தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எகிப்தின் மக்கள் புரட்சியின் முன்னுரை

Go down

 எகிப்தின் மக்கள் புரட்சியின் முன்னுரை   Empty எகிப்தின் மக்கள் புரட்சியின் முன்னுரை

Post by முஸ்லிம் Sun Feb 20, 2011 3:19 pm

நினைத்துப் பார்க்கும்போது பெருவியப்பாகவே இருக்கிறது!

"கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமொன்று வருகுது!" என்பதை 2011 ஜனவரி 25க்குமுன் எகிப்தின் முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக் மட்டுமின்றி அவரது எஜமான் அமெரிக்காவும் அமெரிக்காவின் எஜமான் இஸ்ரேலுங்கூட எதிர்பார்த்திருக்க முடியாது.

2010ஆம் ஆண்டு ஆறாவது மாதம் ஆறாம்தேதிக்குப் பின்னர் எகிப்தில் ஓர் இயக்கம் உருவானது - "நாங்கள் ஒவ்வொருவரும் காலித் ஸயீத்". அந்த இயக்கத்தவர்களுக்கு ஓர் ஆதர்ச நாயகன் இருந்தான்:

காலித் முஹம்மது ஸயீத்!

6.6.2010 அன்று அலெக்ஸாண்ட்ரியாவின் 'ஸையிதி ஜாபிர்' பகுதியிலுள்ள ஒரு கட்டடத்தின் இரண்டாவது மாடியில் செயற்பட்ட ஓர் இன்டெர்நெட் கஃபேயில் இணையத்தில் இலயித்திருந்த காலிதை, எகிப்தின் காவலர்கள் கழுத்துச் சட்டையைப் பிடித்துத் தரதரவெனெ மாடிப்படிகள் வழியாக இழுத்து வந்து வீதியில் போட்டு அடித்துத் துவைத்தில் 28 வயதான இளைஞன் காலித் இறந்து போனான்.

போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போலீஸாரை வீடியோவில் படம் பிடித்து இணையத்தில் பரவ விட்ட காலிதின் துணிச்சல், காவலரை நிலைதடுமாறச் செய்தது. அவனுடைய கதையை முடித்து விட்டு, ஆதாரத்தை அழித்து விட்டதாக நினைத்த காவலர்களின் நிம்மதி நிலைக்கவில்லை.

இணைய வழியாக ஒருவாரத்துக்குள் 1,30,000 "காலித்"கள் இணைந்தனர், கூடவே அல்ஜஸீராவும். எகிப்தின் காவல்துறையினரின் அடக்குமுறை அத்துமீறல்களை எதிர்த்தும் காலிதின் படுகொலைக்கு நீதிகேட்டும் முதல் போராட்டம் 14.06.2010இல் வீதிக்கு வந்தது.

அதற்குப் பின்னரே உள்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் காவலர்கள் விசாரிக்கப்பட்டு, புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மஹ்மூத் ஸலாஹ்வும் சர்ஜண்ட் அவாத் இஸ்மாயீல் சுலைமானும் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டனர்.

அமெரிக்காவின் சி.ஐ.ஏவும் இஸ்ரேலின் மொசாதும் மட்டுமின்றி அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுங்கூட ஆறுமாதகாலத்துக்குள் ஆட்சி மாற்றம் வரப்போதைப் பற்றி அறிந்திருக்கவில்லை - அடுத்த கொடுமை துனீசியாவில் அரங்கேறும்வரை.

துனீசியப் பட்டதாரி வாலிபரான 26 வயதுடைய முஹம்மது பின் அல்பூ-அஸீஸ் என்பவர், உலகப் பொருளாதார வீழ்ச்சியில் அரசிலும் தனியார் நிறுவனங்களிலும் எந்த வேலையும் கிடைக்காமல் தமது ஏழ்மையான குடும்பத்தினைக் காக்க, துனீஸின் ரோட்டு ஓரத்தில் ஒரு காய்கறிக்கடை நடத்திப் பிழைத்து வந்தார். ஆனால் அங்கே வந்த போலீஸ், அந்தக் கடைக்குச் சென்று "நீ இங்குக் கடை வைக்க முடியாது" என்று சென்னை பாரிஸ் கார்னரில் ரோடு ஒரத்தில் கடை வைத்திருப்பவர்களிடம் பணம் பிடுங்கும் போலீஸைப்போல் பிடுங்கியிருக்கிறார்கள். திருடாமல், கொள்ளையடிக்காமல் வயிற்றுப் பிழைப்பிற்காக கடை நடத்துவதைக்கூட, வேலை கொடுக்காத அரசும் அதன் ஊழியர்களும் தடை செய்கிறார்களே என்ற வேதனையில் உழன்ற அந்த இளைஞர், கடந்த ஆண்டு 2010 டிசம்பர் 17ஆம் நாள் தன் உடலில் மண்ணெண்னையை ஊற்றிக் கொண்டு வெந்தணலில் வெந்து மடிந்தார்.

தொடர்ந்து கிளர்ந்த மக்கள் புரட்சியினால், துனீசிய அதிபர் ஸைனுல் ஆபிதீன் பின்அலீ, நாட்டைத் துறந்து அடைக்கலம் தேடி ஒவ்வொரு நாடாக ஓடியலைந்த அவலம் நிகழ்ந்தது. 'இஸ்லாமிய நாடு' எனப் பெயர் பண்ணிக் கொண்டு, இஸ்லாத்துக்கு எதிரான அனைத்துவகை அனாச்சாரங்களையும் அடக்குமுறை அட்டூழியங்களையும் துனீசிய மக்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட பின்அலீயை அவரது எஜமானர்களான அமெரிக்காவும் ஃப்ரான்ஸும் அகதியாக ஏற்றுக் கொள்ளாமல் கைவிரித்துவிட்டன. மக்கள் ஒன்று திரண்டால் எதையும் சாதிக்கலாம் என சமகாலத் துனீசியப் புரட்சி மூலம் புரிந்து கொண்ட எகிப்து மக்கள், நாட்டின் காவலர் தினத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

ஜனவரி 25, 2011.

தலைநகர் கைரோவின் விடுதலைச் சதுக்கத்தில் கூடிய மக்களின் புரட்சி, "காலிதின் படுகொலைக்கு நீதி" எனும் நிலையைத் தாண்டி புதிய அரசியல் பரிணாமம் அடைந்திருந்தது.

போராட்டக்காரர்கள் முன்வைத்தவை வெகுசில கோரிக்கைகள் மட்டுமே. ஆனால் வலிமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்த வல்லவை:

1. ஹுஸ்னி முபாரக் பதவி விலகவேண்டும்.
2. அமைச்சரவை கலைக்கப்பட வேண்டும்.
3. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல் நடத்த வேண்டும்.

கைரோவில் மட்டுமின்றி அலக்ஸாண்ட்ரியா உட்பட அனைத்து மாநிலங்களிலும் பரவிய அந்தத் தொடர் போராட்டத்தில் மிகவும் வியப்புக்குரிய அம்சம், நாடு தழுவிய போராட்டத்தை எந்த அரசியல் கட்சியோ இயக்கமோ தலைமையேற்று நடத்தவில்லை. ஆனால் அனைவரும் பங்காற்றியிருந்தனர்.

தலைமையில்லாததால் எளிதாகப் போரட்டத்தை அடக்கிவிடலாம் என்று நினைத்த ஆளும் வர்க்கத்தின் ஆசையில் மண்விழுந்தது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த அனுப்பப்பட்ட இராணுவத்தினர் மக்களுக்கெதிராக ஒன்றும் செய்யாதது மட்டுமின்றி அவர்களுள் சிலர், துனீசியாவில் நடந்ததுபோல் போராட்டக்காரர்களோடு இணைந்து விட்டிருந்தனர்.

உலகப் பணக்காரரான பில்கேட்ஸைவிடப் பணம் சேர்த்து, பதவியிலிருந்த முப்பதாண்டு காலத்தில் மக்களின் உதிரத்தை உறிஞ்சி 70 பில்லியன் அமெரிக்க டாலர்வரை வளைத்துப் போட்டிருந்த ஹுஸ்னி முபாரக், "பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை" என்று சொல்லிப் பார்த்தார். அப்பன் பெயராலே அறிக்கை விடும் அளவுக்கு வளர்ந்திருந்த ஹுஸ்னி முபாரக்கின் மூத்த மகன் ஜமால், போராட்டக்காரர்களுக்கு இராணுவத்தினர் கொடுத்த ஒத்துழைப்பை முறியடிக்க, வானில் விமானங்களைப் பறக்கவிட்டு அச்சுறுத்திப் பார்த்தான்.

ம்ஹூம்! மசியவில்லை மக்கள்.

"அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்" என்று ஹுஸ்னி முபாரக் வாக்குறுதி கொடுத்துப் பார்த்தார். "அரசியல் சட்டத்தை திருத்தலாம்" என்று துணை அதிபர் உமர் சுலைமான் ஆலோசனை முன்வைத்தார். எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் எதுவும் எடுபடவில்லை.

மக்கள் போராட்டம் நாளுக்குநாள் வீரியம் அடைந்து கொண்டிருந்தது. இக்வானுல் முஸ்லிமூன் உள்ளிட்ட எல்லா அமைப்பினரும் போராட்டத்தில் பங்கெடுத்தனர். ஐ.நா.வின் கீழுள்ள உலக அணுசக்தி நிறுவன(International Atomic Energy Agency - IAEA)த்தின் தலைமை நிர்வாகி முஹம்மது முஸ்தஃபா அல்பராதியீயும் அரபு நாடுகள் ஒருங்கிணைப்பின் பொதுச் செயலாளர் அம்ரு முஹம்மது மூஸா ஆகிய பிரபலங்களும் மக்களோடு மக்களாக மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஒருநாள் இருநாளல்ல; 17 நாட்கள் தொடர் போராட்டம்.

போராட்டக்காரர்களைத் தாக்கும் நடவடிக்கைகளில் ஹுஸ்னி முபாரக்கின் ஆயுதமேந்திய ஆதரவாளர்கள் பரவலாக ஈடுபட்டனர். அவ்வாறான தாக்குதல்-எதிர்த்தாக்கு நிகழ்வுகளால் போராட்டம் தொடங்கியதிலிருந்து சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர்.

எகிப்தின் முன்னாள் அதிபர் அன்வர் சதாத், 1981இல் படுகொலை செய்யப்பட்டபின் அதிபராகப் பொறுப்பேற்ற ஹுஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சி, அவரது 82ஆவது வயதில் முடிவுக்கு வந்தது. முப்பதாண்டு காலம் எகிப்தை ஆண்ட முபாரக்கின் குடும்பம் பிரிட்டனில் புகலிடம் தேடிப் போனது.
Dim lights Embed

போராட்டக்காரர்கள், ஹுஸ்னி முபாரக்குக்கு, "புறப்படும் நாள்" என்பதாக 11.2.2011 தேதியை முடிவு செய்து அறிவித்தனர். மக்களுடைய எழுச்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஹுஸ்னி முபாரக் அன்று இரவு அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார்.

போகுமுன், ஒரு நல்ல காரியம் செய்திருந்தார் ஹுஸ்னி முபாரக். எகிப்தை இராணுவத்திடம் ஒப்படைத்ததுதான் அது. தம் பினாமியான ஹுஸைன் ஸஹ்லுக்குச் சொந்தமான, எகிப்தின் எல்லையோரத்தில் உள்ள 'ஷரமுல்ஷைக்' மேட்டுக்குடி வாசஸ்தலத்துக்கு முபாரக் சென்று அங்குத் தங்கியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஷரமுல்ஷைக் பங்களாவின் ஜன்னலைத் திறந்து பார்த்தால் இஸ்ரேல் தெரியும்.

பதவிக் காலத்தில் ஹுஸ்னி முபாரக் மரணமடைந்தால் மாற்று ஏற்பாடாக துணை அதிபர் உமர் சுலைமான் எகிப்தின் அதிபராக வருவார் என்ற நினைப்பில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கனவே உமர் சுலைமானை வளைத்துப் போட்டு வைத்திருந்தன. எகிப்தின் முன்னாள் உளவுத்துறைத் தலைவராகப் பணியாற்றிய உமர் சுலைமான், சி.ஐ.ஏ.வின் ஏஜெண்டாகவே எகிப்தில் செயல்படுபவராவார்.

இப்போது நாடாளுமன்றம் கலைக்கப் பட்டு, இராணுத்தின் பொறுப்பில் எகிப்து இருப்பதால் உமர் சுலைமானும் இப்போது பல் பிடுங்கப்பட்ட பாம்புதான்.

"மக்களுக்கு இயைந்த ஆட்சி தருவோம்; மக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும்" என்று இடைக்கால இராணுவ அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

* வேலையில்லாத் திண்டாட்டம்
* விண்ணைத் தொடும் விலைவாசி
* அடியிலிருந்து முடிவரை இலஞ்சம்
* அங்கிங்கெனாதடி அரசுத்துறையின் எங்கெங்கும் ஊழல்

இவை அனைத்தையும் சமாளிக்க வேண்டிய நிலையில் எகிப்து இருக்கிறது. அரசு மாற்றத்துக்கான முன்னுரை மட்டுமே எகிப்தில் எழுதப்பட்டுள்ளது. இனி, தொடரவேண்டியவை நிறையவே உள்ளன. கடந்த ஆண்டுகளைப்போல் அமெரிக்க-இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடுகளை முற்றிலும் தவிர்த்து, தனித்தன்மையோடு எகிப்தின் அரசியல் சாசனம் திருத்தி எழுதப்படுமானால் முஸ்லிம் உலகுக்கு எகிப்து ஒரு முன்னுதாரணமாகத் திகழும்.


நன்றி : சத்திய மார்க்கம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» லிபிய மக்கள் புரட்சியின் பலனை அடைய ஒத்துழைக்க வேண்டும் – டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி
» துனிசியா : மல்லிகை புரட்சியின் மறுபக்கம்
» எகிப்தின் இரண்டாம் கட்ட தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் இமாலய வெற்றி
» மக்கள் மௌன புரட்சியை ஏற்படுத்திவிட்டனர் : ஜவாஹிருல்லா!
» மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்குத் தீ!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum