தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமிய பெண்களின் பங்கு

Go down

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமிய பெண்களின் பங்கு   Empty இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமிய பெண்களின் பங்கு

Post by முஸ்லிம் Thu May 12, 2011 5:24 pm

freedom fight

இந்திய சுதந்திரம் என்றாலே மகாத்மா காந்தி தான் நம் அனைவரின் மனதில் தோன்றுவார். இதற்கு அவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் மற்றும் யுக்திகள் மறுப்பதற்கும், மறைப்பதற்கும் இல்லையென்றாலும். மறுபக்கம் ஒரு தனி மனிதன் மட்டும் தான் போராடி சுதந்திரம் பெற்று தந்தார் என்று நினைப்பது, நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கசாப்பு கடைக்கு காந்தியின் பெயர் சூட்டுவதற்கு சமம் (அப்படிப்பட்ட அறியாமை).


ஏனென்றால், இந்தியாவுக்கு சுதந்திரம் என்பது பலரின் கூட்டு ஒத்துலைப்பினாலும், விடா முயற்சியாலும், பலரின் உயிர் தியாகத்தினாலும் கிடைத்தது என்பதனை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அப்போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட பல தியாகிகள், மாவீரர்கள் என்று பலரும் போராடி, உயிர் நீத்த பின்னரே, இன்றைய சுதந்திர இந்தியா அயல் நாட்டவரின் அடிமை தளத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.



இப்படிப்பட்ட ஒரு மாபெரும் சுதந்திரம், ஒரு தனி மனிதானலோ அல்லது ஒரு தனி மதத்தவராலோ கிடைத்தது என்று கூறினால், அது பச்சப் பொய்யாகவே தான் இருக்க முடியும். வரலாற்றை சற்று புரட்டி பார்த்தல், இந்திய சுதந்திரத்திற்கு அடித்தளமும், பொருள் வசதியும் அளித்தவர்களில் இஸ்லாமியர்களே முதல் இடம் வகிப்பார்கள். இதில் வரலாற்றில் வெளிவந்தது சில பெயர்கள், மறைக்கப்பட்டதோ பல பெயர்கள்.


பின்னர், வரலாற்றையும் சினிமா கதைகளாக கயவர்கள் இன்றும் மாற்றிக்கொண்டு வருகின்றனர். இந்த சுதந்திர போராட்டத்தில் பல மாற்று மத சகோதரிகளும் தங்கள் இன்னுயிரை நீத்து அம்மதத்தைச் சேர்ந்த பெண்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளனர். அவர்களின் நினைவுகளும், அடையாளங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன. மாதம் தோறும், வருடம் தோறும் அவர்களை போற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.


ஆனால், இவ்வீரமிகு போராட்டத்தில் முஸ்லிம் பெண்களும் தங்கள் வீரத்தை, உயிர் தியாகத்தை, அறிவு பலத்தை  பயன்படுத்தினார்கள் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? மிஞ்சிபோனால், முஸ்லிம் சகோதரிகள் அனைவரும் கேள்விப்பட்டதும், படித்ததும், இஸ்லாத்தின் வரலாற்றில் – போரில் நோய்வாய் பட்டவர்களுக்கும், தாக்கப்பட்டவர்களுக்கும் சஹாபி பெண்மணிகள் உதவியது மட்டும் தான் இருக்க முடியும்.


அதைக் கேட்டு ஏங்கியவர்களும், தவித்தவர்களும், உணர்ச்சி வசப்பட்டவர்களும் நம்மில் அதிகம் இருக்கின்றனர். நம் சொந்த இந்திய திருநாட்டில் கிடைக்கப் பெற்ற சுதந்திரத்திற்காக உழைத்து, உயிர் நீத்த பல முஸ்லிம்களின் பெயர்களும், சாதனைகளும், இதுவரை பரவலாக வெளிவரவும் இல்லை, பதியப்படவுமில்லை. வரலாற்று புத்தகத்தில் தங்களுக்கென்று ஒரு இடம் கிடைக்காத துரதிஷ்டவாதிகளாக இன்றைக்கும் அவர்கள் இருக்கின்றனர்.


இந்த சுதந்திர இந்தியவிற்காக பாடுபட்ட பலரின் பெயர்களை கேட்டு இருப்போம், பெருமை பட்டு இருப்போம், அதனை மீண்டும் உமிழ்வதல்ல இக்கட்டுரையின் நோக்கம். பரவலாக அறியப்படாத, வரலாற்றில் மறைக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் சுந்தந்திர தாகத்தையும், அவர்கள் உருவாக்கிய தாக்கத்தையும் தான் இங்கு நாம் காணப் போகிறோம்.


எனக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, அது சகோதரிகளுக்காக மட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட அருமையான நிகழ்ச்சி. அதில் அந்த நிகழ்ச்சியை நடத்தியவர், ஒரு அருமையான கேள்வியை எங்கள் முன்வைத்தார்.


அக்கேள்வியானது,


“இந்தியாவின் சுதந்திரத்தில் பங்கெடுத்த முஸ்லிம்  பெண்களின் பெயர்களில் யாரவது ஒருவரின் பெயர் தெரியுமா? என்று, அந்த அறையில் கிட்டத்தட்ட என்னுடுடன் சேர்த்து 50-க்கு மேற்ப்பட்ட சகோதரிகள் இருந்தனர், அறை முழுவதும் நிசப்தம், ஒருவர் கூட பதில் உரைக்கவில்லை. இந்தியாவின் சுதந்திரத்தில், பங்கெடுத்த முஸ்லிம் பெண்களா! என்று எங்களுக்குள் ஒரு ஆச்சரியகுறியை போட்டுக்கொண்டு விடை தெரியாமல் கூனி, குறுகி இருக்கையில் அமர்ந்து இருந்தோம், ஆவலோடு அவரின் பதிலுக்காக. அந்த ஆவல் தான் இன்று கட்டுரையாக உருவெடுத்துள்ளது.



இந்தியா திருநாட்டில் முஸ்லிமாக பிறந்து பல வருடங்கள் வாழ்ந்து, நமக்கு சுதந்திரம் கிடைத்தது என்று மட்டும் தான் தெரியும், அதற்க்கு பின் உள்ள பல புதைக்கப்பட்ட உண்மைகளை இது வரை நம்மில் யாராவது அறிய முயற்சி எடுத்து இருப்போமா, இல்லை வரலாற்றை புரட்டி தான் பார்த்து இருப்போமா?


எந்த ஒரு சமூகத்திற்கு தன் சொந்த வரலாறு தெரிவில்லையோ, அந்த சமூகம் மிக எளிதாக அழிக்கப்படும் என்று மால்கம்-X கூறியது தான் நினைவிற்கு வருகிறது. நாம் நம் இந்திய வரலாற்றை அறிய முயற்ச்சிக்காதது, இன்று முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற மாயை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது. தன்னை தீண்ட வந்தால் “வாயில்லாத ஐந்தறிவு ஜந்து” கூட தன்னை காத்துக் கொள்ள தன்னால் இயன்ற வரை முயற்சி செய்யும்.


ஆனால் முஸ்லிம் மக்களோ யாரை யார் தீவிரவாதி, பயங்கரவாதி என்று சொன்னால் நமக்கென்ன, நாமும்  நம் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் என்ற சுய நலத்தோடு பிளவுபட்டு பல இயக்கங்களாக பிரிந்துக் கிடப்பதும், தாக்கப்பட்டு இருப்பதும், பாதிக்கப்பட்டவர்களும் நம் குடும்பத்தாரை சேர்ந்தவர் இல்லையே என்ற ஒரு அசட்டு சந்தோசம். எங்கே எதிர்த்து போராடினால் அல்லது பதில் உரைத்தாலோ நம் உயிரை எடுத்து விடுவார்களோ என்ற அச்சம்.


நம் சமூகத்தை ஆழ்வதற்கு, நாம் நம் வரலாற்றை அறியாததே காரணம். ஒரு அற்ப காரணத்திற்காக நம் உயிர் போவதை விட இந்த உலகில் பிறந்து, எதையாவது சாதிக்க முடியவில்லை என்றாலும், நம் உயிர் நம்மை படைத்த இறைவனுக்காகவும், அவனின் சமுதாயத்துக்காகவும் போனால் மனிதனில் சிறந்த மானுடனாய் இவ்வுலகிலும், மறுவுலகிலும் போற்றப்படுவோம் என்பது அவர்களுக்கு தெரியத்தான் செய்கின்றது.


இப்படிப்பட்ட ஒரு தருவாயில், இந்த திருநாட்டில் உள்ள மக்களும், சமுதாயமும் சுதந்திரமாக மேலை நாட்டவரின் அடிமை தளத்தில் இருந்து மீட்டெடுக்க போரடிய வீரமிக்க முஸ்லிம் சமூகப் பெண்களின் வரலாற்றை ஒரு குறுகிய தொகுப்பாக இங்கு காணப் போகிறோம்.


பேகம் ஹஜ்ரத் மஹல்-இவர் ஒத் மாநிலத்தின் ராணி, நவாப் வாசித் அலி ஷாவின் மனைவியுமாவர். ஒத் என்பது இப்போது உள்ள உத்திர பிரதேச மாநிலம் ஆகும். இந்தியா பிரிடிஷ் காரர்களால் அடிமை பட்டுக் கிடந்த காலத்தில்,  அவர்களின் அடிமை தளத்தில் முழு மாநிலமும் உறைந்த நிலையில் இருந்த பொழுது துணிந்து எழுந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர்.



பேகம் என்பது இவரது பெயர், “ஹஜ்ரத் மஹல்” என்பது மற்றவர்களால் போற்றி வழங்கப்பட்ட பெயர். அம்மாநிலத்தை ஆண்டு கொண்டு ராஜாவாகிய அவரது கணவரை பிரிடிஷ்காரர்கள் கொல்கத்தாவுக்கு நாடு கடத்திய பிறகு, அம்மாநிலத்தையே தன் கையில் எடுத்து ஆண்டவர். அம்மாநிலத்தை காக்க தன்னுடைய மகன் பிரிஜிஸ் காதரை மன்னனாக்கிவிட்டு, நாட்டை காப்பதற்காக அவர் சுதந்திர போராட்டத்தில் களம் இறங்கினார்.


இந்தியாவின் முதலாம் உலக போரின் போது முக்கிய பெறும் தலைவர்களுடன் இணைந்து பல சாதனைகளை செய்து உள்ளார். ஒரு சமயம் பிரிட்டிஷ் தலைவர்களில் ஒருவரான சர் ஹென்றி லாரன்ஸ் என்பவரையும், அவரை சுற்றி இருந்த மற்றும் சில அதிகாரிகளையும் வளைத்து பிடித்து ஒரு தனி பெண்மணியாக எதிர் கொண்டு, அவர்களுடன் நடந்த போராட்டத்தில் பேகம் ஹஜ்ரத் மஹல் சர் ஹென்றி லாரன்ஷை தன் கையால் சுட்டு வீழ்த்தினார்.


பின்னர் பிரிட்டிஷ்காரர்களின் சார்பில் ஜெனரல் ஹவ்லாக் என்பவரின் கண்காணிப்பில் மீண்டும் அம்மாநிலத்தை கைப்பற்ற முயன்று பெரும் தோல்வியை தழுவினார்கள். இறுதியில் சர் கேம்பால் தலைமையில் லக்னவை மீண்டும் பிரிட்ஷ்காரர்களே கைபற்றினர். இந்த சூழ்நிலையில் பேகம் ஹஜ்ரத் மஹல் பிரிட்ஷ்காரர்களால் பின் வாங்கிக் கொள்ளும் படி வற்புருத்தப்பட்டார். ஆனால் வீரப் பெண்மனியான அவரோ இவர்கள் கொடுக்கும் “பொது மன்னிப்பில்” வெளி வந்து மீண்டும் இவர்களின் அடிமைத்தனத்திற்கு ஆளாவதை விட இங்கு இருந்து இடம் பெயர்வது மேல், என்று முடிவு எடுத்த துணிச்சல் மிக்க பெண்மணி.


அஜிஜன்-இவரை என்னவென்று புகழ்வது, தமிழ் அகராதியில் இத்துணை தைரியமிக்க மகத்தான பெண்ணுக்கு என்ன வார்த்தை உள்ளது என்றால் கிடைக்குமா என்று தெரியவில்லை தைரியத்தை தன் இரத்தமாக கொண்டு வாழ்ந்தவர். லக்னோவில் பிறந்த இவர் 1832-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் நானா ஸாஹிப் அவர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக அனைத்து மக்களும் ஒன்றினைந்து போரடா வேண்டி, இந்து முஸ்லிம் மக்களை ஒற்றுமைக்காக அழைத்த போது  நாட்டிற்காக இவர் வீட்டை விட்டு வெளியே வந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்.


தன் ஒருத்தியின் வாழ்க்கை பல பேருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தவர். பெண்கள் அனைவரையும் போருக்கு தயார்படுத்தியவர், பெண்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்த கற்றுக் கொடுத்தவர். பிரிட்ஷ்க்காரர்களின் ரகசியங்களை ஒன்று திரட்டி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அனுப்புவராக பணி புரிந்தவர். இறுதியாக பிரிட்டிஷ் அரசாங்கம் இவர்களை சிறை பிடித்த போது இவர்களுக்கு எதிராக செயல்பட்டதை துணிச்சலோடு ஒப்புக்கொண்டு, பிரிட்டிஷாரின் மன்னிப்பை ஏற்க மறுத்து, உயிர் தியாகம் செய்வதே மேல் என்று முழக்கமிட்ட வீர மங்கை.


பி அம்மா (அபாடி பேகம்)-இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் கைபற்றிய போது, மிக துணிந்து போராடிய பெண்மணிகளில் இவரும் ஒருவர். இவருடைய மகன் முகமது அலி 1921-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் பொது மன்னிப்பில் சிறையை விட்டு வெளியே வருவதாக கேள்விபட்ட பி அம்மா உரைத்த பதில், “முஹம்மது அலி வெறும் சாதாரண மனிதன் அல்ல, அவன் இஸ்லாத்தின் மகன், அவனால் ஒரு போதும் மற்றவர்கள் கொடுக்கும் மன்னிப்பு பிச்சையில் வருவதை சிந்திக்க முடியாது. ஒரு வேலை அவன் அதை விரும்பினாலும் இந்த வயது முதிர்ந்த தாயின் கைகள் பலம் இழந்து கிடந்தாலும் அவனை எதிர் கொள்ள இது பலம் பெறும்” என்று உரைத்தவர்.


அவர் அயல் நாட்டின் பிடியில் இருந்து தன் தாய்நாட்டை காப்பற்ற அயராது உழைத்தவர். சுதந்திரத்திற்காக போராடியவர்களுடன் மிக துணிந்து செயல்ப்பட்டவர். அவர்கள் அயல் நாட்டின் ஆடைகளை அணிவதை தவிர்த்து மற்றவர்களையும் காதி துணியை அணிய வைக்க முயற்சித்தவர். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பெரிதும் போராடியவர், இத்துணை போராட்டத்திலும் தன்னுடைய ஈமானை ஒருபோதும் தளர விடாதவர்.



ஜுபைதா தாவூதி-இவர்கள் மௌலான ஷாபி தாவூதி அவர்களின் மனைவி, பீகாரை சேர்ந்தவர். பிரிட்டிஷ்க்கு எதிராக “துணிச்சலை” தங்கள்  ஆடையாக உடுத்தி செயல்பட்டவர். மேலை நாட்டவர்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை ஒன்று திரட்டி பிரிட்டிஷ் காரர்களுக்கு முன் தன் எதிரித்துவத்தை காட்ட தீ வைத்து கொளுத்தியவர். பிரிடிஷ்க்காரர்களுக்கு எதிராக நடந்த அனைத்து கூட்டங்களிலும் பங்கெடுத்து, மற்ற பெண்ககளுக்கும்  துணிச்சலை வளர்க்க தன்னை  முன் மாதிரியாக செயல்படுத்திக் கொண்டவர்.


சதாத் பனோ கிச்லேவ்-இவர் பஞ்சாபை சேர்ந்தவர். மற்றவர்களை ஊக்குவிப்பதற்காக சுதந்திர போராட்டத்திற்காக பல கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதியவர். சாதாரண பெண்மணியாக இருக்கும் நாம் நம் கணவர் சத்தியத்தின் பாதையில் போராடியோ அல்லது இறை நேர்மைக்காகவோ சிறையில் அடைக்கப்பட்டார் என்று கேள்வி பட்டால் அழுது, ஆர்ப்பாட்டம் செய்து நாம் வருந்துவதோடு அல்லாமல் நம் குழந்தை, பெற்றோர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி, தனிமையில் வீழச் செய்வோம்.


1920-ஆம் ஆண்டு சதாத் பனோ கிச்லேவ் தன் கணவர் டாக்டர்.கிச்லேவ் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்ட  அவர் தெரிவித்தது என்ன தெரியுமா? “அவர் தன் நாட்டுக்காக கைது செய்யப்பட்டதை எண்ணி நான் மிகவும் பெருமை படுகிறேன், அவர் ஒருவரின் வாழ்க்கையை கொடுத்து ஆயிரம் பேரின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளார்” என்று ஒரு துளிக் கூட வருத்தம் கொள்ளாமல் பெருமிதம் கொண்டார். அந்த கண்ணியமிக்க பெண்மணி. இவர் அரசாங்கத்தின் அத்து மீறல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக குரல் கொடுத்தவர், டாக்டர். கிச்லேவ்-ஆல் நிறுவப்பட்ட “ஷுவராஜ் ஆசிரமத்தை” தன் கணவனுக்கு பின் வழி நடத்தி சென்ற பெருமையை கொண்டவர்.


ஜுலைகா பேகம்-இவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் மனைவியாவார், மிகவும் தைரியமிக்க பெண்மணி. சுதந்திர போராட்டத்தில் காந்தியாலும், நேருவாலும் மிகவும் மதிக்கத்தக்க, உன்னதமான மனிதன் அபுல் கலாம் ஆசாத்தை 1942-ல் கைது செய்யப்பட்ட போது,  ஜுலைகா காந்திக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.



அதில் “என் கணவர் ஒரு வருடம் சிறைத் தண்டனை மட்டுமே  பெற்றுள்ளார். அவர் தன் நாட்டின் மீது வைத்து இருந்த பற்றுக்கு, அவருடைய பக்குவப்பட்ட மனதிற்கும்  நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்த தண்டனையே, ஆனால் நியாயம் இன்னும் கிடைக்கவில்லை என்றும், இன்று முதல் இந்த வங்காளத்தின் முழு கிலாபாத் அமைப்பையும் நானே பொறுப்பேற்று நடத்துவேன்”  என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தன் கணவனின் பொறுப்பை மிக எளிதாக தனதாக்கி கொண்டு தன்னுடைய பங்கையும் சுதந்திரத்திற்காக முழுமையாய் வெளிக்கொணர்ந்தவர்.


ரஜியா காத்தூன்-பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து நின்ற வங்க தேசத்தின் முதல் பெண்மணி என்ற சிறப்பை பெற்றவர், இதனால் அவர்களை கைது செய்து களப்பணி என்ற இடத்தில அடைத்து வைத்தனர். அவருடைய கடைசி மூச்சை அவர் அங்குதான் நீத்தார்.


மேலே குறிப்பட்டவர்களை தவிர நிசதுன்னிஷா பேகம், அக்பரி பேகம், அஷ்கரி பேகம், ஹபீபா, ரஹீமி, அமினா குரைஷி, பாத்திமா குரைஷி, அமினா தயப்ஜி, பேகம் சகினா லுக்மணி, சாபியா சாத், பேகம் குல்சூம் சயானி, அஸ்மத் அரா காத்துன், சுகரா காத்துன், பீபி அமதுள் இஸ்லாம், பாத்திமா இஸ்மாயில், சுல்தானா ஹயாத் அன்சாரி, ஹழ்ரா பேகம் மற்றும் ஜுஹரா அன்சாரி இவர்களில் பல பேர் சிறையில் இருந்தும் பல சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். இவர்களின் மகத்தான போராட்டத்தாலும், வீரத்தாலும் இன்று நம் சுதந்திர இந்தியாவை காண முடிகிறது.


இன்று இப்போதைய சூழ்நிலையில் நமது பெண் மக்களோ கணவன் வயது தளர்ந்து இந்த இம்மையை விட்டு போகும் வரை அவரது துணை எதிர்பார்த்தே வாழ்கின்றனர். இன்று பெரும்பாலான முஸ்லிம் குடும்பங்கள் எந்த ஆண் துணையுமின்றியே வாழ்கின்ற சூழ்நிலையிலேயே உள்ளனர். எண்ணி பாருங்கள் பெண்களே, இன்று குஜராத்திலும், காஷ்மீரிலும், இஸ்ரேலிலும் நடக்கும் வன்முறை நாளை நம் வீட்டை எட்டி பார்க்காது என்பதற்கு என்ன ஆதாரம், எப்படி நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பற்ற போகிறோம்.


இப்படி பட்ட இந்த சூழலில் நாம் எத்தனை தைரியத்துடன் இந்த உலகத்தை ஆட்கொண்டு இருக்கும் மனித உருவில் இருக்கும் சில மனித ஜந்துக்களை (சைத்தான்களை)  கையாள கற்றுக்கொள்ள வேண்டும். நம் வரலாற்றில் சாதித்து இன்றும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள சாஹாபக்களுக்கு உதவியாக இருந்த எத்தனையோ சாஹாபி பெண்மணிகள் உள்ளனர். அவரில் ஒருவரான ஹபிப் (ரலி) அவர்களின் மனைவியின் வரலாறு நமக்கெல்லாம் மிக சிறந்த எடுத்துக்காட்டு .



மேலே குறிப்பிட்ட அனைத்து செய்திகளும், பெண்களாகிய நமக்கு மிக பெரிய எடுத்துக்காட்டும், முன்னுதாரனமுமாகும். நாம் வாழும் நாடும், இந்த உலகும் அத்தனை எளிதல்ல. பெண்களாகிய நம்முடைய சிந்தனையும், சில அடக்குமுறைவாதிகளின் சிந்தனையும், பெண்கள் சமைப்பதற்கும், வீட்டு வேலை செய்வதற்கும் தான் தேவையானவர்கள் என்று உள்ளது. ஆனால் நபி(ஸல்) அவர்களும் அவரை பின்பற்றிய சஹாபாக்களும் பெண்களின் நல்ல ஆலோசனைகளை கேட்டும் அவர்களின் உரிமைக்கு இடம் கொடுத்துமே வாழ்ந்து உள்ளனர்.


பெண்கள் என்றால் “பூ”-வுக்கு இணையானவர்கள் என்பார்கள் நம் மூதாதையர்கள், ஆனால் அந்த  பூ புயலாக மாறினால் நாடும் வீடும் தாங்காது, தேவைபட்டால் இந்த பூ போன்ற பெண்கள் “அடுப்பங்கரைக்கும் மட்டும் கத்தியை எடுப்பவர்கள் அல்ல மாறாக அநீதியை களையெடுக்கவும் கத்தி எடுப்பார்கள்” என்பதை மேற்க்கண்ட அனைத்து பெண்களும் நிருபித்து உள்ளனர்.


இந்த நாட்டிலும், சமுதாய வளர்ச்சியிலும் பெண்களுக்கும் மிக பெரும் பங்கு உண்டு என்பதை உணர்ந்து கோழைத்தனத்தை விட்டு இனி வரும் சமுதாயத்திற்கு நாம் ஒரு எடுத்துக்காட்டாகவும், வழிக்கோலாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல் பட வேண்டும். பெண்களின் அன்றைய தியாகத்தை நினைவூட்டும் இக்கட்டுரை, நம் இன்றைய இயந்திர வாழ்க்கையை மாற்றும் என்ற நம்பிக்கையுடன்! இன்ஷா அல்லாஹ்…..


மின்-தீன்

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமிய பெண்களின் பங்கு   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11138
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum