தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இயற்கைச் சீற்றங்கள் சொல்லும் செய்தி!

Go down

இயற்கைச் சீற்றங்கள் சொல்லும் செய்தி! Empty இயற்கைச் சீற்றங்கள் சொல்லும் செய்தி!

Post by முஸ்லிம் Sat Mar 19, 2011 5:57 pm

உலகின் தொழில் நுட்பங்களில் முன்னேறிவரும் நாடுகளில் முக்கியமான நாடு ஜப்பான். சுமார் 20, 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு முழ நீள‌முள்ள குட்டி விமானத்தை ரிமோட் மூலம் பறக்கச் செய்து லாவகமாக தரையிறங்கும் விளையாட்டுப் பொருளை, தானே கண்டுபிடித்து விளையாடிப் பார்த்து நம்மை வியப்பில் ஆழ்த்திய சின்னஞ்சிறு சிறுவர்கள் ஜப்பான் மண்ணின் மைந்தர்களே! எந்தவொரு வெளிநாட்டுப் பொருட்களும், குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்கள் நமக்கு அறிமுகம் ஆனபோது, அது "Made in Japan" என்றால் அதற்குதான் முதலிடம். அந்தளவுக்கு தரமும், நுட்பமும் நிறைந்த உற்பத்திகளுக்கு சொந்தக்காரர்கள் ஜப்பானியர்கள். உயரத்தால் குறைந்தவர்கள் என்றாலும் இறைவன் அவர்களுக்கு கொடுத்திருக்கும் அறிவினால் நிறைந்தவர்கள்! அவர்களின் நாடெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களிலும், சாலை அமைப்புகளிலும் மின்னும் தொழில் நுட்பங்கள்,  நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அவர்களின் நவீன கண்டுபிடிப்புகளுக்கு சாட்சி சொல்லும்!



அப்படிப்பட்ட விஞ்ஞான முன்னேற்றம் மிகுந்த ஜப்பானில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுவதால் பெரும்பாலான கட்டிடங்களை பூகம்பத்தால் பாதிக்காத வகையில் அமைத்துள்ளனர். இருந்தும் கடந்த 11 ம் தேதி அங்கு என்ன நடந்தது, அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை உலகமே கவலைக் கண்கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறது. ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட 8.9 ரிக்டர் அளவில் பதிவான பூகம்ப‌தைத் தொடர்ந்து தாக்கிய இந்த மிகப் பெரிய சுனாமி, இதுவரை உலகம் சந்தித்த பெரிய அளவிலான சுனாமிகளில் இரண்டாவது பெரிய சுனாமி என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





இதன் பாதிப்பினால் அணு உலைகள் வெடித்து சிதறிக் கொண்டிருக்கின்றன. இன்றைய செய்தி, 4-ம் பிரிவில் தீ பிடித்த பிறகு கதிர்வீச்சு காற்றில் கலப்பது அதிகரித்துவிட்டதால், ஜப்பானில் அவசரநிலை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, மக்கள் மிகவும் உஷாராக இருக்கவேண்டும் என்று ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தப் பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடைக்கிறார்கள். இந்த செய்திகளைக் கண்டும், கேட்டும் மனித இனமே கலங்கிப் போயிருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு இந்த நிகழ்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.






இதற்கிடையில் வரக்கூடிய‌ 19 ம் தேதி 'சூப்பர் மூன்' ஏற்படப் போவதாக அறிவித்துள்ளனர். அதாவது பூமியிலிருந்து சுமார் 2,38,857 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள சந்திரன், தன் சுற்றுவட்டப் பாதையில் மிகக் குறுகிய தூரத்தில் ஏறத்தாழ 2,21,567 மைல்கள் வரை பூமியை நெருங்குகிறது. சந்திரன் க‌டந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வரும் விண்வெளியில் நிகழும் இந்த அரிய நிகழ்வினால் மிகப் பெரிய அளவில் அழிவுகள் ஏற்படலாம் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு முன் இந்த சூப்பர் மூன் நிகழ்வு நடந்த 1955, 1974, 1992 ம் ஆண்டுகளில் மோசமான வானிலை ஏற்பட்டது எனவும், மற்றும் 2005 ல் ஏற்பட்ட‌ சூப்பர் மூன் நிகழ்வினால்தான் 2004 ன் கடைசியில் இந்தியப் பெருங்கடலில் சுனாமி வந்தது, அதுபோல் இந்த முறை ஜப்பானை சுனாமி தாக்கியிருக்கிறது எனவும் பரவலாக கூறப்படுகிறது.





மேலும் சந்திரனால் பூகம்பத்தை ஏற்படுத்த முடியாது; ஆனால் கடல் அலைகளில் மாற்றத்தை அது ஏற்படுத்தும். இந்த மாற்றம் வானிலையோடு சேர்ந்தால் கடலோரப் பகுதிகளில் பேரழிவுகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர் ஜான் கெட்லி தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மற்றொரு புறமோ அதன் விளைவுகள் பற்றிய செய்திகள் வெறும் புரளி என்றும் கூறப்படுகிறது.



எது எப்படியோ... இயற்கைச் சீற்றங்கள் தரும் இதுபோன்ற பேரழிவுகளை இன்றைய விஞ்ஞானத்தைக் கொண்டு தடுக்க மனிதனால் இயலவில்லை. ஏதோ சில முன்னெச்சரிக்கைகளை ஓரளவுக்கு கூறமுடியுமே தவிர, அவையும் 'புலி வருகிறது...' என்ற கதையாகத்தான் போகிறது :( இப்படியான‌ பேரழிவுகள் எப்போது ஏற்படும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க‌வோ, தடுக்க‌வோ யாருக்கும் சக்தியில்லை என்பதை விஞ்ஞானிக‌ளும் ஒப்புக்கொள்கின்றனர்.




அப்படியிருக்க, இந்த இயற்கைச் சீரழிவுகளில் பாதிக்கப்பட்ட மக்களின் பொருட்சேதங்களை சிறுக சிறுக நிவர்த்தி செய்யலாம் என்றாலும், அவர்களின் உயிர்ச் சேதங்களுக்கு உலக மக்கள் அனைவரும் சேர்ந்து ஆலோசித்தாலும், உதவினாலும் போன உயிர்களுக்கு அவை தீர்வாகுமா? அவர்களின் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள கலக்கங்களையும் துக்கங்களையும் துடைத்து சரியானதொரு ஆறுதலையும், எதிர்கால வாழ்வுக்கான நிம்மதியையும் அளிப்பதற்கு இவ்வுலகைப் படைத்து ஆட்சி செய்யும் ஏக இறைவனால் மட்டுமே முடியும். அவர்களுக்காக‌வும், இன்று அவ‌ர்களுக்கு ஏற்பட்ட நிலை நமக்கும் உலகின் அனைத்து மாந்தருக்கும் ஏற்படாதவாறும் இருக்க‌ நாம் வல்ல‌ இறைவனை இறைஞ்சுவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை உரிய முறையில் செய்வோம். அதேசமயம் இப்படிப்பட்ட‌ இயற்கைச் சீற்றங்களால் இந்த மனித சமுதாயம் இன்னும் பாடம் படிக்கவில்லை என்பது வருத்தமான உண்மை! இதற்கு முன்னால் நடந்த பேரழிவுகளைக் கண்ணால் கண்டவர்களின் வாழ்க்கையில் எந்த திருத்தங்களையும் நாம் காணமுடியவில்லை.



இயற்கைக் கொஞ்சும் அலைகடலாக இருந்தாலும், எதையும் மிச்சம் வைக்காமல் நொடிக் கணக்கில் எல்லாவற்றையும் இழக்க வைத்துவிடும்! அல்லது கண்ணிமைக்கும் நேரத்தில் நம்மோடு சேர்த்து அனைத்தையும் வாரிச்சென்றுவிடும். பிறந்து வளர்ந்த பூமியாக இருந்தாலும் பூகம்பம் வந்தால் விழுங்கவே செய்யும்! இதமாய் வருடும் தென்றலும் எதிர்ப்பார்க்காத விதத்தில் சூறாவளியாய் மாறி சீரழிக்கும்! இவற்றையெல்லாம் தெரிந்த மனிதன் மட்டும் தன் வாழ்வில் இன்னும் மாற்றம் செய்துக் கொள்ள‌வில்லை. அடுத்த வினாடி தான் உயிரோடு இருப்பதற்கு அவனிடத்தில் ஏதும் உத்திரவாதம் உள்ளதா? இயற்கைச் சீற்றங்கள் என்றும், தலைவிதி என்றும், தோஷம் என்றும் அவற்றிற்கு பெயர் சூட்டி காலப்போக்கில் மற‌ந்து போனாலும், அவை நமக்கு சொல்லும் செய்திதான் என்ன...? உலகம் அழியப்போகும் நாள் மிக அருகில் வந்துக் கொண்டிருப்பதன் அடையாளமல்லவா இவை? 



இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்துமே மிகப் பெரிய சூப்பர் பவரான ஒரே இறைவனின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகின்றன என்பதையும், இப்பிரபஞ்சம் முழுவதும் ஒருநாள் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள சக்தியை முற்றிலுமாக இழந்து அழிந்து போகும் என்பதையும் பகுத்தறிவுள்ள ஒவ்வொரு மனிதனும் நம்புவான். வந்தே தீரும் அந்த நாள்தான் யுக முடிவு நாள்! அந்த நாளில் இதுவரை சுனாமியும் பூகம்பமும் நிகழ்த்திய‌ பேரழிவை விட பல்லாயிரக்கணக்கான மடங்கு பயங்கரமான, நம் சிறு அறிவினால் சிந்தித்துக்கூட பார்க்க முடியாத அளவுக்குள்ள‌ பாதிப்புகள் உலகில் மோசமான விளைவுகளையும், பேரழிவுகளையும் ஏற்படுத்துமே.... அதுதான் இவ்வுலகத்தின் இறுதிநாள்!



ஜாதி, மத, இனவெறியால் தன் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களைக் கொத்துக் கொத்தாக குடும்பத்தோடு கொன்று குவிக்கும் அராஜகர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை நெருப்பில் வீசிய அரக்கர்களுக்கும், அவர்களை தண்டனையிலிருந்து தப்பிக்கவிட்ட கயவர்களுக்கும், பாதுகாவலன்போல் நடித்து முதுகில் குத்தும் பாதகர்களுக்கும் படைத்த இறைவன் முன்னால் நரம்பு நரம்பாக‌ சுளுக்கு எடுக்கப்படும் நாள் அது! அந்த நாள் பற்றிய வல்ல இறைவனின் எச்சரிக்கையை திருக்குர்ஆன் கூறுகிறது, பாருங்கள்!




வானம் பிளந்துவிடும்போது.. நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது.. கடல்கள் கொதிக்க வைக்கப்படும்போது..மண்ணறைகள் புரட்டப்படும்போது... ஒருவன் தான் முற்படுத்தியதையும் பிற்படுத்தியதையும் அறிந்துக் கொள்வான்! (அல்குர்ஆன்: 82: 1-5)







இன்றைய சுனாமியும் பூகம்பங்களும் அதற்கு ஒரு சேம்பிள்தான்! ஏனெனில் இவை பூமியில் மேல்பரப்பிலும், நீர்ப்பரப்பிலும் மட்டுமே பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் அன்று...? வானத்திலிருந்து வரும் பாதிப்புகளும், மலைகள் சிதறி ஏற்படுத்தும் விளைவுகளும் நம்மால் கற்பனை செய்யதான் மனம் தாங்குகிறதா? திருமறைக் குர்ஆனை பொய்ப்பிப்பவர்கள் இனியாவது சிந்திக்க மாட்டார்களா? அனுபவங்களின் அடிப்படையில்கூட‌ மனிதன் பாடம் படிக்கவிட்டால்..... அந்த இறைவனுக்கா நஷ்டம்?



திருக்குர்ஆனின் மற்ற எச்சரிக்கைகளையும் பார்ப்போம்!



சூரியன் சுருட்டப்படும்போது... நட்சத்திரங்கள் உதிரும்போது... மலைகள் பெயர்க்கப்படும்போது... கருவுற்ற‌ ஒட்டகைகள் கவனிப்பாரற்று விடப்படும்போது... காட்டு விலங்குகள் ஒன்று திரட்டப்படும்போது...

கடல்கள் தீ மூட்டப்படும்போது.... உயிர்கள் மீண்டும் (உடல்களோடு)ஒன்றிணைக்கப்படும்போது...(அல்குர்ஆன் 81:1-7)




பூமி பேரதிர்ச்சியாக குலுக்கப்படும்போது... பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும்போது... இதற்கு என்ன நேர்ந்துவிட்டது என்று மனிதன் கேட்கும்போது... அந்நாளில், தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும்!(அல்குர்ஆன் – 99:1-5)



அன்று நடப்ப‌வையெல்லாம் ஏற்கனவே இறைச்செய்தி மூலம் அறிவிக்கப்பட்ட‌வைதான் என தெரியவரும்போது, இன்று இயற்கைச் சீற்றங்களிலிருந்து தப்பியவர்களைப் போல் அன்றைய நாள் இறைவனின் கோரப்பிடியிலிருந்து ஒருவரும் தப்பமுடியாது. ஏக இறைவனை மட்டும் நம்பி, அவ‌னுக்கு அஞ்சி வாழ்ந்தவர்களைத் தவிர! தான் செய்த குற்றங்களுக்கான தடயங்களை மறைத்துவிட்டு, பதியப்பட்ட ஆவணங்களை அழித்துவிட்டு நல்லவனாக‌ இன்றுபோல் நாடகம் போட அன்று யாராலும் முடியாது. இன்றுள்ள ஆட்சியும் அதிகாரமும் அன்று பயன் தராது! அன்று இறைவனின் பிடி கடுமையாக இருக்கும். அதற்கு முன் தன் தவறுகளிலிருந்து திருந்தி, எது செய்தாலும் என்னைக் கேட்க ஆளில்லை என்ற இறுமாப்பை விடுத்து, இயற்கை பேரழிவுகள் மூலம் கிடைக்கும் இறை எச்சரிக்கையில் படிப்பினைப் பெற்று, மனித நேயத்தோடு பிறர் நலன் காத்து, நேர்மையும் நல்லொழுக்கமும் பேணி, நல்வழியில் நல்லறங்கள் செய்து வாழ்வோமாக!


நன்றி : பயணிக்கும் பாதை
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10950
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானில் பி.பி.சி செய்தி சேனலுக்கு தடை
» பொய் செய்தி:ஈரானில் பி.பி.சி நிருபர் கைது
» பணம் கொடுத்து செய்தி வெளியிடல்: ப்ரஸ் கவுன்சிலில் 30 புகார்கள்
» முல்லா உமர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானதின் பின்னணியில் அமெரிக்கா – தாலிபான்
» ஃபேஷன் விஷயங்கள் குறித்து முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிட்ட இந்திய ஊடகங்கள் மீது பாக். அமைச்சர் ஹினா கோபம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum