தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கத்தாஃபி:வீர நாயகனிலிருந்து வெறுக்கப்பட்ட மனிதனாக…

Go down

கத்தாஃபி:வீர நாயகனிலிருந்து வெறுக்கப்பட்ட மனிதனாக…  Empty கத்தாஃபி:வீர நாயகனிலிருந்து வெறுக்கப்பட்ட மனிதனாக…

Post by முஸ்லிம் Sun Oct 23, 2011 4:44 pm

உலகை ஆச்சரியமடைய வைத்த புரட்சியாளராக
மாறி கடைசியில் மக்கள் கோபத்தால் மரணத்தை சந்தித்த தலைவர்தாம் மக்ரிப்
தேசமான லிபியாவை 42 ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த கடாஃபி.

வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து 1951-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறிய லிபியாவின் எண்ணெய் வளங்களை மேற்கத்திய நாடுகள்
கொள்ளையடித்த போது நிம்மதியிழந்த லிபியாவின் மக்கள் கண்டெடுத்த தீர்வுதான்
முஅம்மர் கத்தாஃபி. ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல அதிகாரத்தின் வெறி
தலைக்கேறி சொந்த மக்களின் உள்ளங்களிலிருந்து அகன்ற கத்தாஃபியின் சிம்மாசனம்
அரபு நாடுகளில் உருவான முல்லைப்பூ புரட்சியில்
எடுத்தெறியப்பட்டுள்ளது.

1942 ஜூன் 7-ஆம் தேதி கடலோர நகரமான
ஸிர்த்தில் சாதாரண குடும்பத்தில் கத்தாஃபி பிறந்தார். ஆக்கிரமிப்பு
சக்திகளிடம் அடிபணியாத குணம் கத்தாஃபிக்கு இயற்கையிலேயே உண்டு. பெங்காசி
பல்கலைக்கழகத்தில் புவியியலில் பட்டப்படிப்பை மேற்கொண்ட போதிலும் 1961-ஆம்
ஆண்டு ராணுவ அகடாமியில்
சேர்ந்தபொழுது 19 வயதான கத்தாஃபியின் வரலாறு திரும்பியது.

எண்ணெய் வளத்தை கண்டறிந்த பிறகு
ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய எண்ணெய் வளமிக்க நாடாக மாறிய லிபியாவில் மன்னர்
இத்ரீஸின் பலகீனத்தை மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு சாதகமாக மாற்றிய
வேளையில், கத்தாஃபி தனது கீழ் செயல்படும் அதிகாரிகளின்
துணையுடன் 1969-ஆம் ஆண்டு இரத்தம் சிந்தாமல் ராணுவ புரட்சியின் மூலம் தனது 27-வது வயதில் லிபியாவின் அதிபரானார்.

எகிப்தின் கமால் அப்துல் நாஸரின்
கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கத்தாஃபி அரபு தேசியத்தின் அதிகாரப்பூர்வ
பிரதிநிதியாக மாறினார். அரபு நாடுகளில் போராளிக் குழுக்களுக்கும், உலகின்
புரட்சிக் குரல்களுக்கும் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து ஏகாதிபத்திய
எதிர்ப்பாளர்களின் உள்ளங்களில் கத்தாஃபி இடம் பிடித்தார்.
இதேக்காரணத்தால்தான் அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் கத்தாஃபியின்
லிபியாவை தீவிரவாதிகளின் புகலிடம் என அழைத்தன.

வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக கடுமையான
நிலைப்பாட்டை மேற்கொண்ட கத்தாஃபியின் பின்னால் நாட்டு மக்கள் அணி
திரண்டனர். ஏகாதிபத்தியத்திற்கும், கம்யூனிசத்திற்கும் எதிராக அரபு
தேசியவாதம் என்ற திட்டத்திற்காக முயன்று பொருளாதார சீர்திருத்தங்களை
நடைமுறைப்படுத்தினார். சிறிய நிறுவனங்களுக்கு மட்டும் தனியார்
கட்டுப்பாட்டை வழங்கிவிட்டு பெரிய நிறுவனங்களை
அரசுடமையாக்கினார்.

பனிப்போர் காலக்கட்டத்தில் அணிசேரா
நாடுகளின் குரலாக விளங்கினார். நாட்டின் அரசியல் சட்டதை முற்றிலும் மாற்றி
அமைத்தார். எகிப்தும், இஸ்ரேலும் 1978-ஆம் ஆண்டு உருவாக்கிய கேம்ப் டேவிஸ்
ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் பிரபலமானவர் கத்தாஃபி ஆவார்.
ஆனால், வெளிநாட்டு கொள்கைகளில் பின்னர் மாற்றத்தை ஏற்படுத்திய அவர் அரபு
உலகிலிருந்து மாறி ஆப்பிரிக்க ஐக்கியத்தில் கவனத்தை செலுத்தினார். அத்துடன்
சோவியத் யூனியனுடனான உறவை வலுப்படுத்தினார்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து
கத்தாஃபி அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் சில சமரசங்களுக்கு தயாரானார்.
1986-ஆம் ஆண்டு பெர்லினில் இரவு கிளப்பில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு
அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் லிபியாவிற்கு பங்கிருப்பதாக குற்றம்
சாட்டி அமெரிக்கா திரிபோலியிலும், பெங்காசியிலும் நடத்திய தாக்குதலில்
35-க்கும் மேற்பட்ட
லிபியா மக்கள் கொல்லப்பட்டனர். ஸ்காட்லாந்தில் லாக்கர்பியில் விமானத்தில்
நடந்த குண்டுவெடிப்பில் 270 பேர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலோர்
அமெரிக்கர்களாவர். முதலில் இத்தாக்குதலுக்கான பொறுப்பை லிபியா மறுத்தாலும்
பின்னர் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு கொல்லப்பட்டவர்களின்
குடும்பத்தினருக்கு ஒரு கோடி டாலருக்கும் அதிகமான தொகையை இழப்பீடாக
வழங்கியது. அதன் பின்னர் பெரும் ஆயுதங்களை அழிப்பதாக கத்தாஃபி அறிவித்தார்.

மீண்டுமொரு ராணுவ புரட்சி நடந்துவிடுவதற்கான வாய்ப்பை
உணர்ந்த அவர் ராணுவத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை
வலுப்படுத்தினார். மக்கள் எழுச்சிப் போராட்டங்களை அடக்கி
ஒடுக்கினார். ஊடகங்களுக்கு தடை ஏற்படுத்தினார். அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்தார்.

1996-ஆம் ஆண்டு நடந்த சிறைக் கலவரத்தில் கத்தாஃபியின் ராணுவம்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளை கொலை செய்தது. மனம் வெறுத்துப்போன
லிபியாவின் மக்கள் துனீசியா, எகிப்து கண்டறிந்த முல்லைப்பூ புரட்சியை
நெஞ்சில் சுமந்து கத்தாஃபிக்கு எதிராக போராட களமிறங்கினர். ஆனால், அதனை
கடுமையாக எதிர்கொண்ட கத்தாஃபி ராணுவ அடக்குமுறையை கையாண்டார்.

எதிர்ப்பாளர்களுக்கு உதவுகிறோம் எனக்கூறி லிபியாவின்
எண்ணெய் வளத்தின் மீது குறிவைத்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் நேட்டோ படை லிபியாவின் மீது தாக்குதலை
தொடர்ந்தது. எதிர்ப்பாளர்கள் நேட்டோ படையின் உதவியுடன் கத்தாஃபி ராணுவத்தை
எதிர்கொண்டனர். இரு படையினருக்கும் பின்னடைவும், வெற்றியும் மாறி மாறி வந்த
பொழுதிலும் பின்னர் பெரும்பாலான நகரங்களை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றினர்.
அவ்வேளையிலும் கூட சரணடையமாட்டேன் இறுதிவரை போராடுவேன் என முழக்கமிட்டார்
கத்தாஃபி.

பல மாதங்கள் நீடித்த போராட்டத்தின்
முடிவில் பிறந்த நகரமான ஸிர்த்தில் வைத்து மரணம் வரை போராடுவேன் என்ற தனது
வாக்குறுதியை நிறைவேற்றி மரணத்தை தழுவியுள்ளார் கத்தாஃபி.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய வீரர்
என துவங்கி கடைசியில் மக்களின் வெறுப்பிற்குரிய தலைவராக மாறிய
கத்தாஃபியின் பிற்கால வாழ்க்கை நம் உள்ளங்களில் கசப்புணர்வுகளை
ஏற்படுத்தும் வேளையில் துவக்க கால வாழ்க்கையில் ஏகாதிபத்தியத்தை தீரமுடன்
எதிர்த்த கத்தாஃபியின் வீரமும் பசுமையாக பதிந்துள்ளதையும் மறுக்க முடியாது.


கத்தாஃபி:வீர நாயகனிலிருந்து வெறுக்கப்பட்ட மனிதனாக…  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum