இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல!
Page 1 of 1
இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல!
*குறிப்பு*-
இக்கட்டுரை கீற்று இணையதளத்தில் சகோதர மத்ததைச் சேர்ந்த சகோ.ஆத்மார்த்தி என்பவரால்
எழுதப் பட்டது. முஸ்லீமகளாகிய நாம் அதனை அறியும் பொருட்டு அணுப்பப் படுகிறது.
*
*
*இது ஒரு தழிழரின் பார்வை...*
* இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல!*
இந்தக் கட்டுரையின் நோக்கம் நேரடியாகவே சொல்வதற்கு முனைவது தான்.
நீங்கள் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆம். குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்பது
தீர்வாகாது என்பதால் இரண்டு நிலங்களைப் பிரிக்கும் ஒற்றைச் சுவரில் உடைப்பொன்றை
ஏற்படுத்தும் கலகக்காரனாய்ச் செயல்படுவதே இக்கட்டுரையாளனின் நோக்கம்.
தென் இந்திய சினிமாக்களில் அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாக்களில் காலம் காலமாக
அல்ல, சரியாக சொல்வதானால் 1995 ஆண்டுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் பல்வேறு
படைப்பாளிகளால் தவறாகவும் மிகையாகவும் புண்படும் வண்ணமும் கேலிப்
பொருட்களாகவும் எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரிக்கப்படுவது சென்ற வாரம்
வெளியான வானம் (தெலுங்கு வேதம் படத்தின் மீள்வுருவாக்கம்) வரை தொடர்வது பலரும்
எழுதிவரும் தொடர்கதை. இதற்கொரு முற்றுப் புள்ளி வேண்டும் என யாருமே எண்ணாமல்
இருப்பதற்கும், ஏன் திரைத்துறையிலேயே இயங்கக் கூடிய இஸ்லாமியர்களும்,
மதப்பாரபட்சமற்றவர்களும் ஏன் முயல்வதே இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள
வேண்டும்.
இந்திய நிலத்தில் இஸ்லாமியர்களும் மற்ற சமய சமூகத்தை சேர்ந்தவர்களும்
மிகச்சரியான புரிதல்களுடன் வாழ்ந்து வந்தது பெருவரலாறு. ஆனால் காந்தியைக்
கொன்றழித்த இந்திய தேசத்தின் புதல்வர்கள் ஆளவந்தார்களாக மாறிய வரையிலும் அந்தப்
பெருவரலாற்றின் அமைதி தொடர்ந்து தான் வந்தது. பொதுச்சூழலில் என்றைக்கு
குண்டுவெடிப்புகளும் உலகளாவிய நிகழ்வுகளில் பல செயல்களும் செய்திகளும்
முஸ்லிம்களை சம்மந்தப்படுத்தி வரத் தொடங்கினவோ அன்றைக்கு பிடித்தது சனி.
நான் முஸ்லிம்களில் குற்றவாளிகள் இல்லவே இல்லை என கூறவரவில்லை. முஸ்லிம்கள்
என்றாலே குற்றவாளிகள், குண்டுவைப்பவர்கள் என்று கற்பிதம் செய்ய முனையும்
ஆதிக்கசக்திகளை துதி பாடி எடுக்கப்படும் திரைப்படங்களைச் சாடுவதே என்
நோக்கமாகிறது. எந்த இனத்தில் அல்லது எந்த மதத்தில் குற்றவாளிகள் இல்லாமல்
இருக்கிறார்கள்..? எந்த இனத்தை சேர்ந்த அல்லது மதத்தைச் சேர்ந்தவர்கள் முழுக்க
நல்லவர்கள் என மார் தட்டிக்கொள்ள முடியுமா..? அங்கனமே முஸ்லிம்களையும்
அவர்களில் அங்குமிங்கும் இருக்கும் குற்றவாளிகளை குற்றச்செயல் புரிந்தவர்களை
நாம் பார்க்க வேண்டும் என்பது தானே நியாயமாக இருக்க முடியும்..?
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டியோ இல்லையோ, உலகுக்கே இளைத்தவாயர்கள்
முசல்மான்கள்.
அவர்கள் செய்யக்கூடிய கொடுஞ்செயல்கள் என்னென்ன..?
1.அரபி/உருது பேசுகிறார்கள்.
2.தரையில் வீழ்ந்து தொழுகை புரிகிறார்கள்.
3.கூட்டம் கூட்டமாக வாழ்க்கை நடத்துகிறார்கள்.
4.புத்தகங்கள் அச்சிடுகிறார்கள்.. படிக்கிறார்கள் பேசுகிறார்கள்.
5.இன்னமும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என நம்பிக்கொண்டு இங்கேயே
இருக்கிறார்கள்.
குழந்தைத் தனமாய் இருக்கிறது. இரண்டு தரப்பாரை எப்பொழுதும் பதற்றத்திலேயே
வைத்திருப்பதில் பதவிக்குளிர் காய்கிற அரசியல்வாதிகளும், மதவாதிகளும், இந்த
இரண்டு தரப்பாரைச் சார்ந்து பிழைப்பு நடத்தும் அடிவருடிகளும் தவிர பொது மக்கள்
இன்னமும் எந்த மதமாயினும் சரி, இணக்கமாக, அந்நியோன்னியமாகத் தான்
வாழ்கின்றார்கள்..
இனி சினிமாவுக்கு வருவோம். அடிதடிப் படமாயினும் அரசியல் படமாயினும் சரி...
ஊறுகாய் முஸ்லிம்கள் தான். முஸ்லிம்கள் குண்டு வைப்பவர்களாகவும், உருது
பேசுகிறவர்களாகவும், தொழுகை புரிபவர்களாகவும், வெளிநாட்டுத் தீவிரவாதிகளாகவும்,
குண்டடிபட்டு அல்லது குத்துப் பட்டு சாகிறவர்களாகவும் தொடர்ந்து
பிம்பமாக்கப்படுகிறார்கள். எந்த வித உலகளாவியப் பார்வையோ அல்லது புரிதலோ அன்றி
எடுத்தேன் கவிழ்த்தேன் என எடுக்கப்படுகின்ற படங்களில் தொடர்ந்து சிறுபான்மை
முஸ்லிம்கள் கொடுமைக்குட்படுத்தப்படுகின்றனர்.
சமீபத்திய வானம்... இதில் ப்ரகாஷ்ராஜ் நல்ல முஸ்லிம். அவர் தம்பி தீவிரவாதி.
குண்டு வைப்பவன்.
ரஜினிகாந்தின் சிவாஜியில் ஹவாலா செய்பவர் ஒரு பாய். (சூப்பரு). உன்னைப் போல்
ஒருவனில் கமல் செய்தது பெரும் துரோகம். அவரது குருதிப்புனல் படத்தில் அர்ஜூன்
முஸ்லிம். கமல் இந்து. ஏன் இந்த நாயகர்கள் முஸ்லிம் வேஷமே ஏற்கக்கூடாதா..?
பெரும்பான்மை மதத்தைத்தான் சார்ந்தவனாய் இருக்க வேண்டும் நாயகன் என்று
எழுதப்படாத விதியே இருக்கிற கோடம்பாக்கத்தில் அதை மீற கமலால் கூட முடியாது.
சேரனின் பொக்கிஷம் வித்தியாசமாய்த் தொடங்கியதே எனப் பார்த்தால்... அய்யய்யோ
பத்மப்ரியாவின் அப்பா(முஸ்லிம்கள்)தான் படத்தின் வில்லன். வாக்கு கொடுத்து அதை
மீறுகிறவர். ஏன் இந்த வெறிப்பார்வை..? சேரன் அதே படத்தை கதையை மாற்றி
யோசிப்பாரா..? அல்லது எடுப்பாரா..? பத்மப்ரியா ஒரு ஹிந்து சேரன் ஒரு முஸ்லிம்
என எடுத்தால்... எடுத்தால் என்று தான் சொல்ல முடியும்.. எடுக்க மாட்டார்கள்.
சரி போகட்டும் என்றால் நம்பள்கி நிம்பள்கி என்று கசாப்பு கடைக்காரர்களாகவும்
கறி வெட்டுகிறவர்களாகவும் தானே அதற்கு முன்பு வரை சித்தரிக்கப்பட்டார்கள்..?
சில விதிவிலக்குகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால் அவை மனக்காயங்கள்
மொத்தத்தையும் மறுதலிப்பதற்கோ மறுப்பதற்கோ மறப்பதற்கோ போதாது என்பதே உண்மை.
இஸ்லாமியர்கள் பற்றி எடுத்துச் சொல்வதற்கு எத்தனை விஷயங்கள் இருக்கின்றன..? ஒரு
முழுமையான சினிமா, முழுக்க இஸ்லாமிய குடும்பமொன்றின், இஸ்லாமிய கிராமமொன்றின்,
இஸ்லாமிய வாழ்க்கைமுறை ஒன்றைப் பதிவு செய்திருக்கிறதா இது வரை தமிழ்
சினிமாவில்..? அப்படி ஒரு படம் எடுத்தால் ஓடாதா..? அல்லது இஸ்லாமியர்கள்
வரலாற்றில் கதைகளே இல்லையா? இந்த மண்ணில் காலம் காலமாய் இஸ்லாமியர்கள் என்றாலே
கறிவெட்டுபவன், தமிழை தப்பாக பேசுபவன் அல்லது குண்டு வைப்பவன் தானா..?
கட்டிடக்கலையில் இருந்து சாஃப்ட்வேர் துறை வரை தையல் கலையில் இருந்து
மருத்துவர் வரை விஞ்ஞானிகளில் இருந்து மாலுமிகள் வரை இஸ்லாமியர்கள்
சாதிக்கவில்லையா..? அல்லது சாதிப்பதை வெளிச்சொல்ல தமிழ்சினிமா தயாராக
இல்லையா..? இது தான் இப்பொழுது நம் முன் நிற்கும் கேள்வி.
எந்த ஒரு படத்திலும், ஆகா.. ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி இஸ்லாமியர் என கதை
சொல்கிறார்களே, பரவாயில்லையே என நினைத்தால் (உதாரணம்:போக்கிரி) உடனே வந்து
இறங்குவார் அலிபாய். சர்வதேச குண்டுவைக்கும் டெக்னாலஜிஸ்ட். என்ன கொடுமை இது..?
இவர்கள் எல்லோருமே கதை எழுத மன்னிக்கவும் கதை பண்ண உட்காரும் பொழுதே ஒரு
எதிர்மறைப்பாத்திரம் முஸ்லிமாக வந்தாக வேண்டும் என்ற முன் முடிவில் அதை பேலன்ஸ்
செய்வதற்காகவே இன்னொரு கதாபாத்திரம் முஸ்லிம்.. அது எதற்கு..? மத ஒற்றுமை பேச,
தியாகம் செய்ய.. ஏன் தனியாக ஒரு நல்ல முஸ்லிம் கதாபாத்திரத்தை சிந்திக்கவே
முடியாத ஊனமுற்றவர்களாகவே இயங்குகிறீர்கள் இயக்குநர்களே...?
சரி. பொருளாதாரத்தில் கல்வியில் இன்னும் வாழ்நிலைகளில் முன்னேறி இருக்கிற,
இந்தியத்திருநாட்டில் எல்லா ஊர்களிலும் பாரபட்சமின்றி பாகுபாடின்றி இடங்களையும்
சொத்துக்களையும் வாங்கி இருக்கிற, வாங்குகிற, வாங்கப் போகிற மேல்நிலை
முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே சித்தரிக்கிறீர்களே.. அதே நேரம் இன்னமும்
கடைநிலையில் அடுத்த வேளை உணவுக்கு கஷ்டப்படுகிற, வாழ்வாதாரத் தேவைக்கு கூட கை
ஏந்தும் நிலையில் கல்வி அறிவும் பெறாமல், கூலிகளாகவும் ஏழைகளாகவும் இந்த
நாட்டில் பரிதவிக்கிற ஏழை முஸ்லிம்களின் கதையை படமாக்க அல்லது எண்ணிப் பார்க்க
கூட நேரமில்லையா தோழர்களே.. அல்லது அப்படி ஏழைகளாக எந்த ஒரு முஸ்லிமும் இல்லை
என உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதா....?
நமது வீதிகளில் நமது வீடுகளுக்கு இடப்புறமும் வலப்புறமும் வசித்துக் கொண்டு,
நம் பிள்ளைகள் படிக்கிற பள்ளிகளில் தம் பிள்ளைகளைப் படைக்க வைத்து, நாம் பணம்
சேமிக்கும் வங்கிகளில் தம் பணத்தையும் சேமித்துக் கொண்டு, நம்மிடம் தம் பொருளை
விற்று, நம் பொருளை தமக்கென வாங்கி, குருதி கொடுத்து குருதி பெற்று எல்லா
விதங்களிலும் சிறுபான்மையினராய் எல்லா நேரங்களிலும் அடுத்து என்ன நிகழுமோ என்ற
பதற்றத்துடனே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இஸ்லாமியர் இந்த 'மதச்சார்பற்ற'
காந்தி தேசத்தில் செய்யும் பிழைதான் என்ன..? இந்த நிலத்திலேயே தொடர்ந்து
வாழ்ந்துவருவதைத் தவிரவும்.
சினிமா கட்டாயம் தலையாய கலை என நம்புகிறேன். பத்து படங்கள் போதும் தேசம்
அமைதியுற என நிச்சயமாக அடித்துச் சொல்ல விழைகிறேன். அதனால் உங்கள்
முன்வைக்கிறேன். என்ன செய்யக் கூடாது என்பதுவும் என்ன செய்ய வேண்டும்
என்பதுவும்....
உங்களுக்குத் தெரியாதா இயக்குநர்களே..?
*நன்றி*
*கீற்று
Similar topics
» இஸ்லாமியர்கள் - அர்ப்பணித்தவர்களை மறக்க முடியுமா?
» தவறு செய்யாதவன் மனிதனே அல்ல !
» தாலிபான் அமெரிக்காவின் எதிரி அல்ல: ஜோ பைடன்
» ஹஸாரேக்கு ஊழல் அல்ல, காங்கிரஸ்தான் பிரச்சனை – திக் விஜய்சிங்
» தீர்ப்பு கூறுவது பெரும்பான்மையினரின் விருப்பத்தின் அடிப்படையில் அல்ல – நீதிபதி கபாடியா
» தவறு செய்யாதவன் மனிதனே அல்ல !
» தாலிபான் அமெரிக்காவின் எதிரி அல்ல: ஜோ பைடன்
» ஹஸாரேக்கு ஊழல் அல்ல, காங்கிரஸ்தான் பிரச்சனை – திக் விஜய்சிங்
» தீர்ப்பு கூறுவது பெரும்பான்மையினரின் விருப்பத்தின் அடிப்படையில் அல்ல – நீதிபதி கபாடியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum