தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும்

Go down

முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும்  Empty முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும்

Post by முஸ்லிம் Tue Dec 14, 2010 3:48 pm

துல்ஹஜ் மாதத்தின் இறுதியில்... புது வருடத்தை எதிர் நோக்கியவர்களாக இருக்கும் நாம், இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தைப் பற்றியும் அந்த மாதத்தில் இஸ்லாமிய மக்களில் சிலர் செய்துவரும் மூடப் பழக்கங்களையும் பற்றியும் இப்போது பார்ப்போம்.



இஸ்லாத்தில் (போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட) நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும். இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்தான், இந்த மாதத்திற்கு மெருகூட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆனால், முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டால் மார்க்கத்தின் பெயரால் பல்வேறு அனாச்சாரங்கள் நம் மக்களிடையே அரங்கேறுவதைப் பார்க்கிறோம். அந்த பத்தாம் நாளுக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ அதை விடுத்து, இந்த மாதத்தில் இஸ்லாம் கூறாத பல்வேறு அனுஷ்டானங்கள் உலகின் பல பகுதிகளிலும் மக்களிடையே கடைப்பிடிக்கப்படுகின்றன.



முஹர்ரம் பிறை ஒன்று முதல் பத்து வரை பல சடங்குகளும் சம்பிரதாயங்களும் நிறைவேற்றப்படுகின்றன. இவற்றை அல்லாஹ்வோ அவனுடைய தூதரோ சொல்லித் தந்தார்களா? அவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? இந்த கொண்டாட்டங்களினால் உண்மையில் நன்மைதான் கிடைக்குமா? என்பதையெல்லாம் நாம் தெரிந்துக் கொள்ளும் முன்னர், இவையெல்லாம் இவர்கள் எதை வைத்து உண்டாக்கிக் கொண்டார்கள் என்ற அடிப்படையை தெரிந்துக் கொள்வோம்.



ஈராக்கிலுள்ள கர்பலா எனும் நகரில் நடைபெற்ற ஒரு போரையும் அதன் விளைவுகளையும் அடிப்படையாகக் கொண்டே இவை நடத்தப்படுகின்றன. இந்தப் போரில் நபி(ஸல்)அவர்களின் பேரரான ஹுஸைன்(ரலி) கொல்லப்பட்ட சோக சம்பவம் (முஹர்ரம் பத்தாம் நாளில்) நடந்ததால் இதன் நினைவாக 'ஷியாக்கள்' என்று சொல்லப்படுவோர் அந்த நாளை துக்க நாளாகக் கொண்டாடும் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டார்கள். இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான இந்த கலாச்சாரம், தமிழகம் போன்ற பகுதிகளிலும் வெவ்வேறு பெயர்களில் ஊடுருவியுள்ளது.



துக்க நாளாக கொண்டாடப்படும் இந்த முஹர்ரம் மாதம் பத்தாம் நாளை கோலாகலமாகக் கொண்டாடுவது ஷியாக்களின் வழக்கம். முஹர்ரம் பண்டிகை என்னும் பெயரில் ஷியா முஸ்லிம்கள் இப்பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். வட இந்தியாவில் மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற பகுதிகளிலும் குறிப்பாக மும்பை, குஜராத், லாகூர், பாட்னா, லக்னோ, பைசாபாத், குவாலியர் போன்ற இடங்களிலும், தமிழகத்தில் மேலப்பாளையம், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஷியாக்கள் வாழக்கூடிய பகுதிகள் அனைத்திலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.




நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ஹஸன், ஹுஸைன் இருவரும் உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள். (ஆதாரம் புகாரி) இதுபோன்ற இன்னும் பல சிறப்புகள் அவ்விருவருக்கும் உண்டு என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் ஹுஸைன்(ரலி) கொல்லப்பட்ட சோக சம்பவம் முஹர்ரம் பத்தாம் நாளில் நடந்ததால் அந்த நாள் துக்க நாளாக ஒருபோதும் ஆகிவிடாது. அதுபோல் இவர்கள் பெயரால் நடத்தப்படும் பித்அத்(வழிகேடு)களை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவுமில்லை. ஏன் இஸ்லாம் இதை அனுமதிக்கவில்லை? அப்படி என்னதான் செய்கிறார்கள் இந்த பண்டிகை(?)யில் என்று, அதைக் கொண்டாடி பழக்கமில்லாத மக்களும் தெரிந்துக் கொள்வதற்காக அதைப்பற்றி முதலில் கூறவேண்டியுள்ளது.



இந்த பண்டிகையில் அவர்கள் செய்யும் முக்கிய சடங்கு 'பஞ்சா எடுத்தல்' என்பதாகும். உருது மற்றும் ஹிந்தி மொழியில் 'பாஞ்ச்' என்றால் 'ஐந்து' என்பதை அனைவரும் அறிவோம். 'பஞ்சா' என்று சொல்ல‌ப்படும் அலங்கரிக்கப்பட்ட ஒரு சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும். இதில் சிம்பாலிக்காக முஹம்மத்(ஸல்), அலீ(ரலி), பாத்திமா(ரலி), ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) என்று ஐந்து பேரைக் குறிப்பிடுவதே இந்த பஞ்சா எனும் ஐந்து விரல்கள் கொண்ட கையாகும். இதை அடிப்படையாகக் கொண்டே இதற்கு 'பஞ்சா' என்ற பெயர் வந்தது.








ரதம் போன்ற ஒன்றை ஜரிகைகளாலும் கலர் பேப்பர்களாலும் அலங்கரித்து சப்பரத்தில் வைத்து, பஞ்சா என்று சொல்லப்படும் அந்த கைச்சின்னத்தை வெள்ளியினால் செய்து, மரத்தினாலான‌ ஒரு சட்டத்தினுள் ஜரிகைத் தாள்களைக் கொண்டு சுற்றப்பட்டு அதில் பொருத்தப்பட்டிருக்கும். இதைச் சுற்றிலும் மல்லிகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இதுதான் 'பஞ்சா' என்ற சப்பரத்தின் அமைப்பாகும்.







முஹர்ரம் மாதத்தின் முதல் பிறையிலிருந்து, 'பஞ்சா' வைக்கப்பட்டிருக்கும் அந்த இடம் பரபரப்பாக‌ ஆரம்பித்துவிடும். முஹர்ரம் பிறை ஒன்றில் இதன் நடைவாசல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக(?) பஞ்சா வீற்றிருக்கும். பஞ்சா அலுவலகத்தின் பிரம்மாண்ட பந்தலில் எப்போதும் மக்கள் வெள்ளம் அலைமோதிக் கொண்டிருக்கும். எல்லா திருவிழாக்களையும் போல் பலூன் வியாபாரிகள், மிட்டாய் வண்டிகள், பொம்மை வியாபாரிகள், ஐஸ் வண்டிகள், சந்தனம் /பத்தி மற்றும் பூ வியாபாரங்கள் என இந்தப் பகுதி நிரம்பி வழியும்.




இந்த‌ முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மீன் சாப்பிடக் கூடாதாம். இதனால் பஞ்சா எடுக்கப்படும் ஊர்களில் இந்தப் பத்து நாட்களும் மிகவும் மலிவு விலையில் மீன்கள் விற்கப்படும். அதுபோல் பத்து நாட்களும் கணவன், மனைவி இல்லற‌த்தில் ஈடுபடக் கூடாது என்ற தடையையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இந்தத் தடைகளை மீறி யாரேனும் மீன் சாப்பிட்டு விட்டால் அல்லது இல்லற‌த்தில் ஈடுபட்டு விட்டால் அதற்குப் பரிகாரமாக பஞ்சா எடுக்கும் பக்கீர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றை காணிக்கை செலுத்தவேண்டும்!? 



நான்காம் நாளில் பெண்கள் தங்கள் வீடுகளில் ஹஸன், ஹுஸைன்(ரலி) இருவர் சார்பாகவும் இரண்டு கட்டில்களில் இறந்த உடல்களைப் படுக்க வைத்ததைப் போன்று செய்து, அதனருகே அமர்ந்து உருகி, உருகி அழுவார்கள். (கீழுள்ள படத்தைப் பார்க்கவும்)



முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும்  Empty Re: முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும்

Post by முஸ்லிம் Tue Dec 14, 2010 4:00 pm

தொடர்ந்து ஐந்தாவது ஆறாவது நாட்களில் கர்பலா சம்பவங்கள் பற்றி கூறும் நிகழ்ச்சியும், சோக பாடல்கள் மூலம் அந்த துக்கங்களைப் புதுப்பித்துக் கொள்வதும் நடைபெறும். வளரும் பருவத்திலுள்ள சின்னஞ்சிறிய பாலகர்களிடம் கூட இவற்றை மனதில் பதிய வைத்து, அன்றைய தினம் மேடையேறி பாடி அழவைக்கும் கோலங்கள் நடைபெறும்.



பத்தாம் நாளுக்கு முன்னதாக ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவ‌து நாட்களிலும் ஊர்வலம் புறப்படும். இந்த ஏழாம் நாள் பஞ்சாவில் ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) நினைவாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு குதிரைகளைக் கொண்டு வந்து, அவ்லியாக்களுக்கு மிகவும் பிடித்த நிறம் என்று நம்பப்படும் பச்சை நிறத் துணியால் போர்த்தப்பட்டு அதில் இரண்டு இளைஞர்கள் அமர்த்தப்படுவார்கள்.





தங்களின் தேவைகள் நிறைவேறவும் பற்பல பாக்கியங்கள் கிடைப்பதற்காகவும் நேர்ச்சை செய்துக் கொண்ட குமரிப் பெண்கள் எல்லாம் குடத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து குதிரைகளின் கால்களில் வழிநெடுகிலும் கொட்டுவார்கள். அந்த குதிரைகளில் அமர்த்தப்பட்ட‌வர்கள் கூட, தங்கள் பெற்றோர்களால் நேர்ச்சை செய்யப்பட்டவர்கள்தான்! அதாவது தங்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால், அல்லது தங்கள் குழந்தைக்கு வந்த‌ நோய் குணமாகிவிட்டால் அவனை முஹர்ரம் ஏழாம் நாளில் ஹஸனாகவும், ஹுசைனாகவும் கொண்டு வந்து குதிரையில் ஏற்றுவேன் என்று பெற்றோர்கள் நேர்ச்சை செய்து வைத்திருப்பார்களாம்!(?) அதிலும் யார் பணத்தை அதிகமாக‌ கொடுத்து முன்பதிவு செய்கிறார்களோ அவர்களுக்கு இன்ன‌ ஆண்டில் குதிரை சவாரி செய்ய வேண்டும் என்று பக்கீர்கள் நாள் குறித்துக் கொடுப்பார்கள். இவ்வாறு குதிரையில் ஏற வாய்ப்பு கிடைத்தவர்கள், முஹர்ரம் மாதம் முதல் பத்து நாட்க‌ளும் பிரத்யேகமாக நோன்பு நோற்கவேண்டுமாம்.



நேர்ச்சை செய்திருந்த பக்தர்களின் வீட்டு வாசல்களுக்கு இந்தக் குதிரை வரும்போது அவர்க‌ள் நேர்ச்சை செய்த ஆடு, கோழிகளை இந்தக் பக்கீர்களிடம் காணிக்கையாக கொடுப்பார்கள். இப்படியாக‌ இந்த குதிரை ஊர்வலம் கடைசியாக‌ ஆற்று வரைச் சென்று, அதில் அமர வைக்கப்பட்டவர்களைக் குளிக்கச் செய்தவுடன் அவர்களுக்கு 'ஷஹாதத்' என்ற‌ அந்தஸ்து கிடைத்துவிடுமாம்!(?)




பிறகு அவர்களுக்கு முக்கிய கட்டமான அந்த பத்தாம் நாள்! அன்று மாலை அதன் மையத்திலிருந்து பக்கீர்களின் தோள் புஜங்களிலும் வண்டியிலும் பஞ்சாவை ஏற்றி அதன் ஊர்வலம் ஆரம்பிக்கப்படும். இவர்கள் எல்லாம் இஸ்லாமியர்களா என்று நினைக்குமளவுக்கு அவர்களின் மூடத்தனம் எல்லை மீறிப் போகும்.



நேர்ச்சை செய்திருந்த சிலர் உடல் முழுவதும் சந்தனம் பூசிக் கொண்டு ஒருவிதமாக‌ சுற்றிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் புலி வேஷம் போட்டுக் கொண்டு ஊர்வலத்தோடு நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்!(?) இந்த பஞ்சாவில் ஹுஸைன்(ரலி) அவர்களின் போர்க்களத்தின் நினைவாக வாள்கள், ஈட்டிகள் போன்றவற்றை எடுத்துச் செல்வார்கள். பஞ்சாவுக்கு முன்னால் ஆடும் சிலம்பாட்டக் காரர்கள் பேண்டுக்கு மேல் ஜட்டி அணிந்து, நகைகளையும் போட்டுக் கொண்டு சிலம்பாட்டம் ஆடுவார்கள்.





தங்களுக்கு நல்ல கணவன் அமையவதற்காக‌ நேர்ச்சை செய்த பருவ வயதுப் பெண்கள், அதுபோல் நல்ல கணவன் அமைந்துவிட்டால் அந்தப் பெண்ணும் அவளது தாயாரும் பத்தாம் நாள் பஞ்சாவுக்கு வந்து தங்களது தலைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொண்டு, தீக்குளித்த‌தாக நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்!(?) திருவிழாக்களில் தீமிதி நடப்பது போன்று தங்கள் பாவங்கள் தீரவும் நாட்டங்கள் நிறைவேறவும் தீமிதி நடத்துவார்கள். பச்சைத் தலைப்பாகையுடன் பக்கீர்கள் மயில் இறகைக் கொண்டு ஆண், பெண் பேதமில்லாமல் தடவி வருடிவிடுவார்கள். இதில் அவர்களின் மலைப் போன்ற பாவங்கள் பனிபோல‌ கரைந்துவிடுமாம். தாய்மார்கள் மனமுருக நின்று அதைப் பார்த்து பிரார்த்தனை செய்துக் கொண்டிருப்பார்கள்.



பஞ்சா ஊர்வலம் வரும்போது சாம்பிராணி புகைப்போட்டு, காணிக்கை என்ற பெயரில் காசு வாங்க சிலர் நியமிக்கப்படுவார்கள். மக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை உப்பு, மிளகு நீக்கி விடும் என்ற நம்பிக்கையில் அவர்களிடம் உப்பும், மிளகும் பார்சலாகக் கொடுப்பார்கள். மேலும் ஆண் குழந்தை வேண்டுபவர்கள் கொழுக்கட்டை செய்து(?) பஞ்சா ஊர்வலத்தில் வருபவர்களுக்கு விநியோகம் செய்வார்கள். பெண் குழந்தைகளை யாரும் வேண்டுவதில்லை போலும்!



இவ்வாறு ஒருபுறம் கொட்டு, மேள/தாளத்துடன் ஹுஸைன்(ரலி)அவர்களின் நினைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, இன்னொரு கூட்டம் 'யா அலீ! யா ஹுஸைன்!' என்று தங்களின் மார்பில் அடித்துக்கொண்டும், ஒப்பாரி வைத்துக் கொண்டும், ஹுஸைன்(ரலி) அவர்களை நினைவு கூர்கிறோம் என்று பக்தியோடு (?) தங்கள் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டும் வருவார்கள். இஸ்லாமிய மார்க்கம் பற்றிய சாதாரண அறிவுள்ளவர்களுக்கு கூட இது ஒரு எல்லை மீறிய‌ அறியாமை என்பது புரியும். இதை செய்பவர்களும் அதற்கு உறுதுணையாக இருப்பவர்களும் சிந்தனையற்ற, இஸ்லாமிய தெளிவற்ற, இஸ்லாமிய வரலாறுகளின் ஆய்வற்ற மிகக் கீழ்நிலையில் உள்ளவர்கள்தான்! அவர்களின் இந்த இரத்தக் காணிக்கை அவர்களின் மடமையின் உச்சக்கட்டத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். (அந்த கோலத்தை கீழுள்ள படங்களில் பாருங்கள்)








மூஸா(அலை)அவர்களுக்குக் கிடைத்த வெற்றி நாளான‌ வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இந்த முஹர்ரம் பத்தாம் நாளின் உண்மையான சிறப்பு மறக்கடிக்கப்பட்டு, தன்னைத்தானே காயப்படுத்தி இரத்தக் காணிக்கை செலுத்துவதும், மாரடிப்பதுமான‌ இந்தக் காட்சிகள் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகி, இஸ்லாத்தின் தூய தோற்றத்தைச் சிதைத்து உருமாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த கொண்டாட்டங்களினால் அரசாங்கமும் இந்த நாளை 'முஹர்ரம் பண்டிகை' என்று அரசு விடுமுறையாக அறிவித்துள்ளதால், இஸ்லாத்தில் கூறப்பட்ட ஒரு கொண்டாட்டமோ இது என்றுதான் மற்ற‌வர்களை நினைக்கத் தூண்டும். ஆனாலும் அல்லாஹ்வின் உதவியால் ஏகத்துவப் பிரச்சாரம் வளர்ந்து வருவதால் இஸ்லாத்தின் உண்மை நிலை இதுவல்ல என்பதையும் மாற்றுமத மக்களும் உணரத்தான் செய்கிறார்கள்.



ஒருவாறாக இறுதியில் அந்த பஞ்சாவை ஆற்றில் கொண்டுபோய் கரைத்துவிட்டு, கலைந்த அந்தப் பஞ்சாவை ஒரு வெள்ளைத் துணியால் மூடி, ஒப்பாரி வைத்தவாறே அதை தூக்கிக் கொண்டு திரும்புவார்கள். இதன் பிறகுதான் தங்களுக்கு தடை செய்துக்கொண்ட (மீன் சாப்பிடுவது போன்றவற்றை) விடுவித்துக் கொள்வார்கள்.



வீரர் ஹுஸைன்(ரலி)அவர்களின் நினைவாக இவ்வாறு செய்வதாக கூறும் இவர்கள், நபி(ஸல்)அவர்களையும் அவர்களின் குடும்பத்தார்களையும் சேர்த்து ஐந்து பேர்களை கடவுள்களாக உருவகப்படுத்துகிறார்கள். ஏக இறைவனை மட்டுமே அவனுக்கு இணையேதும் கற்பிக்காமல் வணங்கக் கூறும் இஸ்லாத்தில் இவர்களின் இந்த ஐதெய்வக் கொள்கை எப்படி சாத்தியமாகும்?

முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும்  Empty Re: முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும்

Post by முஸ்லிம் Tue Dec 14, 2010 4:13 pm

ஆக, ஹுஸைன்(ரலி)அவர்களின் நினைவாக செய்வதாகக் கூறி இந்த முஹர்ரம் மாதத்தில் ஷியாக்கள் செய்யும் அட்டூழியங்களினால், அல்லாஹ்வின் கணக்கிலே அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெகுதூரம் சென்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். (அல்லாஹ் நம்மனைவரையும் காப்பானாக!) இது ஒருபுறமிருக்க,தமிழகத்தில் சிலரோ இதுவரை நாம் கூறிய‌ ஷியாக்களின் சடங்குகளை தவிர்ந்துக் கொண்டாலும், வேறுவிதமான பெயர்களில் வழிகேடான‌ காரியங்களில் ஈடுபடுகின்றனர்.   தமிழக அளவில் பிரசித்திப் பெற்றது 'ஹஸனார் ஹுஸைனார் ஃபாத்திஹா' வாகும்.



நபி(ஸல்)அவர்களின் அன்புப் பேரர்களில் ஒருவரான‌ ஹுஸைன்(ரலி)அவர்கள் கொல்லப்பட்டது, இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சோகமான நிகழ்ச்சிதான்! இந்த நிகழ்ச்சியைப்பற்றி கேள்விப்படும் மனிதாபிமானம் உள்ள யாரும் மனம் கலங்காமல் இருக்க முடியாது. ஆனால் அதற்காக நபி(ஸல்)அவர்கள் சிறப்பித்துக் கூறிய 'ஆஷுரா' நாளை சோக நாளாக நாம் ஆக்கிக் கொள்வதற்கும், அண்ணலவர்கள் காட்டித் தராத வணக்கங்களை மார்க்கமாக்கிக் கொள்வதற்கும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.



மார்க்க அறிஞர்களாக இருக்கக்கூடியவர்கள், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையையே தகர்க்கும், வழிகேட்டில் இட்டுச் செல்லும் அனாச்சாரங்களை கண்டித்து மக்களை நேர்வழியில் கொண்டு செல்லவேண்டியவர்களாக இருக்கவேண்டும் ! ஆனால் அவர்கள் கூட இந்த முஹர்ரம் மாதத்தில் மக்களிடம் பாராட்டுகளைப் பெறுவதற்காக ஹுஸைன்(ரலி)யின் சோக வரலாற்றைப் பேசி, முஹர்ரம் மாதத்தில் நடக்கும் பித்அத்களுக்கு ஆதரவு கொடுத்து, மக்களை வழிகேட்டில் அழைத்துச் செல்வதுதான் கொடுமையிலும் கொடுமை!




இந்த 'ஹஸனார் ஹுஸைனார் ஃபாத்திஹா'வுக்கென்று முஹர்ரம் பத்தாம் நாள் வீடு வாசலையெல்லாம் கழுவி விட்டு, கொழுக்கட்டை செய்து, இதனை ஆதரிக்கும் ஆலிம்களை அழைத்து ஃபாத்திஹா ஓதி, தெரிந்த அனைவருக்கும் விநியோகிப்பார்கள். அதிலும், போரில் வெட்டுப்பட்ட கை, கால், தலைகள் என்று உருவகப்படுத்த கொழுக்கட்டைகளை உருண்டையாகவும் நீளமாகவும் செய்வார்கள். சுப்ஹானல்லாஹ், ஹுஸைன்(ரலி)அவர்கள் மீது கொண்ட பாசம் என்று நினைத்து செய்யக்கூடிய இவையெல்லாம் அவர்களுக்கு கண்ணியம் கொடுக்குமா? கொஞ்சமாவது சிந்திக்கவேண்டாமா? கேட்டால் 'நாங்கள் ஒன்றும் பஞ்சா தூக்கவில்லை, அவர்கள் பெயரில் ஃபாத்திஹாதான் ஓதுகிறோம்' என்று பெருமையோடு கூறிக் கொள்கிறார்கள். இதற்கு பக்க பலமும் துண்டுகோலும் அவர்களிலுள்ள ஆலிம்கள்தான் என்கிறபோது, அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் பாமர மக்களை அல்லாஹ்தான் காப்பாற்றவேண்டும்!





மேலும் தஞ்சை மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் முஹர்ரம் மாத முத‌ல் பத்து நாட்களும் புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைப்பார்கள். அந்தப் பத்து நாட்களில் குழந்தை உருவானால் அந்தக் குழந்தை இரத்தக் காயம்பட்டு சாகுமாம்!(?) மடத்தனமான இதுபோன்ற கண்டுபிடிப்புகளை மார்க்கமாக்கும் கொடுமையும் சில இடங்களில் நடந்து வருகிறது. அல்லாஹ் அனுமதித்த ஒரு திருமண உறவை தடுத்து நிறுத்தி வைப்பது (தற்காலிகமாக என்றாலும் சரிதான்) எவருக்கும் அதற்கு உரிமை இல்லை. அதுபோல் ஆஷுரா நாளில் கண்டிப்பாக குளிப்பவர்கள் அந்த ஆண்டு முழுவதும் நோய்வாய்ப் படமாட்டார்கள் என்ற நம்பிக்கை வேறு சிலரிடத்தில்!



அதேசமயம், அல்லாஹ்வின் உதவியால் ஏகத்துவப் பிரச்சாரம் வளர்ந்து வரும் (சுமார் 25 வருஷ) இந்தக் காலக்கட்டதில் இவையெல்லாம் குறைந்து, உயிரோட்டமின்றி ஏதோ கடனுக்காகதான் நடத்தப்படுகின்றன. எனினும், முழுமையாக ஒழியவில்லை என்பதை வேதனைக் கண்களோடு இன்னும் பார்க்கத்தான் செய்கிறோம்.



எப்போது 'பித்அத்' என்ற ஒரு வழிகேடு மார்க்கத்தில் நுழைகிறதோ, அங்கு 'சுன்னத்' என்ற நபிவழி நம்மிலிருந்து வெளியேறிவிடும். ஆனால் இங்கே குறிப்பிட்ட விஷயங்கள் பித்அத் என்ற நிலையையும் தாண்டி, 'ஷிர்க்' என்ற இணை வைத்தலின் ஆபத்தான நிலைக்கு நம்மை கொண்டு தள்ளிவிடும் என்பதை நாம் உணரவும், அறியாத நம் சகோதர மக்களுக்கு எந்தவித தயவு தாட்சணையுமின்றி உணர்த்தவும் நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டுள்ளோம். ஆகவே இதுப்போன்ற மூட நம்பிக்கைகளை நம்மிலிருந்து தகர்த்தெறிந்து இஸ்லாத்தின் உண்மையான அடிச்சுவடுகளைப் பின்பற்றி வாழ்வோமாக! அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்தஆலா நம்மனைவருக்கும் உதவி செய்தருள்வானாக!





Last edited by முஸ்லிம் on Tue Dec 14, 2010 4:37 pm; edited 1 time in total
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும்  Empty Re: முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும்

Post by முஸ்லிம் Tue Dec 14, 2010 4:31 pm

முஹர்ரம் மாத்தத்தில் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளையும், முஸ்லிமான ஒவ்வொருவரும் அவற்றை விட்டும் முழுமையாக தவிர்ந்துக் கொள்ளவேண்டும் என்பதைப் பற்றியும் முந்திய பதிவுகளில் பார்த்தோம். அப்படியானால், நபி(ஸல்)அவர்களின் அருமைப் பேரரான ஹுஸைன்(ரலி)அவர்கள் கொல்லப்பட்ட நாளை எப்படி நினைவு கூர்வது? அந்த நாளை துக்க நாளாக எந்த முறையில்தான் அனுஷ்டிக்க வேண்டும்? இப்படியாக சில கேள்விகள் நம் சகோதரர்களிடத்திலே தோன்றுகிறது. இன்னும் சிலரோ, ஹுஸைன்(ரலி)அவர்களுக்காகதான் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளில் நோன்பு நோற்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது, இஸ்லாமிய வரலாற்றில் உயிர்நீத்த இறையடியார்களுக்காக‌ (நினைவு நாளாக) துக்கம் அனுஷ்டிக்கலாமா? என்பதுதான்.



இஸ்லாமிய மார்க்கம் என்பது வெறும் சட்டங்களை மட்டும் கூறி மனிதனை ஒரு கட்டாய நிலையில் வாழவைக்கும் மார்க்கமல்ல! உளவியல் ரீதியாக மக்களின் மனதைப் பக்குவப்படுத்தி, வளைந்து கொடுக்காமல் அதில் உறுதியாக இருந்து வெற்றிக் கண்டவர்களைப் பண்பட்டவர்களாக வாழவைக்கும் மார்க்கமாகும். அதனால்தான் இஸ்லாத்தின் ஒவ்வொரு வணக்கங்களுக்கும் ஒரு உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது இஸ்லாம்! அதுபோல் தன் குடும்பத்திலுள்ள‌ ஒரு உறவினர் இறந்துவிட்டால் அதற்காக குடும்பத்தினர் துக்கம் அனுஷ்டிக்கும் நாட்களுக்கும்கூட‌ ஓர் உச்சவரம்பை விதித்துள்ளது. ஏனெனில் அந்தச் சோகம் ஒருவருக்கு நீடித்துக் கொண்டிருக்குமானால், அது அவரின் மனதில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தி, அதனால் மனரீதியாக பாதிக்கப்பட்டு, இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாத ஒரு சூழலுக்கு ஆளாக நேரிடும். அதனால் உழைக்கக் கூட மனமின்றி பொருளாதார ரீதியாகவும்கூட கஷ்டப்படும் நிலைக்கு அவர் தள்ளப்படுவார்.



இதையெல்லாம் களைந்து, மனிதன் சகஜ நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக‌ தான் நபி(ஸல்)அவர்கள் இதற்கும் ஒரு உச்சவரம்பை நிர்ணயித்துள்ளார்கள்.



இறந்து போனவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்தப் பின், அவனது மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை அனுஷ்டிக்க‌ வேண்டும். (அதாவது) இந்த நாட்களில் நாங்கள் சுர்மா இடவோ, நறுமணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்குவதற்காகக் குளிக்கும்போது மணப் பொருட்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம்.




அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி); நூல்: புகாரி(313)



முக்கியமான‌ சில காரணங்களுக்காக ஒரு மனைவி மட்டுமே தன் கணவனின் இறப்பிற்கு நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க‌ வேண்டும் என்றும், மற்ற அனைவருமே தன்னைப் பெற்ற தாய், தகப்ப‌னாக இருந்தாலும், தான் பெற்று வளர்த்த பிள்ளைகளாக இருந்தாலும் 3 நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக்கூடாது என்றும் இந்த ஹதீஸ் கூறுகிறது. இதனடிப்படையில் ஒவ்வொருவரும் அதிகபட்சமாக 3 நாட்கள்தான் துக்கம் அனுஷ்டிக்கலாம்.



ஹுஸைன்(ரலி)கொல்லப்பட்டதை அவர்களது குடும்பத்தார் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டு, ('இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்' என்று சொல்லி) மூன்று நாட்களுக்கு பிறகு தங்களுடைய வாழ்வின் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டனர். ஹுஸைன்(ரலி)அவர்களின் குடும்பத்தார்களே ஒவ்வொரு ஆண்டும் முஹர்ரம் பத்தாம் நாளை துக்க நாளாக‌ அனுஷ்டித்ததில்லை. மேலும் மரணித்த ஒருவருக்காக வருடா வருடம் துக்கம் அனுஷ்டிப்ப‌தற்கான எந்த ஒரு வழிகாட்டுதலையும் நபி(ஸல்)அவர்கள் நமக்கு கற்றுத் தரவுமில்லை.



1. நபி(ஸல்)அவர்களிடம் திங்கட்கிழமை நோன்பு நோற்பதுபற்றி வினவப்பட்டபோது, "அது நான் பிறந்த நாளாகும். அந்த நாளில்தான் நான் இறைத்தூதராகவும் (தேர்ந்தெடுத்து)அனுப்பப்பட்டேன்" என்று பதிலளித்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

                 

அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி); நூல்:முஸ்லிம் (1387)




2. அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் திங்கட்கிழமை மரணித்தார்கள்.                   ஆதாரம்: புகாரி (1387)



மேற்கூறப்பட்ட இந்த இரண்டு ஹதீஸ்களையும் கவனிக்கவேண்டும். உலக வரலாற்றிலேயே மிகுந்த‌ அருளுக்கும் ஆசிக்குமுரிய நாள் அல்லாஹ்வின் வேதம் திருக்குர்ஆன் இறங்கிய நாளாகும். அதாவது நபி(ஸல்)அவர்கள் நபியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, திருக்குர்ஆனின் முதல் வசனம் அருளப்பட்ட திங்கட்கிழமை! (இரண்டாவது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது போல்) அதே திங்கட்கிழமை நபி(ஸல்)அவர்கள் மரணித்தாலும், அந்த நாளின் திருக்குர்ஆன் இறங்கிய சிறப்பை நபி(ஸல்)அவர்களின் ம‌ரணம் மறைத்து விடவில்லை. உலகில் நபி(ஸல்)அவர்களை விட சிறந்த ஒரு மாமனிதர் யாரும் கிடையாது! அப்படிப்பட்ட அந்த மாநபியின் மரண நாள் துக்க நாளாக நினைவு கூரப்படுவதற்கு மிகவும் பொருத்தமான நாளாக இருக்கலாம். ஆனால் அந்த நாளைக்கூட‌ துக்க‌ நாளாக அனுஷ்டிக்க இஸ்லாத்தில் நமக்கு அனுமதியில்லாத போது, மற்ற நாளை சோக நாளாக ஒருபோதும் அனுஷ்டிக்கவே முடியாது.




அதனால் ஹுஸைன்(ரலி)கொல்லப்பட்டது ஒரு சோக சம்பவம்தான் என்றாலும் அந்த சோகம் நடந்த முஹர்ரம் பத்தாம் நாள் நமக்கு துக்கநாள் கிடையாது. ஏனெனில் அதற்கு இஸ்லாத்தில் அனுமதியும் கிடையாது. ஹுஸைன்(ரலி)அவர்கள் கொல்லப்பட்டதைப் போன்று எத்தனையோ சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றின் நெடுகிலும் நிறைந்து காணப்படுகின்றன. இப்படியே இஸ்லாத்திற்காக உயிர்த் தியாகம் செய்த‌ நல்லவர்கள் எல்லாம் மரணித்த‌ நாட்களைப் பார்த்தோமானால், நம் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் துக்க நாளாகவேதான் இருக்கும். அதனால் இஸ்லாத்தில் நினைவு நாள் அனுஷ்டிப்பதோ பிறந்த நாள் கொண்டாடுவதோ கிடையாது.



நன்றி : பயணிக்கும் பாதை

முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும்  Empty Re: முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும்

Post by முஸ்லிம் Sun Nov 27, 2011 9:38 pm

முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும் அவசியம் கருதி மீள்பதிவு
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும்  Empty Re: முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum