தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

'பொங்கல்' பொதுவான ஒரு திருநாளா?

Go down

'பொங்கல்' பொதுவான ஒரு திருநாளா? Empty 'பொங்கல்' பொதுவான ஒரு திருநாளா?

Post by முஸ்லிம் Thu Jan 20, 2011 2:47 pm

முக்கிய குறிப்பு:



தமிழ் இஸ்லாமியர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை என்று கேட்கும் பல சகோதர சகோதரிகளுக்காக, இஸ்லாமியர்களின் சார்பில் விளக்கம் சொல்வதற்காகவே இந்த இடுகை! விளக்கத்தை புரிந்துக் கொண்ட பிறகு அழகிய முறையில் கருத்துக்களை பதியுங்கள். தயவுசெய்து விவாதிக்கவேண்டாம்! இதன் மூலம் 'பொங்கல்' சம்பந்தமாக இஸ்லாமியர்கள் மீதுள்ள‌ சிறு சிறு சந்தேகங்களும் களையப்பட்டு, நமக்கிடையே இருக்கும் சகோதரத்துவம் நீடிக்கவேண்டும் என்பதே நம் ஆவல்.



தை மாதம் முதல் நாளிலிருந்து 3 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா என்பது, முழுமையான இயற்கை நெறிகளை மட்டும் சார்ந்த, அறுவடையின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் ஒரு வேளாண்மைத் திருவிழாவாகத்தான் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டது. பல ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் கூட இந்த நாளை சந்தோஷமாக கொண்டாடி வந்தனர். காலம் முழுதும் உழைக்கும் உழவர்களின் சந்தோஷத்திற்காக அந்த மிராசுதாரர்கள் அன்றைய தினம் அவர்களுக்கு புத்தாடைகள், நெல், கரும்பு, பழங்கள், பணம், தேவையான இன்னபிற பொருட்களையெல்லாம் கொடுத்து சந்தோஷமாக அனுப்பி வைப்பார்கள். அதைப் பெற்றுக் கொள்ளும் விவசாயிகள் தங்கள் இல்லங்களில் கூடி புத்தரிசியில் பொங்கலிட்டு, உண்டு மகிழ்ந்து, ஓய்வெடுத்து சந்தோஷத்தைக் கொண்டாடி வந்தனர். ஆனால் காலம் செல்லச் செல்ல... எந்த மதமும் சாராத ஒரு விழா, வணக்க வழிபாட்டுடன் தொடர்பில்லாத ஒரு விழா, தமிழர் திருவிழாவாகக் கொண்டு வர‌ப்பட்ட ஒரு விழா தனிப்பட்ட‌ மத வழிபாடுகள் ஊடுருவியதாக மாறிவிட்ட‌து.









நன்றி கூகிள்



ஆம், தற்காலப் பொங்கலை எடுத்துக் கொண்டால் எல்லா மதத்தவர்களும் சேர்ந்துக் கொண்டாடும் வகையில் அதன் கொண்டாட்டங்கள் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை! 'ஒட்டு மொத்த தமிழர்களும் ஒற்றுமையுடன் எந்த வித ஜாதி, மத பேதமுமின்றி கொண்டாடக்கூடிய‌ ஒரே விழா பொங்கல் திருவிழா' என்று சொல்வது இன்றைய பொங்கல் கொண்டாட்டத்திற்கு நிச்சயமாக பொருந்தாது. ஒவ்வொரு மதத்தின‌ருக்கும் அவரவர்களுக்கென்ற சில அடிப்படைக் கொள்கைகள் உள்ளன. அந்தந்த மக்கள் அவற்றை முறையாக கடைப்பிடிப்பதிலும், தங்கள் இறைக்கொள்கையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் வாழ்வதிலும் அவரவருக்கும் உரிமையுண்டு. அதேபோல் ஒருவரின் வணக்க விஷயங்களில் அடுத்தவர் தலையிடுவதும், தங்களின் வணக்க வழிபாடுகளை அடுத்தவர்களிடம் வலுக்கட்டாயமாக‌ திணிப்பதும் முறையானதல்ல. எனவேதான் இஸ்லாம் மார்க்கம் மற்ற‌ மதங்களின் விஷயங்களில் தலையிடுவதில்லை.



ஆனால் "தமிழர்களாக இருந்தாலே 'தமிழர் திருநாள்' எனப்படும் பொங்கலைக் கொண்டாடதான் வேண்டும்" என்பது பலரின் எண்ணமாக உள்ளது. இது ஒரு தவறான கண்ணோட்டமாகும். பொங்கல் கொண்டாடவில்லையென்றால் தமிழுக்கோ மற்ற தமிழர்களுக்கோ எதிரானவர்களாகவோ, தமிழ்ப் பற்று இல்லாதவர்களாகவோ யாரும் ஆகிவிடமாட்டார்கள். பொங்கல் பொதுவான ஒரு திருநாளாக இருந்தால் அதில் எந்தவொரு மதத்தினுடைய வழிபாட்டு அம்சங்களும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான ஒரு விழாவாக இருக்கவேண்டும். அதைவிடுத்து சூரிய வழிபாடு, படையல், பசு வழிபாடு, ஆராதனை என பிற‌ மார்க்கத்தில் தடுக்கப்பட்ட அனைத்தும் புகுத்தப்பட்ட ஒன்றை 'தமிழர் அனைவருக்கும் பொதுவான திருநாள்' என்று கூறி கொண்டாட வலியுறுத்துவது, நிச்சயமாக பிற‌ மத/மார்க்கக் கொள்கைகளை அலட்சியப்படுத்தும் விதமாவே உள்ளது. சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் கூடி சந்தோஷ‌மாக கொண்டாடுவதற்கு ஒரு திருநாளாக பொங்கல் இருக்கட்டுமே என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கலாம். அதை 'மதச் சார்பற்ற தமிழர் திருவிழா'வாக மட்டும் கொண்டாடினாலே தவிர, மதச் சடங்குகளோடு பின்னிப் பிணைந்துள்ள இன்றைய பொங்கலை 'தமிழுணர்வு உள்ளவர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்' என்று சொல்வதில் எந்த விதத்திலும் நியாயமில்லை.



மதச் சார்பற்று அனைவரும் கொண்டாட 'சமத்துவப் பொங்கல்' என்று தமிழக‌ அரசாங்கம் கொண்டு வந்த முறையில் கூட, எல்லா மதத்தவர்களும் விருந்தாளிகளாக அழைக்கப்படுவார்களே தவிர, கொண்டாடும் விதத்தை அரசாங்கம் அனைவருக்கும் பொதுவாக்கவில்லை. அதே சம்பிரதாயங்கள் மற்றும் வழிபாடுகளோடுதான் மதச் சார்பற்ற (?) ஒரு அரசாங்கமும் சமத்துவப் பொங்கல் நடத்தி வருகிறது. இந்நிலையில், பெரும்பாலான இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட மறுப்பது பற்றி மற்ற‌ மக்களிடையே பரவலாக எழும் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் குறிப்பிடவேண்டியுள்ளது.



‍‍தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள பொங்கல் திருவிழாவை ஏன் தமிழ் இஸ்லாமியர்களும், தமிழ் கிறிஸ்தவர்களும் கொண்டாட மறுக்கிறீர்கள்?




பிற மத வணக்கங்களையும் வழிபாடுகளையும் உள்ளடக்கிய‌தாக மாற்றப்பட்ட ஒரு விழாவை, 'தமிழ்க் கலாச்சாரம்' என்ற பெயரில் அடுத்தவர்க‌ளும் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு யாருக்கும் எந்த விதத்திலும் உரிமையில்லை என்பதை முதலில் புரிந்துக் கொள்ளவேண்டும். நவீனங்களின் முன்னேற்றங்களைப் பயன்படுத்திவரும் நாம், போக்குவரத்திற்கு மாட்டு வண்டியைப் பயன்படுத்துவதுதான் நமது கலாச்சாரம் என பிடிவாதம் பிடிக்க முடியுமா? வேஷ்டி அணிவதுதான் தமிழனின் பண்பாடு என்று கூறினால் அதைக் கடைபிடித்துதான் ஆகவேண்டுமா? அனைவராலும் அது சாத்தியப்படுமா? இப்படி அன்றாட வாழ்க்கை விஷயங்களிலேயே நம்மை தமிழ்க் கலாச்சாரப்படி மாற்றிக் கொள்ள முடியாதபோது, தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் அவரவர்களின் இறைக் கொள்கையில் எவ்வாறு தங்களை மாற்றிக் கொள்ள முடியும்?  



இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தவரை வணக்கமின்றி ஒரு விழாவைக் கொண்டாடுவதற்கு எந்த தடையுமில்லை. உதாரணமாக சுதந்திர தின விழா, குடியரசு தின விழாக்கள் போன்று. ஏனெனில் ஏக இறைவனை மட்டுமே வணங்கவேண்டும், அவனல்லாத எந்த படைப்பினங்களையும் வணங்கக்கூடாது என்பது இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் முதன்மையானது! ஒரே இறைவன் அல்லாத பல தெய்வ வணக்கங்களாகவும், படைப்பினங்களை வணங்கும் விழாவாகவும் இருக்கும் பட்ச‌த்தில் அதிலிருந்து ஒதுங்கி விடுமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதன் கட்டளைக்கு அடிபணிந்தே இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர்த்துக் கொள்கிறார்களே தவிர வேறு எந்தக் காரணமும் கிடையாது. 




‍‍‍நீங்களும் தமிழர்களாக இருக்கும் பட்சத்தில் தமிழரின் திருநாளான பொங்கலை மதம் சார்ந்த காரண‌ங்களைக் கூறி புறம் தள்ளி விட்டு, எப்படி தமிழர்கள் என்று கூறிக் கொள்கிறீர்கள்? 



'பொது விழா' என்று வாயளவில் சொல்லப்படும் ஒன்றை தனிப்பட்ட ஒரு மதம் சார்ந்த விஷயங்களைச் சேர்த்து கொண்டாடும்போது, அந்த விழாவை நடைமுறைப்படுத்த எது சிக்கலாக உள்ளதோ அதே மதம் சார்ந்த காரணங்களைதானே கூறமுடியும்? இல்லாத வேறு ஒரு காரணத்தைக் கூறமுடியாது. மேலும் உங்கள் கேள்வியில் தமிழனாக இருப்பதற்கு முஸ்லிமாக இருக்கக் கூடாதோ என்ற சந்தேகம் வருகிறது. கடவுள் கொள்கையால் முஸ்லிம்களாகவும், தேசத்தால் இந்தியர்களாகவும் வாழும் தமிழ்நாட்டு இஸ்லாமியர்களுக்கு 'மொழியால் தமிழர்கள்தான்' என்று உரிமையோடு கூறிக் கொள்வதில் எந்த தயக்கமுமில்லை! எனவே பொங்கல் கொண்டாடாவிட்டாலும் (அவர்கள் இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவ‌ர்களோ) தமிழர்கள் தமிழர்கள்தான்.



அப்படியானால் மத‌த்தின் பெயரால் தமிழ்ப் பண்பாட்டை மறுப்பதோ, வெறுப்பதோ சரியானதுதானா? 




'தமிழ்ப் பண்பாடு', 'தமிழ்க் கலாச்சாரம்', 'தமிழர் திருநாள்' என்று 'தமிழ்'படுத்தி மட்டுமே பார்க்கிறீர்களே தவிர, அதை மற்றவர்களும் நடைமுறைப்படுத்த முடியாத சிக்கல்கள் நிறைந்துள்ளதை நீங்கள் உணரவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாக பானையில் திருநீரு பூசி குங்குமம் வைப்பதும், மாடுகளுக்கு திலகமிட்டு ஆராதனை செய்வதும், தங்கள் விருப்ப‌ தெய்வங்களின் படங்களை வைத்து படையல் செய்வதும், சூரியனை வழிபட்டு பூஜிப்பதும் அவரவர்களின் உரிமை, விருப்பம். முன்பே சொன்னதுபோல் இஸ்லாம் பிற‌ மதங்களின் கொள்கை விஷயங்களில் தலையிடுவதில்லை. அதேபோல் எந்த நிலையிலும் தன்னுடைய அடிப்படை கொள்கைகள் தகர்க்கப்படுவதற்கும் இஸ்லாம் அனுமதிக்கவுமில்லை. ஆக, மதக் கொள்கைகள் கலக்காத ஒரு விழாவாக பொங்கல் இருக்குமானால் உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது. தவிர இன்றைய வழக்கத்திலுள்ள‌ பொங்கலை இஸ்லாமியர்கள் கொண்டாடாமல் இருப்பதால் தமிழ்ப் பண்பாட்டை அவர்கள் வெறுப்பதாக ஆகாது. அவரவர் இறைக்கொள்கையின் உறுதிப்பாடு என்று எடுத்துக் கொள்வதுதான் மிகவும் நியாயமானது!



இல்லையென்றால் பொங்கல் விழாவின்போது அனைவரும் ஒரே மத சடங்குகளின் பின்னால் செல்லாமல் அவரவர்க‌ளும் தங்க‌ளின் இறைவனை வணங்கி, பொங்கலிட்டு கொண்டாடலாமே?



இஸ்லாத்தைப் பொறுத்தவ‌ரை வணக்கம், வழிபாடு என்று வந்தாலே அவரவர்களும் தாங்கள் நினைத்தப‌டியெல்லாம் வணக்கங்களை அமைத்துக் கொள்வதற்கு அனுமதியில்லை. ஒவ்வொரு வணக்கங்களுக்கும் ஒரு வரையறையை இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. அதனால்தான், இஸ்லாமிய மக்களே அறியாமையினால் செய்யும் தர்கா வழிபாடு, சந்தனக்கூடு மற்றும் மூட நம்பிக்கைகள் கொண்ட வணக்கங்கள், சடங்குகளை விட்டும் விலகி வாழும்படி பல இஸ்லாமிய அறிஞர்களும் உபதேசித்து வருகிறார்கள். அப்படியிருக்க பொங்கலுக்காக ஒரு தனி வழிபாடு செய்வது என்பது சாத்தியமில்லாதது. மற்றபடி பொங்கல் என்றாலே அறுவடை காலத்தின் மகிழ்ச்சிக்காக‌ புத்தரிசியைச் சமைத்து, கூடி சாப்பிடுவது மட்டும்தான் என்றால், அந்த கொண்டாட்டத்தில் முஸ்லிம்களுக்கு எந்த ஆட்சேபனையுமில்லை.   



தமிழர்கள் அனைவரும் இந்த பொங்கல் திருவிழாவை ஒரே மாதிரியாகக் கொண்டாடினால்..?



எப்படி ஒரு காலத்தில் தானியங்கள் வீட்டுக்கு வந்து சேருகின்ற மகிழ்ச்சியை மட்டும் பிரதிபலிக்கின்ற விழாவாக இந்தப் பொங்கல் விழா இருந்ததோ, அந்த நிலைக்கு அதைக் கொண்டு வந்தால் நீங்கள் சொல்வதுபோல் எல்லோரும் ஒரே மாதிரியாக நிச்சயம் கொண்டாடுவோம். திருநீரு பூசுவதில் ஆரம்பித்து எந்தவித சடங்கு/சம்பிரதாயங்கள், பூஜை/புனஸ்காரங்கள், படையல்/வண‌க்கமின்றி ஒரு பொங்கல் கொண்டாட அனைவரும் சேர்ந்து முன் வந்தால் அதற்கு இஸ்லாமியர்கள் தள்ளி நிற்கமாட்டார்கள். மேலே சொன்ன‌வை எதுவுமின்றி பொங்கல் சாத்தியமென்றால் ஆண்டுக்கொருமுறை அறுவடை காலத்தில் நாம் அனைவரும் கூடி பொங்கலிட்டு, பகிர்ந்துண்டு மகிழ்வோம்! சரியான புரிந்துணர்வோடு சந்தோஷமாக வாழ்வோம்!


நன்றி : பயணிக்கும் பாதை
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10950
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum