தொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்?
தொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்?
இஸ்லாத்தின் பார்வையில் எந்த ஒரு மொழியும் வேறொரு மொழியை விட உயர்வானதோ அல்லது தாழ்வானதோ இல்லை. அதேபோலத் தான் அரபியும். இஸ்லாத்தில் கடவுளுக்கு உகந்த நேச மொழியோ அல்லது உகக்காத நீச மொழியோ இல்லவே இல்லை என அடித்துக் கூறலாம். கடவுளின் மொழி என்று அரபியைக் கருதுவது அறியாமை ஆகும்.
பின் ஏன் அரபியில் மட்டுமே தொழுகை நடத்தப்படவேண்டும் என்று கேள்வி எழுவது இயல்பு தான். இஸ்லாமிய நம்பிக்கையின்படி, குர்ஆன் என்பது இறைவனின் வார்த்தைகள் ஆகும்.தொழுகையின் போது குர்ஆன் வசனங்கள் மட்டுமே ஓதப்பட வேண்டும். குர்ஆனை அரபி மொழியில் இறைவன் அருளியதால் அதன் மூல சொல்லாடலையும் இடத்திற்குத் தகுந்தப் பொருளாளுமையையும் பேணும் பொருட்டே அது அரபியில் அதன் மூல வடிவத்தில் மட்டுமே ஓதப்படுகிறது. வேறு மொழியில் அதன் பொருளை உணர்ந்து கொள்ளலாமே தவிர இறை வணக்கமான தொழுகையின் போது அவற்றைப் பயன் படுத்த இயலாது. ஏனெனில் மனிதர் எனும் முறையில் அதனை மூலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் சில சொல் மற்றும் பொருள் தவறுகளையும் இழைத்திருக்கலாம், எனவே அப்பிழைகளைத் தவிர்ப்பதும் இதன் நோக்கங்களில் ஒன்று.
இன்னும் விளக்கமாகச் சொன்னால், அரபி நன்கு அறிந்த இயல்பான அரபி மொழியறிஞர் (native Arabic speaker) கூட தான் விளங்கிக் கொண்டது போல அரபியிலேயே இதனைப் பொழிப்புரையாக ஓத இயலாது.
ஓர் எடுத்துக்காட்டின் மூலம் இதனைத் தெளிவாக விளக்கலாம். திருக்குறளுக்கு பரிமேலழகர், முனைவர் மு.வ உள்பட பலர் உரை எழுதி இருக்கிறார்கள். இந்த அறிஞர்கள் வள்ளுவர் சொல்லை விளக்கி விரிவாக எழுதினாலும், உண்மையில் வள்ளுவரின் சொல் என்று மூல நூலான திருக்குறளை மட்டுமே சொல்வோமேயன்றி, குறிப்பிட்ட அறிஞர்களின் இது தொடர்பான ஆக்கங்களைச் சொல்ல மாட்டோம்.
புரியாத மொழியில் ஓதுவதை விட புரிந்த மொழியில் ஓதுவது சிறந்ததல்லவா? என்று சிலருக்குத் தோன்றலாம். இந்தக் கண்ணோட்டம் சரியானது தான். ஆயினும் இதை விட முக்கியமான நோக்கத்திற்காகப் புரியாத மொழியில் எத்தனையோ வார்த்தைகளை நாம் கூறி வருகிறோம். பல்வேறு மொழிகள் பேசக் கூடிய நாட்டால் ஒரே மொழியில் தேசிய கீதம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மொழி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் அதைத் தான் படிக்கின்றனர். நாட்டின் ஒருமைப்பாடு முக்கியம் என்று இதற்குக் காரணம் கூறப்படுகின்றது.
நாட்டின் ஒற்றுமைக்காக, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் என்று காட்டுவதற்காக இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அகில உலகுக்கும் பொதுவான மார்க்கம் இஸ்லாம். அகில உலகும் ஒரே சீரான முறையில் வணங்கும் போது உலக ஒற்றுமை எடுத்துக் காட்டப்படுகின்றது. நாடு, இனம், மொழி ஆகிய அனைத்து வேறுபாடுகளும் மறந்து நாம் அனைவரும் மனிதர்கள் என்று உலக ஒருமைப்பாடு இதன் மூலம் நிலை நிறுத்தப்படுகின்றது.
முத்தாய்ப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் "அரபு மொழி பேசுபவன் வேறு மொழி பேசும் மக்களை விட சிறந்தவன் அல்லன் (நூல்: அஹ்மத் 22391)" என்ற இறுதிப் பேருரைப் பிரகடனத்தை வைப்பது பொருத்தம் என நினைக்கிறோம்.
இறைவன் மிக்க அறிந்தவன்.
(இது தொடர்பான திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்? அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா?என்ற ஐயத்திற்கான விளக்கத்தையும் காண்க.)
நன்றி : சத்திய மார்க்கம்
» குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா?
» பெருநாள் தொழுகையின் சட்டங்கள்
» கஷ்மீர்:ஆர்ப்பாட்டங்களின் போது கல்லெறிந்தவர்களுக்கு பெருநாள் பரிசாக பொது மன்னிப்பு
» குடியுரிமை உறுதிமொழியின் போது முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிய கனடா தடை