோ, அதுபோன்ற சிரமமான நிலையில் முடி, நகங்களை வெட்டுவதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் அல்லாஹ்தஆலா எந்த ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டம் கொடுப்பதில்லை.‏‏ எனவே நபி(ஸல்)அவர்களுடைய வழிமுறையை அல்லாஹ் பார்க்கிறான் என்ற‌ அச்சத்தோடு நம்மால் முடிந்த அளவு பின்பற்றினால் போதுமானது. எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் (அல்குர்ஆன் 2:286)




மேலே கூறப்பட்டுள்ள ஹதீஸில் "துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை" என்று கூறப்பட்டுள்ளதால், குர்பானி கொடுக்கிறோமா இல்லையா என்ற‌ முடிவில் வேண்டுமென்றே அலட்சியம் காட்டாமல், குர்பானி கொடுப்பதை இயன்றவ‌ரை பிறைக்கும் முன்பாகவே முடிவு செய்துக்கொண்டு, நகம் மற்றும் முடிகளை களையும் தேவையுடைய சந்தர்ப்பமாக இருந்தால், பிறைக்கு முன்பே களைந்துக் கொள்ளவேண்டும்.   


ஆனால் பிறைக்கு பிறகு அந்த பத்து நாட்களுக்கு இடையில் குர்பானி கொடுப்பதற்கான வாய்ப்பு எதிர்பாராத விதமாக‌ ஒருவருக்கு கிடைத்து, அப்போதுதான் அவர் முடிவு செய்ய முடிகிறதென்றால், அப்போதிலிருந்து குர்பானியை நிறைவேற்றும் வரை முடிகளையும் நகங்களையும் களையாமலிருக்க வேண்டும். அவ்வாறு முடிவெடிக்கும் முன்பு அவற்றைக் களைந்திருந்தால் குற்றமில்லை.
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

குர்பானி கொடுப்பதின் சட்டங்கள்  Empty Re: குர்பானி கொடுப்பதின் சட்டங்கள்

Post by முஸ்லிம் Sat Nov 13, 2010 4:35 pm

அடையாளமிடுதல்


அதிகமான ஆடுகளையும் மாடுகளையும் வைத்திருப்பவர்கள் குர்பானிக்கு பொருத்தமானதை அவற்றில் தேர்வுசெய்து அதற்கு அடையாளம் இட வேண்டும். அப்படியில்லாமல் பெருநாளன்று இருக்கும் கால்நடைகளில் கையில் கிடைக்கும் ஏதாவது ஒன்றைப் பிடித்து அறுத்துவிடக் கூடாது. அடையாளம் இடுவது கட்டாயம் இல்லையென்றாலும் முறையாக தேர்வு செய்யப்பட்ட‌ குர்பானிப் பிராணி மற்றப் பிராணிகளுடன் குழம்பிக் கொள்ளாமல் இருப்பதற்காகவும், குர்பானிக் கொடுப்பதை ஏழைகள் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்)அவர்கள் காலத்தில் அடையாளமிடக்கூடிய‌ வழக்கம் இருந்தது. இன்று பெரும்பாலும் குர்பானிக்கென்று பிரத்யேகமாக பிராணிகள் வாங்கப்படுவதால் அடையாளமிட வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் அறுக்கும் அன்று வரை விற்பவர்களிடத்திலேயே விட்டு வைப்பவர்களும், அதிக எண்ணிக்கையில் வைத்திருப்பவர்களும் இம்முறையைக் கையாளுவதே சிறந்தது.


அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களின் பலி ஒட்டகங்களின் அடையாள மாலைகளை நான் என் கைகளாலேயேத் திரித்தேன். அந்த மாலைகளை அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் (அவற்றின்) கழுத்தில் போட்டு அவற்றுக்கு அடையாளச் சின்னமிட்டு இறையில்லம் கஃஅபாவிற்கு அவற்றை அனுப்பி வைத்தார்கள். 
       அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி); நூல்:புகாரி(2335), முஸ்லிம்(2549) 



சிலர் குர்பானிக்காக தேர்வு செய்யப்பட்ட ஒரு நல்ல பிராணியை வாங்காமல், குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் அதைவிட மட்டமான தரத்தில் உள்ள பிராணியை வாங்குவதையும் காண்கிறோம். குர்பானிப் பிராணிகள் தரமானதாக இருக்கவேண்டுமே தவிர, அவ்வாறெல்லாம் செய்யக்கூடாது. முடிந்தவரை எந்த விதத்திலும் தரம் குறையாததாக‌ பார்த்துக் கொள்ள வேண்டும்.


குர்பானிப் பிராணிகள் எவ்வாறு இருக்கவேண்டும்?


ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய பிராணிகளில் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் பார்த்தோம். அவற்றில் நான்கு குறைகள் உள்ளவை குர்பானி கொடுப்பதற்கு ஏற்றவையல்ல.
1. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை
2. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய்
3. வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம்
4. கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.


'அல்லாஹ்வின் தூதரே! கொம்பில் ஒரு குறை, பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை' என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்)அவர்கள், 'உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு; மற்றவருக்கு அதை ஹராமாக்கிவிடாதே' என்று கூறினார்கள்.
                    அறிவிப்பவர்: பராஃ(ரலி); நூல்: நஸயீ(4293)



இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிய‌க்கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுக்கலாம். ஏனெனில் நபி(ஸல்)அவர்கள் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணிகளை, குர்பானி கொடுத்துள்ளதாக அபூராபிஃ(ரலி)அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை அஹ்மத் இமாம் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.


பெண் ஆட்டை குர்பானி கொடுக்கலாமா?


பெட்டை ஆடுகளையும், கிடாய்களையும் நம் மக்க‌ள் வித்தியாசமாகவே பார்க்கின்றனர். சில பகுதிகளில் பெட்டை ஆடுகள் சாப்பிடுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது போலவும் கருதுகின்றனர். சாதாரணமான நேரத்திலேயே பெட்டை ஆடுகளைச் சாப்பிடக்கூடாது எனக் கருதக்கூடியவர்கள், குர்பானி கொடுப்பதற்குப் பெட்டை ஆடுகள் அறவே தகுதியற்றவை என்று நினைக்கின்றனர். இது பற்றி மார்க்கம் என்ன கூறுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.


உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதில் கிடாயும் ஆடும், காளையும் பசுவும், சேவலும் கோழியும் சமமானவைதான் என்பதை முஸ்லிம்கள் முதலில் நம்பவேண்டும். பறவையினங்களில் இதை ஏற்கக் கூடியவர்கள் கால்நடைகளில் மட்டும் ஏற்கத் தயங்குகின்றனர்.


குர்பானி கொடுப்பதற்குக் காளையும் கிடாயும்தான் தகுதியானது என்று திருக்குர்ஆனிலும் கூறப்படவில்லை. நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளிலும் கூறப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் குர்பானி பற்றிக் கூறும் போது "ஜத்வு" என்று ஆண்பால் கூறப்பட்டுள்ளது போலவே "ஜத்அத்" என்று பெண்பாலும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் "முஸின்" என்று ஆண் பாலாகவும் "முஸின்னத்" என்று பெண்பாலாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே ஆண் கால்நடைகளைதான் குர்பானி கொடுக்கவேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.



அதே சமயம், குட்டியை ஈன்று பால்கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் தாயை அறுத்துவிட்டால் குட்டி பாசத்திற்கும் பாலுக்கும் ஏங்கக்கூடிய நிலை ஏற்படும். குர்பானி கொடுப்பவர்கள் இதை கவனத்தில் கொண்டு, குட்டிப்போட்டு பால்தரும் பிராணிகளை அறுக்கக்கூடாது. 


அவர்(ஒரு அன்சாரித் தோழர்)'இதை உண்ணுங்கள்!' என்று கூறிவிட்டு (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள், 'பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன்' என்று கூறினார்கள். 
           அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி); நூல்: முஸ்லிம்(3799)


எத்தனை வயதுள்ள பிராணிகள் குர்பானிக்கு ஏற்றவை?


குர்பானி கொடுக்கவேண்டிய ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய மூன்றில், குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் நிர்ணயம் செய்துள்ளார்கள்.


நீங்கள் 'முஸின்னத்' தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர! அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள)தை அறுங்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
                    அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி); நூல்:முஸ்லிம்(3631)



பருவமடையும் பருவத்தில் உள்ள பிராணிகள் 'முஸின்னத்' எனப்படும். பெரும்பாலும் ஒட்டகம் ஆறு வயதிலும், மாடுகள் மூன்று வயதிலும், ஆடுகள் இரண்டு வயதிலும் பருவமடையும். இந்தக் கணக்கு உத்தேசமானதுதான். பருவமடையும் வயது பல காரணங்களால் வித்தியாசப்படும். பற்கள் விழுதல், துணை தேடுவது போன்றவற்றை வைத்து, அது சம்பந்தமான அறிவுள்ளவர்கள் அவை பருவமடைந்துவிட்டதைக் கண்டுபிடித்து விடுவார்கள். ஆக, 'முஸின்னத்தை குர்பானி கொடுங்கள்' என்றால் 'பருவமடைந்ததைக் குர்பானி கொடுங்கள்' என்பது பொருள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். இத்துறையில் அனுபவமுள்ளவர்களிடம் வெள்ளாடு, செம்மறியாடு, மாடு ஆகியவை எத்தனை வருடம், எத்தனை மாதத்தில் பருவமடையும் என்று கேட்டு அறிந்துக் கொள்ளலாம்.


அறுக்கும் முறை



பொதுவாகவே பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்' எனக் கூறி அறுப்பார்கள். குர்பானிப் பிராணிக்கும் அதுபோலவே செய்தார்கள்.


கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன், 'ஆயிஷாவே! கத்தியை எடுத்து வா; அதைக் கல்லில் தீட்டி கூர்மையாக்கு' என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது 'பிஸ்மில்லாஹ்' என்று கூறிவிட்டு, 'இறைவா! இதை முஹம்மதிடம் இருந்தும், முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும், முஹம்மதின் சமுதாயத்தாரிடம் இருந்தும் ஏற்றுக் கொள்வாயாக!' எனக் கூறினார்கள்.
              அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்:முஸ்லிம்(3637)


முஸ்லிம் நூலில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று நபி(ஸல்)கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நபி(ஸல்)அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது.



எனவே அறுப்பவர்கள் 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்' எனக்கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும். "ஆயிஷா கத்தியைக் கொண்டு வா! அதைக் கல்லில் கூர்மையாக்கு!" எனும் ஹதீஸிலிருந்து வீட்டில் வைத்தும் அறுத்திருக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.


யார் அறுப்பது?


நபி(ஸல்)அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்தபோது தமது கையால் தாமே அறுத்திருக்கிறார்கள் என்று புகாரி, முஸ்லிம் உட்பட பல நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் முடிந்தவரை மற்றவர்களை வைத்து அறுக்காமல் நாமே குர்பானிப் பிராணிகளை அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.


பெண்கள் அறுக்கலாமா?


ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்)அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதைச் சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள். 
                                 நூல்:புகாரி



குர்பானி அல்லாத மற்ற சமயங்களுக்கும் இந்த சட்டம் பொதுவானதாகும்.


அறுத்த பிறகு துஆச் செய்தல்


குர்பானி கொடுக்கும் போது கூறவேண்டியவை அல்லாஹ்விற்காக நிறைவேற்றப்படும் இந்த வணக்கத்தில் ஏராளமான பித்அத்கள் ஊடுருவி இருக்கின்றன. அறுக்கும்போதோ அல்லது அறுத்தப் பின்போ ஃபாத்திஹா ஓதுவது மார்க்கம் என்று ம‌க்கள் விளங்கி வைத்துள்ளார்கள். 


நபி(ஸல்)அவர்களும் குர்பானிக் கொடுத்தார்கள். அவர்கள் பின்வரும் பிரார்த்தனையைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. பிறகு அந்தக் கத்தியை வாங்கி அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹ் அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின் வஆலி முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் (அல்லாஹ்வின் பெயரால், இறைவா! முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக) என்று கூறி அதை அறுத்தார்கள். 
             அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி); நூல்:முஸ்லிம்(3637), அபூதாவூத்(2410), அஹ்மத்(23351) 


எனவே நாமும் 'இறைவா! என்புறத்திலிருந்தும் என் குடும்பத்தார் புறத்திலிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக!' என்று குர்பானி கொடுத்த பிறகு பிரார்த்தனை செய்துக்கொள்ள வேண்டும்.
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

குர்பானி கொடுப்பதின் சட்டங்கள்  Empty Re: குர்பானி கொடுப்பதின் சட்டங்கள்

Post by முஸ்லிம் Sat Nov 13, 2010 4:36 pm

பங்கிடும் முறை


சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை. இவ்வாறு தான் கொடுக்க வேண்டும், இவ்வளவுதான் உண்ண வேண்டும் என்ற வரம்பு எதுவும் இல்லாததால், அவரவர் விரும்பிய அளவு தர்மம் செய்யலாம். அதேசமயம், இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக்கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்கவேண்டும்.

குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் கட்டளைக்கு முரணானதாகும். 'அல்ஹஜ்' அத்தியாயத்தின் 28 வது வசனத்தில் 'அவற்றை நீங்களும் உண்ணுங்கள்; வறிய ஏழைகளுக்கும் வழங்குகள்' என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

ஆட்டை உரிப்பவ‌ரின் கூலி


"நபி(ஸல்)அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த போது, அதன் இறைச்சியையும், தோலையும் விநியோகிக்குமாறும், ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக இதில் எதனையும் கொடுக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டனர்" என்று அலி(ரலி)அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
நூல்: புகாரி(1717)


இந்த ஹதீஸிலிருந்து அறுப்பவர்களுக்கும் உரிப்பவர்களுக்கும் தனியாகத்தான் கூலி கொடுக்கவேண்டுமே தவிர குர்பானியின் எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

விநியோகம் செய்தல்


குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்டபோது, 'நீங்கள் உண்ணுங்கள்; வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்' என்று நபி(ஸல்)அவர்கள் அனுமதிய‌ளித்தார்கள்.
நூல்: புகாரி(1719)

எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாமா?


மக்காவில் குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியை மதீனாவிற்கு நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் கொண்டு வருவோம் என்று ஜாபிர்(ரலி)அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது. ஆக, குர்பானி இறைச்சியை தேவைப்பட்டால் பிற ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் விநியோகிக்கலாம்.

ஒரு குடும்பத்துக்கு எத்தனை ஆடுகள் கொடுப்பது?


நபி(ஸல்)அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூ அய்யூப்(ரலி)அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது என்று விடையத்தார்கள்.
அறிவிப்பவர்: அதா இப்னு யஸார்; நூல்கள்: திர்மிதீ (1425), இப்னு மாஜா (3137), முஅத்தா (921)

எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரே ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிருந்து அறிந்துக் கொள்ளலாம். அதேசமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கும் தடை எதுவுமில்லை. நபி(ஸல்)அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.
அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: புகாரி (1718)


ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி


மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானிக் கொடுக்க விரும்புபவர்கள் ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம்.

நபி(ஸல்)அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் ஏழு பேர் சார்பாக ஒரு ஒட்டகத்தையும் ஏழு பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி); நூல்: முஸ்லிம் (2323)


இந்த‌ ஹதீஸ் மூலம் ஒட்டகத்தில் ஏழுபேர் கூட்டு சேரலாம் என்பது தெளிவானாலும், ஒரு ஒட்டகத்தில் பத்து பேர் கூட்டு சேர்வதற்கும் இன்னொரு ஹதீஸ் ஆதாரமாக‌ உள்ளதை அறிய முடிகிறது.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழுபேர் வீதமும், ஒரு ஒட்டகத்தில் பத்துபேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: திர்மிதீ(1421), நஸாயீ(4316), இப்னுமாஜா (3122)

ஆக, ஒட்டகத்தைப் பொறுத்தவரை ஏழு பேரும் கூட்டு சேர்ந்துக் கொள்ளலாம், அல்லது 10 பேரும் கூட்டு சேர்ந்து கொடுக்க‌லாம்.

நம் தமிழகத்தில் சிலர் ஆட்டைதான் குர்பானி கொடுக்கவேண்டும், அந்தளவு வசதியுள்ளவர்கள் மட்டுமே கொடுக்கமுடியும் என்று கருதுகிறார்கள். இந்தியாவில்தான் ஆட்டின் விலை அதிகமாக உள்ளதே தவிர, வெளிநாடுகளை எடுத்துக் கொண்டால் ஆட்டை விட மாட்டின் விலைதான் கூடுதலாக இருக்கும். எனவே இந்தியாவைப் பொறுத்தவரை ஆடு கொடுக்க வசதியில்லாதவர்கள் குர்பானி கொடுக்க விரும்பினால் ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டைக் குர்பானி கொடுக்கலாம். ஆட்டைக் குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை மேலே நாம் பார்த்த‌ ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

பயணி மற்றும் பெண்கள் குர்பானி கொடுக்கலாமா?


வீட்டில் ஆண்களின் உதவியின்றி குடும்பத்தை நடத்தும் பெண்கள், வசதிப் பெற்றிருந்தால் அவர்களும் தங்களுக்காக குர்பானி கொடுக்கலாம். குர்பானி என்பது ஆண் பெண் ஆகிய இரு பாலருக்கும் உரிய வணக்கமாகும். அதுபோல் ஒருவர் தன் சொந்த ஊரில்தான் கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனை ஏதுமில்லை. பிரயாணத்தில் இருப்பவர்களும் குர்பானி கொடுக்கலாம். நபி(ஸல்)அவர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவிற்கு சென்று தனது மனைவிமார்களுக்கு குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நாங்கள் மினாவில் இருந்தபோது மாட்டிறைச்சி என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் 'இது என்ன?' என்று கேட்டேன். மக்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் தம் துணைவியர்களுக்காக மாடுகளை அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி); நூல்:புகாரி(5548)

இறந்தவர்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கலாமா?


நபி(ஸல்)அவர்களுடைய வாழ்நாளிலே அவர்களுக்கு மிகப்பிரியமான பலர் மரணித்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நேசித்த அவர்களுடைய மகன் இப்ராஹிம், மகள் ஜைனப், மனைவி கதீஜா(ரலி), சிறிய தந்தை அபூதாலிப் ஆகியோர் மரணித்தனர். இறந்தவர்களுக்கு குர்பானி கொடுப்பது கூடுமென்றால் நபி(ஸல்)அவர்களால் நேசிக்கப்பட்ட‌ இவர்களுக்கு முதலில் குர்பானிக் கொடுத்திருக்கவேண்டும். ஆனால் உயிருடன் வாழும் தன் குடும்பத்தார்களுக்கு கொடுத்தார்களே தவிர மரணித்தவர்களுக்காக அல்ல!

இறந்தவர் மரணிப்பதற்கு முன்பு குர்பானி கொடுக்கும்படி யாரிடமாவது கூறிச் சென்றிருந்தாலோ அல்லது அவர் ஆசைப்பட்டிருந்தாலே அவர் சார்பில் கொடுக்கலாம். ஹஜ் செய்யவதாக நேர்ச்சை செய்துவிட்டு இறந்தவர்களுக்காக அவர்களது உறவினர்கள் அதை நிறைவேற்ற நபி(ஸல்)அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

(உக்பா இப்னு ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் சென்று '(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துக் கொண்டு (அதை நிறைவேற்றாமல்) இறந்துவிட்டார்' என்றார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் 'உன் சகோதரிக்கு கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம் (நான் தான் நிறைவேற்றுவேன்)' என்றார். நபி(ஸல்)அவர்கள், 'அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று; கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமைப் படைத்தவன்' என்றார்கள்.
அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரலி); நூல்:புகாரி (6699)


நபி(ஸல்)அவர்களுக்காக குர்பானி கொடுக்கலாமா?


நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்காக ஒரு குர்பானி கொடுக்கிறோம் என்று சிலர் வழக்கமாக்கி வருகிறார்கள். இதற்கு அல்லாஹ்வின் கட்டளையோ நபி(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலோ எதுவுமில்லை. எனவே இதுவும் மார்க்கத்தில் இல்லாததுதான்.

குர்பானிப் பிராணியை பயன்படுத்தலாமா?


குர்பானிக் கொடுப்பதற்காக வாங்கப்பட்ட ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றின் பாலை அருந்துவதையோ, அவற்றின் மீது பயணிப்பதையோ, அதன் மீது சுமைகளைத் சுமத்துவதையோ அல்லது அவைகளை உழுவதற்கு பயன்படுத்துவதையோ தவிர்ந்துக் கொள்ளவேண்டும். மேலும் அவற்றின் முடிகளை வெட்டியெடுத்து பயன்படுத்தவும் கூடாது. ஆனால் வெட்டுவதினால் பிராணிகளுக்கு எதுவும் பயன் உண்டு என்றால் வெட்டிக்கொள்ளலாம்.

அதேசமயம், மிகவும் தேவையுள்ள சம‌ய‌த்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒருவருக்கு ஒரு ஒட்டகத்தைத் தவிர வேறு ஒட்டகம் இல்லை. இப்போது இவர் வேறு ஒட்டகத்தை பெறும் வரைக்கும் குர்பானி கொடுக்கவேண்டிய ஒட்டகத்தில் பயணிக்கலாம். அதிலிருந்து பால் கரந்து அருந்திக்கொள்ளலாம். ஆனால் மற்றொன்று இருக்கும்போது இதை பயன்படுத்தக்கூடாது. ஆடு, மாடுகளுக்குரிய சட்டமும் இதுபோன்றுதான்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் பலிப்பிராணியில் ஏறிச் செல்வதைப்பற்றிக் கேட்கப்பட்டது. அவர்கள் நபி(ஸல்)அவர்கள் "நீங்கள் அதில் ஏறிச் செல்லவேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டால் பயண வாகனம் கிடைக்கும்வரை முறையோடு அதில் ஏறிச்செல்க!" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு ஜுரைஹ்(ரஹ்); நூல்:முஸ்லிம்(2346),(2347), நஸாயீ(2752),அபூதாவூத்(1498), அஹ்மத்(14230)


மேலும் நபி(ஸல்)அவர்கள் ஒருநபித்தோழர் சிரமத்துடன் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு சென்றதைப் பார்த்தபோது அதில் ஏறி சவாரி செய்யும்படி கட்டளையிட்டுள்ளார்கள்.

ஒருவர் தமது குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்த நபி(ஸல்)அவர்கள் "அதில் ஏறிக் கொள்ளும்" என்றார்கள். அதற்கவர் "இது குர்பானி ஒட்டகமாயிற்றே!" என்றதும் "(பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும்" என்றார்கள். மீண்டும் அவர் "இது குர்பானி ஒட்டகமாயிற்றே!" என்றதும் "(பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும்" என மூன்றாம் தடவையும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி); நூல்:புகாரி(1690)

நபி(ஸல்)அவர்கள் சிரமத்தின்போது பயணிப்பதற்கு சலுகை வழங்கியுள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் பயணிப்பதற்கு கால்நடைகள் பெருமளவில் பயன்படுத்தப்படவில்லையென்றாலும், பால்கரப்பது போன்ற மற்ற விஷயங்களிலும் கஷ்டமான சூழ்நிலையில் இதுபோன்றே நமக்கு அனுமதியுள்ளது என்பதை இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

பொது நிதியிருந்து குர்பானி கொடுத்தல்


வசதியுள்ளவர்கள் மட்டுமின்றி வசதியற்றவர்களும் குர்பானி கொடுப்பதற்கான ஏற்பாட்டை நபி(ஸல்)அவர்கள் நடைமுறைப்படுத்தி இருந்தார்கள். அவர்கள் நடைமுறைப்படுத்திய 'ஜகாத்' என்ற‌ பொருளாதாரக் கொள்கை காரணமாக அரசுக் கருவூலத்தில் ஏராளமாக நிதி குவிய ஆரம்பித்தது. ஆரம்பக் காலத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிடக்கூட வசதியற்றிருந்த ஒரு சமுதாயம் மிக உன்னதமான பொருளாதார முன்னேற்றத்தை எட்டியது. இவ்வாறு செல்வச் செழிப்பு ஏற்பட்ட காலத்தில் குர்பானி கொடுக்க விரும்புகிறவர்களுக்கு குர்பானி பிராணிகளை நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் வழங்கினார்கள்.

நபி(ஸல்)அவர்கள் குர்பானிப் பிராணிகளை மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தனர். எனக்கு ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டிதான் கிடைத்தது. 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஆறுமாதக் குட்டிதானே கிடைத்துள்ளது' எனக் கூறினேன். 'அதையே நீர் குர்பானி கொடுப்பீராக! என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர்(ரலி); நூல்கள்: புகாரி(5547), முஸ்லிம் (3634)

பொது நிதியிருந்து குர்பானிப் பிராணிகள் வழங்கப்படும் வழக்கம் நபி(ஸல்)அவர்களது காலத்தில் இருந்ததை இந்த ஹதீஸிருந்து அறிந்துக் கொள்ளலாம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்!

நன்றி : http://payanikkumpaathai.blogspot.com/
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

குர்பானி கொடுப்பதின் சட்டங்கள்  Empty Re: குர்பானி கொடுப்பதின் சட்டங்கள்

Post by முஸ்லிம் Mon Oct 31, 2011 3:23 pm

குர்பானி கொடுப்பதின் சட்டங்கள் அவசியம் கருதி மீள் பதிவு
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

குர்பானி கொடுப்பதின் சட்டங்கள்  Empty Re: குர்பானி கொடுப்பதின் சட்டங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum