தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இறையச்சமுடையவராவது எப்படி?

Go down

இறையச்சமுடையவராவது எப்படி? Empty இறையச்சமுடையவராவது எப்படி?

Post by முஸ்லிம் Wed Dec 15, 2010 4:48 pm

A) இறையச்சமுடையவரின் பண்புகள்!



a) மறைவானவற்றின் மீது நம்பிக்கைக் கொண்டு, இறைவனை தொழுது, தான, தர்மம் செய்வார்கள்!


“(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்” (அல்-குர்ஆன் 2:3-5)


b) வாக்குறுதிகளை நிறைவேற்றி, உறுதியுடனும் பொறுமையுடனும் இருப்பார்கள்!


“புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்)” (அல்-குர்ஆன் 2:177)


c) அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், இரவின் கடைசி (ஸஹர்) நேரத்தில் வணங்கி, நாயனிடம் மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பார்கள்!


“பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு. (நபியே!) நீர் கூறும்: ‘அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா – பயபக்தி – உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு; இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான். இத்தகையோர் (தம் இறைவனிடம்): ‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!’ என்று கூறுவார்கள். (இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்” (அல்-குர்ஆன் 3:14-17)


d) இரவில் வேதத்தை ஓதி சஜ்தா செய்வார்கள்! நல்லதை ஏவி தீயதை தடுப்பார்கள்!


“(எனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர்; வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள்; இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்று முள்ளவர்கள். இவர்கள் செய்யும் எந்த நன்மையும் (நற்கூலி கொடுக்கப்படாமல்) புறக்கணிக்கப்படாது; அன்றியும், அல்லாஹ் பயபக்தியுடையோரை நன்றாக அறிகிறான்” (அல்-குர்ஆன் 3:113-115)



e) வறுமையான நிலையிலும் செல்வ செழிப்புள்ள நிலையிலும் அல்லாஹ்வுக்காக செலவிடுவார்கள்! கோபத்தை அடக்கி பிறர் செய்கின்ற தவறுகளை மன்னித்துவிடுவார்கள்!


“(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்” (அல்-குர்ஆன் 3:134)


f) பாவமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டால் அதிலிலேயே உழன்று கொண்டிருக்காமல் மனம் திருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள்!


“தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 3:135)


g) தவ்பா செய்து, பாவங்களிலிருந்து விலகி, ஸாலிஹான நற்கருமங்களைச் செய்வார்கள்!


“தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) – நல்ல – செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) – சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. அத்னு என்னும் அந்தச் சுவனபதிகளை அர்ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு – அவற்றை அவர்கள் காண முடியாத போதே – வாக்களித்தான்; நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறும். ஸலாம் (சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே) தவிர அச்சுவனபதிகளில் அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள்; இன்னும் அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது. இத்தகைய சுவர்க்கத்திற்கு நம் அடியார்களில் தக்வா – பயபக்தி – உடையவர்களை நாம் வாரிசாக்கிவிடுவோம்” (அல்-குர்ஆன் 19:60-63)


h) இவ்வுலகில் தங்களைப் பெருமைப் படுத்திக் கொள்ளமாட்டார்கள்! குழப்பத்தையும் உண்டாக்க மாட்டார்கள்!


“அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு” (அல்-குர்ஆன் 28:83)


i) நிராகரிப்பர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற இவ்வுலகின் அற்ப சுகங்களைக் கண்டு இறையச்சமுடையவர்கள் ஆசை கொள்ளமாட்டார்கள்! மறுமையின் நிரந்தர வாழ்விற்கு ஆசைப்படுவார்கள்!



“நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம். அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்). தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வேறில்லை. ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம்” (அல்-குர்ஆன் 43:33-35)


j) மறைவிலும் இறைவனுக்கு அஞ்சி இறைவனையே முற்றிலும் சார்ந்து இருப்பார்கள்!


“(அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும். ‘இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).’ எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது). ‘ஸலாமுடன் – சாந்தியுடன் – இ(ச் சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள்¢ இதுதான் நித்தியமாக நீங்கள் தங்கியிருக்கும் நாளாகும்’ (என்று கூறப்படும்). அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது; இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது” (அல்-குர்ஆன் 50:31-35)


B) இறையச்சமுடையவராவது எப்படி?


a) இறைவனுக்கு பயந்து அவன் விதித்த வரம்புகளை மீறாமல் இருந்தால் இறையச்சமுடையவராகலாம்!


“நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்” (அல்-குர்ஆன் 2:187)


b) விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு மிக்க நெருக்கமானதாகும்!


“விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 2:237)


c) பயபக்தியுடைவர்கள் அற்பமான இவ்வுலக இன்பத்தைவிட மறுவுலக இன்பமே மேலானது என்று கருத வேண்டும்!



“(நபியே!) நீர் கூறுவீராக: ‘இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 4:77)


d) ஒரு சாராரை நீங்கள் வெறுத்த போதிலும் அவர்களுக்கும் நீதி செலுத்த வேண்டும்!


“முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 5:8)


e) இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும், வேடிக்கையுமாகும் என்பதையும் மறுமை வீடே நிரந்தரமானதும் மிக்க மேலானதும் என்பதையும் சிந்தித்து உணர வேண்டும்!


“உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?” (அல்-குர்ஆன் 6:32)


“மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா?” (அல்-குர்ஆன் 12:109)


f) வேறு வழிகளையல்லாது அல்-குர்ஆனை பின்பற்றினால் இறையச்சமுடையவராகலாம்!


“நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி)

பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்” (அல்-குர்ஆன் 6:153)



g) இறைவேதத்தைப் பலமாக பற்றிப் பிடித்துக்கொண்டால் இறையச்சமுடையவராகலாம்!


“நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றைச் சிந்தியுங்கள்; நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன் 7:171)


h) அல்-குர்ஆனைப் படித்து அதன் எச்சரிக்கைகளை மீறாமல் நடக்க வேண்டும்!


“மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்” (அல்-குர்ஆன் 20:113)


i) பயபக்தியுடையவராவதற்கு குர்ஆன் வழிகாட்டுகிறது!


“இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம். (அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்). (அல்-குர்ஆன் 39:27-28)


j) நேர்வழியில் செல்பவர்களுக்கு தக்வாவை இறைவன் வழங்குகிறான்!


“மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை – பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான்” (அல்-குர்ஆன் 47:17)


C) இறையச்சமுடையவராக இருப்பதின் பயன்கள்!



a) நிராகரிப்பாளர்களை விட மறுமையில் உண்ணத நிலையில் இருப்பபார்கள்!


“நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்; இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்” (அல்-குர்ஆன் 2:212)


“மேலும், பயபக்தியுடையவர்களான முஃமின்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறந்ததாக இருக்கும்” (அல்-குர்ஆன் 12:57)


b) இறையச்சமுடையவர்களுக்கு திருமறை நேர்வழி காட்டும்!


“இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்” (அல்-குர்ஆன் 2:2)


c) பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் எதிரிகளின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது!


“நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்” (அல்-குர்ஆன் 3:120)


d) பயபக்தியுடைவருக்காகவே சுவனபதி தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது!


“இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது” (அல்-குர்ஆன் 3:133)



e) பயபக்தியுடைவர்களுக்கு இறைவனுடைய மன்னிப்பும், சுவனபதியும் கிடைக்கும்!


“அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது” (அல்-குர்ஆன் 3:136)


f) இறையச்சமுடையவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்!


“நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்” (அல்-குர்ஆன் 9:4, 9:7)


g) இறையச்சமுடையவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்!


“நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 9:36)


h) இறையச்சமுடையவர்களுக்கு சுவனபதியில் அவர்கள் விரும்பியதெல்லாம் கிடைக்கும்!


“என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சுவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். இவ்வாறே பயபக்தியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலியளிக்கிறான்” (அல்-குர்ஆன் 16:31)


i) இறையச்சமுடையவர்களுக்கே நரகத்திலிருந்து மீட்சி கிடைக்கும்!



“ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக – தீவிரமாக – இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம். பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். அதன் பின்னர், தக்வாவுடன் – பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்” (அல்-குர்ஆன் 19:68-72)


j) பயபக்தியுடையவர்களே வெற்றியாளர்கள்!


இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்” (அல்-குர்ஆன் 24:52)


k) பயபக்தியுடைவர்களுக்கு எதிரே சுவர்க்கம் கொண்டுவரப்படும்!


“பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும். வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்” (அல்-குர்ஆன் 26:90-91)


l) இறையச்சமுடையவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு!


“ஆனால், எவர்கள் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். (இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதி – அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாற மாட்டான்” (அல்-குர்ஆன் 39:20)


m) பயபக்தியாளர்கள் கூட்டம் கூட்டமாக சுவர்க்கத்தின் பக்கம் கொண்டுவரப்படுவார்கள்!


“எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: ‘உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்’ (என்று அவர்களிடம் கூறப்படும்)” (அல்-குர்ஆன் 39:73)



n) இறையச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கம்!


“பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?” (அல்-குர்ஆன் 47:15)


o) அல்லாஹ்விடத்தில் கண்ணியமானவர் இறையச்சமுடையவர்களே!


“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 49:13)


P) அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்!


“அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 2:194)


q) இறையச்சமுடையவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் நற்பலன்கள்!


“நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள். அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் – அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான். (அவர்களுக்குக் கூறப்படும்:) ‘நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.’ அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்” (அல்-குர்ஆன் 52:17-20)




நன்றி : சுவனத் தென்றல்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11138
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum