முஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்?
முஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்?
முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாமிய நகரங்களான மக்கா மற்றும் மதினாவில் நுழைய அனுமதி இல்லை என்பது உண்மை. இதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள இஸ்லாத்தின் சில அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் என்பது இவ்வுலகை படைத்த இறைவனால் இவ்வுலக மக்களுக்கு நேர்வழியாக வழங்கப்பட்ட மார்க்கமாகும். அதன்படி இவ்வுலகம் முழுமையும் ஒரு சமுதாயமாகக் காண்கிறது இஸ்லாம். அதாவது இவ்வுலகைப் படைத்த இறைவனை மட்டுமே தலைவனாக கொண்டு அவன் வகுத்த சட்டதிட்டத்தின் படி தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு ஓர் ஆட்சியினை நிர்வகிக்க இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இஸ்லாத்தினை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள்(முஸ்லிம்கள்) இச்சட்டதிட்டங்களை கடைபிடித்தே ஆக வேண்டும். அதனை மீறுபவர்கள் இஸ்லாமியர்கள் ஆகமாட்டார்கள்.
முஸ்லிமல்லாதவர்கள் விஷயத்தில் இஸ்லாமிய கொள்கைபடி நடந்து கொள்ளவேண்டும் என நிர்ப்பந்தம் செய்வது கூடாது. அதாவது ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களிடம் அதன் படி நடக்க வேண்டும் என நிர்பந்திப்பதோ அல்லது அவ்விஷயத்தை ஏற்றுக் கொள்ள நிர்பந்திப்பதோ கூடாத காரியமாகும்.
இஸ்லாத்தின் இந்த அடிப்படையான கொள்கையை மனதில் வைத்து மேற்கண்ட கேள்வியை அணுகுவோம்.
கேள்வியில் காணப்படும் இரண்டு இடங்களான மக்கா மற்றும் மதீனாவில் சில சட்டதிட்டங்களைப் பேண இஸ்லாம் வலியுறுத்துகிறது.
எடுத்துக்காட்டாக மக்காவின் ஓர் எல்லைக்குட்பட்ட இடத்தில் எந்த ஒரு உயிரினத்தையும் நோவினை செய்வது அனுமதிக்கப்படாத காரியமாகும். செடி கொடிகளில் உள்ள இலைகளை கூட தகுந்த காரணமின்றி பறிப்பது கூட, பரிகாரம் செய்தாலொழிய பாவத்தைப் பெற்றுத் தரக்கூடிய குற்றமாகும்.
முஸ்லிமல்லாத ஒருவர் அவர் இஸ்லாத்தினை வாழ்க்கை நெறியாக ஏற்காத காரணத்தினால் இஸ்லாமிய அடிப்படையின் படி இச்சட்டங்களைப் புரிந்து கொண்டு அதனைப் பேணி நடக்க அவரை நிர்பந்திப்பது முடியாத காரியம் மட்டுமல்லாது நடைமுறைக்கும் ஒத்து வராத செயலாகும்.
ஓர் எடுத்துக்காட்டு மூலம் இதனை விளக்கலாம்
ஒரு நாட்டில் இராணுவ கேந்திரம் போன்ற சில முக்கிய பகுதிகளில் அந்நாட்டின் குடி மக்களுக்கே உள்நுழைய விதிக்கப்பட்டிருக்கும் தடையினை எடுத்துக் கொள்வோம். ஒருவர் இங்கு உள்ளே நுழைய வேண்டுமெனில் அவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். அந்த தகுதியுள்ள ஒருவர் அங்கு உள் நுழைந்த பின் அங்குள்ள சட்டதிட்டத்திற்கு அவரும் கட்டுபட்டவர் ஆகி விடுவார். மீறினால் அங்குள்ள முறைப்படி ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளாக்கப்படுவார்.
அதுபோன்ற ஒரு விதிமுறை தான் மக்கா மற்றும் மதீனாவின் விஷயத்திலும் நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு நாடும் அந்நாட்டிற்குள் வர எண்ணும் எவருக்கும் சில விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டால் தான் உள்நுழைய அனுமதிக்கும் ஆணையை (Visa) வழங்குகிறது. அதேபோல,
இஸ்லாத்தின் புனித நகரங்களான மக்காவிற்கும் மதினாவிற்கும் செல்ல விரும்புபவர் "இந்த உலகை படைத்து பரிபாலிக்கும் இறைவன் ஒருவனே, முஹம்மது நபி அந்த இறைவனின் தூதர் என நான் நம்புகிறேன்" என்ற பொருள் படும் "அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ வ அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்ற வாசகத்தை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு தன் உதடுகளால் அதனை மொழிய வேண்டும். இந்த ஓர் எளிய நிபந்தனையை ஏற்று அவர் அதனை கூறிவிட்டால் அங்குள்ள சட்டத்தை அவர் ஏற்றுக் கொள்கிறார். எனவே அவரும் அந்த சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர் ஆகிவிடுவார். பின்னர் அவர் அங்குள்ள சட்டத்தை மீறினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது இயலக்கூடிய காரியமாகி விடும்.
எப்படி தான் விதித்த விதிமுறையை ஏற்றுக் கொள்ளாதவரை ஒரு நாடு உள் நுழைய அனுமதிப்பதில்லையோ, அதே போல மேற்கண்ட நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ளாத முஸ்லிமல்லாதவர்களை அங்குள்ள சட்டத்திற்கு கட்டுப்பட நிர்பந்திப்பது இஸ்லாமிய அடிப்படையில் கூடாத காரியமாதலால் தான் அங்கு முஸ்லிமல்லாதவர்களுக்கு பிரவேசிக்க அனுமதி மறுக்கப்படுகிறது.
இறைவனே எல்லாம் அறிந்தவன்.
நன்றி : சத்திய மார்க்கம்
» அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேல் தடை
» ஜம்முவுக்குள் நுழைய சுஷ்மா, ஜேட்லிக்குத் தடை-பிரதமரிடம் அத்வானி புகார்
» மனித உரிமை ஆர்வலர் கவ்தம் நவ்லாகா கஷ்மீரில் நுழைய தடை
» ரமலான் உம்ரா:நம்பிக்கையாளர்களின் வெள்ளத்தில் மக்கா