1000 ஆண்டு வாழ்வு சாத்தியமா..?-ஜி - என்

Go down

1000 ஆண்டு வாழ்வு சாத்தியமா..?-ஜி - என்

Post by முஸ்லிம் on Sat Nov 13, 2010 4:26 pm

விஞ்ஞானிகளின் புதிய சவால்...

உலகில் விஞ்ஞானம் வளரும்போதெல்லாம் ஆன்மீகம் வீழ்ச்சியடைவது இயல்பாகி விட்டது. விஞ்ஞானத்தின் அனுபவங்களை நேரடியாகக் கண்டுணரும் மனிதன் அதற்கெதிராகப் பேசும் எந்த அன்மீகத்தையும் புறந்தள்ளத் தயங்குவதில்லை. இதற்குக் காரணம் ஆன்மீகத்தைப் போதிக்கும் நூல்கள் விஞ்ஞானத்திற்கு எதிராக இருப்பதுதான், ஆன்மீகத்தைப் போதிக்கும் நூல்களை வைத்தே அம்மதங்களின் அறிவகம் வெளிப்படுகிறது. முற்றும் அறிந்த இறைவனால் இறக்கி வைக்கப்பட்ட நூல் என்றால் எப்படியய்யா இந்த விஞ்ஞான உண்மை அந்த இறைவனுக்குத் தெரியாமல் போனது? என்ற விஞ்ஞானிகளின் நகைப்பு அல்லது தத்துவார்ந்தக் கேள்விக்கு முன் ஆன்மீகம் தலை குனிந்துக் கொள்ளும் நிலையும் அந்த ஆன்மீகம் கற்றுத்தந்த கடவுள்களை கை கழுவிவிடும் நிலையும் தொடர்கின்றன.

பத்தோடு இதுவும் ஒன்று- என்பது போல்தான் மேற்கத்திய விஞ்ஞானிகளில் பெரும்பாலோர் இஸ்லாத்தையும் புறந்தள்ளி வைத்துள்ளனர். எவர் எது சொன்னாலும் சத்தியம் நிலைக்கும், இந்த மார்க்கம் உலகை வெல்லும் என்ற குர்ஆனின் அறைகூவலால் ஈர்க்கப்பட்ட விஞ்ஞானிகள் இஸ்லாம் என்பது பகட்டு, முரட்டு, வரட்சியான ஆன்மீகத்தைப் போதிக்கும் பிழை இலக்கணத்திற்குட்பட்ட மதமல்ல, அது ஒரு புரட்சியுகத்திற்கு இடர்பாடில்லாமல் வழிகாட்டும் இயல்பு நெறி என்பதை தங்களின் ஆய்வுகளின் மூலம் கண்டு வியந்து வருகிறார்கள்.

புதிய வாழ்க்கை

அதிகபட்சம் 100 அல்லது 120 ஆண்டுகள் கடந்து எவருமே வாழாத இவ்வுலக வாழ்க்கை முற்றுப்புள்ளியாகிப் போகும் சூழலில், இதுபோன்ற 12 மடங்கிலிருந்து 15 மடங்கு காலம் வாழும் சூழ்நிலை உருவாவது எத்துனை மகத்தான விஷயம் என்பதை சிந்தித்துப் புல்லரித்துப் போகலாம். இஸ்லாம் இதுபற்றி என்ன கூறுகிறது? இப்படி வாழ்வது சாத்தியம்தானா? என்பதைப் பார்க்குமுன் விஞ்ஞானிகள் இது பற்றிக் கூறும் கருத்துக்கள் என்ன வென்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

கோடிக்கணக்கான அணுக்கள் (ஜீன்கள்) வியாபித்துள்ள மனித உடம்பில் ஜீனில் DNA வரிசைதான் அது எவ்வளவு புரத சத்தை உருவாக்கும் என்பதைத் தீர்மானிக்கிறது Cystic Fidrosis. நோய்கள், DNA உருவாக்கும் புரத சத்தியில் மாற்றங்கள் ஏற்படும்போது எற்படுகின்றன. எனவே ஜீன்கள் பற்றிய அறிவாதாரத்தை நாம் பெற்று விட்டால் வியாதி வரும்போது எந்த ஜீன் பாதிக்கப்படுகிறதோ அதை நிவர்த்தி செய்வதன் மூலம் பிரச்சனையை சுலபமாகத் தீர்த்து விடலாம் என்று சமீபகாலமாக மிக தீவிரமாக நம்பத்துவங்கி இதற்கான கடின முயற்சியில் உலக அளவிலான விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். மனித உடம்பிலுள்ள ஜீன்களின் DNA மூலக்கூறுகளை இதுவரை 60 ஆயிரத்திலிருந்து 1 லட்சம்வரை வரிசைப்படுத்தி (இது இந்தக் கட்டுரை எழுதும் போது ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு முன் கிடைத்தத் தகவல். இன்றைக்கு இந்த ஆய்வு மிகப் பெரிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளது) (Gnetic Blueprint of Humanvace) அதன் (அணுசோதனை) நகலையும் தயாரித்துள்ளார்கள்.

இன்னும் இதில் தவறிப்போன சில பக்கங்களை கண்டெடுக்கும் முயற்சி தொடர்கின்றன. மனிதனின் உயிர் வேதியல் மூலக்கூறுகளில் 97 சதவிகிதத்தைப்பற்றிய ஆய்வு முடிந்து விட்டது. இது மருத்துவத்துறையில் ஒரு மைல் கல் என்றம் விஞ்ஞான உலகம் கூறியுள்ளது.

DNA CODE பற்றி முழுமையாக அறியும் வழி எங்களுக்குக் கிடைத்து விட்டது இன்னும் சில ஆண்டுகளில் இதில் நாங்கள் வெற்றி காண்போம். இந்த வெற்றியின் மூலம் மனிதனின் அகால மரணங்களை தவிர்த்து நிலையான வாழ்க்கைக்கும் நெருக்கடியில்லாத தொடர்பு அறுந்து போகாத மனித சந்ததிகளுக்கும் விடை கிடைக்கும். (Immortals) கொடுமையான மரணங்கள் ஏற்படாது என்று தைவான் உலக மாநாட்டில் தலை சிறந்த விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து வரிவான விளக்கங்களுடன் வாழ்க்கைப் புத்தம் (Book of Life) வெளியிட பிரிட்டிஷ், அமெரிக்க அணு விஞ்ஞானத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. விஞ்ஞானிகளின் நவீன சவாலின் சுருக்கமான விபரம் இது.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.

ஜீன் என்ற அணுத் தொடர் பற்றிய அறிவு மனிதனுக்கு சமீபக் காலங்களில் தான் கிடைத்துள்ளது. அது பற்றிய அறிவை பெறுவதற்கு அவன் நீண்ட அவகாசங்களையும் ஆய்வுகளையும் நடத்தி வருகிறான்.

மரணமே இல்லாத, ஆரோக்கியம் கெடாத நீண்டக் கால வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. நீண்டக் காலம் வாழவேண்டும் என்று மனம் விரும்பினாலும் அதற்கான வழிகள் இப்போதுதான் கிடைக்கத்துவங்கியுள்ளன.

அற்பக் காலத்தில் மனிதவாழ்க்கை முடிந்துப் போகும் ஒரு அவசர யுகத்தில் வாழ்கிறோம். இந்தக் காலகட்டத்தில் 1000 ஆண்டுகள் வரை வாழலாம் என்ற அறிவிப்பு மெய்சிலிர்க்கக் கூடியதுதான். இது இன்றைக்கு தியரியாக இருந்தாலும் நாளை நிச்சயம் நடக்கக் கூடிய சூழல் பக்கத்தில் தெரிகின்றது. விஞ்ஞானிகள் இதற்காக விலாவாரியாக களம் அமைத்துப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது 'மதங்களுக்கு இங்கு என்ன வேலை? மனிதனை நீண்டக் காலம் வாழவைக்க எந்த மதம் தான் விரும்புகிறது? குறிப்பாக அரபுமதமாகிய இஸ்லாம் இதுபற்றி கற்பனையாவது செய்திருக்குமா..? என்றெல்லாம் சிலர் முணுமுணுக்கிறார்கள்.

அறிவியல் வளரும் போதெல்லாம் மதம் வீழ்ச்சியடையும் நிலையில் இந்த ஆய்வு நிச்சயம் மதங்களிலிருந்து மனிதனை மீட்டெடுக்கும் என்பது அவர்களின் ஆசை.

இதர மதங்களைப் பற்றி நாம் (இந்த விஷயத்தில்) எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் இஸ்லாம் இதை எந்தக் கண்ணோட்டத்தில் அணுகும் என்பதை எங்களால் சொல்ல முடியும். இஸ்லாம் எந்த விஞ்ஞான உண்மைகளையும் மறுக்கவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட எந்த விஞ்ஞானமும் இஸ்லாத்திற்கு முரணாகவுமில்லை என்பதை நினைவுறுத்திக் கொண்டு 'நீண்டக் கால வாழ்வு' பற்றிப் பார்ப்போம்.

அரபுகளுக்கு மத்தியில் முஹம்மத் அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். அன்றைக்கு அவர்கள் சந்தித்த சமூகங்கள் மூன்று. தாயிப் உட்பட மக்காவை சுற்றியுள்ள பகுதிகளில் மடையர்கள் கூட்டம் வாழ்ந்தது. கவிதையில் சற்று தேர்ச்சிப் பெற்றதைத்தவிர வேறு எந்த அறிவும் அவர்களிடம் இல்லை. இத்தகைய மக்களைத் தான் முதன் முதலில் இறைத்தூதர் முஹம்மத் அவர்கள் சந்தித்து புரட்சிகரமான இறைக் கொள்கையை போதிக்கத் துவங்குகிறார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய மக்களிடம் தான் முதலில் இந்தக் கொள்கை பாதிப்பை ஏற்படுத்தி அவர்களை சிந்திக்க வைத்தது. அதே சமயம் மதீனா என்ற ஊரில் முஹம்மத் அவர்களின் பிரச்சார அலை தொட்டது. அங்கு விவாதிக்கப்பட்டன. ஒரு சமயத்தில் முஹம்மத் அவர்களை அங்குள்ள மக்கள் அழைத்தார்கள். மக்காவில் நெருக்கடி உச்சத்தை அடைந்த நிலையில் இறைத்தூதர் முஹம்மத் அவர்கள் மதீனா செல்கிறார்கள்.

அங்கு அவர்கள் சந்தித்தது முன்னர் சந்தித்த மக்காவாசிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவர்கள். மதீனாவில் வாழ்ந்த பரம்பரை அரபுகளைத் தவிர அந்தப் பகுதியை சுற்றி வாழ்ந்த யூதர்கள் மற்றும் கிறிஸ்த்தவர்களையும் முஹம்மத் அவர்கள் சந்திக்கிறார்கள். யூத கிறிஸ்த்தவர்களை பொருத்தவரை அவர்கள் ஏற்கனவே இறைவன் புறத்திலிருந்து வந்த இறைத்தூதர்களை சந்தித்து இறைவனிடமிருந்து வழிகாட்டும் வேதத்தையும் பெற்ற நிலையில் வேத போதனைகளுக்கு மாறுபட்டு தேவைக் கேற்ப அந்த வேதங்களில் விரும்பியவாறெல்லாம் மாற்றங்கள் செய்து கொண்டிருந்த நிலையில் முஹம்மத் அவர்களின் பணி இன்னும் கூடுதலாக வீரியம் அடைந்தது.

பரம்பரை அரபுகளுக்கு மட்டுமில்லாமல் யூத கிறிஸ்த்தவர்களுக்கும் அவர்களின் அழைப்பு தேவைப்பட்டது. மக்காவாசிகளின் மடமையை அகற்ற அவர்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கும் மதினாவில் ஓரளவு அறிவு முதிர்ச்சிப் பெற்று வாழ்ந்து வந்த யூத கிறிஸ்த்தவர்களின் முரண்பாடுகளையும் 'தான்' என்ற தன்மையை களைவதற்கான போராட்டத்திற்கும் மத்தியில் பலமான வேறுபாடு இருந்தது.

யூத கிறிஸ்தவர்களைப் பற்றி முஹம்மத் அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வந்த செய்தியில் இன்றைக்கு நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் ஆயிரம் ஆண்டு வாழ்க்கைக்கு விடைக் கிடைக்கின்றது.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனுக்கு இணைவைத்து வணங்குவோர், கிறித்துவர்கள், யூதர்கள் என்று மூன்று சமூகத்தவரையும் மையப்படுத்தி தம் பிரச்சாரத்தை செய்ய வேண்டியிருந்தது. யூத, கிறித்துவ சமூகங்களுக்கு மத்தியில் இஸ்லாம் புதுபிக்கப்படும் வேலை துவங்கியவுடன் அந்த இரு சமூகங்களின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து குர்ஆன் விரிவாகப் பேசியது. அதில் வரும் வசனங்களில் ஒன்று இப்படிக் கூறுகிறது.

(யூத கிறித்துவர்களாகிய) அவர்கள் மற்ற மனிதர்களை விடவும், இறைவனுக்கு இணைவைத்து
வணங்கும் இணைவைப்பார்களை விடவும், வாழ்வில் பேராசையுடையவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும் (இறைவனுக்கு மாறு செய்தால்)
அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இன்னும் அல்லாஹ் அவர்கள்
செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன், 2:96)


நமது ஆய்வின் கேள்விகள் எல்லாவற்றிற்கும் இந்த வசனத்தில் விடையுள்ளது. ஒட்டு மொத்த உலக மக்களும் மிக நீண்ட வாழ்க்கையின் மீது ஆர்வம் உள்ளவர்களாக இல்லை. பணக்காரர்களால் மட்டுமே நீண்ட வாழ்க்கையின் மீது ஆசை கொள்ளமுடியும் என்பது உண்மையென்றாலும் அதற்கான வழி முறை குறித்து இந்த இரு சமூகத்தவர்களைத் தவிர எவரும் சிந்திப்பதாகவோ, முயற்சி செய்வதாகவோ தெரியவில்லை.

வாழ்க்கையின் மீதுள்ள பேராசையுடன் அதற்கான முயற்சியில் இருக்கும் சமூகம் பற்றி இங்கு பேசப்படுகிறது. ''அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டு வாழ ஆசைப்படுகிறார்கள்'' என்ற இறைக்கூற்று அவர்களின் உள்ளக்கிடங்கின் தேடலை அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது. அப்படி ''அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும்'' என்ற வார்த்தை எத்துனை மெய்சிலிர்க்க வைக்கிறது!. இன்றைய விஞ்ஞானத் தத்துவத்தை அன்றைக்கே குர்ஆன் இது சாத்தியம்தான் என்பதைக்கூறி நிற்கிறது. நீண்ட வயது என்பது ஆயிரத்துடன் கூட முடிந்து விடுவதில்லை. அதற்கு மேலும் வாழும் தத்துவத்தைச் சொல்கிறது.

''அவர்கள் செய்வதையெல்லாம் இறைவன் கூர்ந்து கவனிப்பவனாக இருக்கிறான்'' என்று இந்த வசனம் முடிகிறது. அதாவது நீண்ட காலம் வாழ வேண்டுமென்பதற்கான முயற்சி இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே துவங்கி விட்டதை இக்கூற்று மெய்ப்பிக்கிறது. இன்று வரையும் நடக்கும் ஆராய்ச்சிகளை அதற்கான வழி முறைகளை கொடுத்து இறைவன் கூர்ந்து கவனித்து வருகிறான்.

மனித வரலாற்றைப் புரட்டும்போது இந்த ஆயிரம் வருட வாழ்க்கை என்பது முன்னுதாரணமற்ற புதிய கண்டுபிடிப்பல்ல. ஆதி மனிதர்களாக இருந்தவர்கள் ஆயிரத்திற்கு நெருக்கமாக வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன, ஆதிமனிதர் ஆதம்(அலை) அவர்கள் 960 வருடங்கள் வாழ்ந்துள்ளார்கள் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். வரலாற்று நூல்களான புகாரி, முஸ்லிம் போன்றவற்றில் இந்த சான்றுகள் இடம் பெற்றுள்ளது.

நூஹ்(நோவா) என்ற இறைத்தூதர் 950 வருடங்கள் வாழ்ந்துள்ளார்கள்.

...திடமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம் அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார். (அல்குர்ஆன்,29:14)

அநியாயக்கார அரசனுக்கெதிராகப் போராடி ஒரு குகையில் தஞ்சம் புகுந்தவர்கள் 300க்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழ்ந்ததையும் குர்அன் கூறுகிறது. (பார்க்க, 18:11,25)

இப்படி ஏராளமான ஆதாரங்களின் அடிப்படை நீண்டகாலம் வாழ்வதற்கு முன்னுதராணமாக இருக்கின்றன.

மிக நெடிய வாழ்க்கை வாழ்ந்து வந்த மனித சமுதாயம் இப்படி தம் வாழ்க்கையை சுருக்கிக் கொண்டதற்கான காரணம் என்ன? என்று சிந்திக்கும்போது உலகத்தில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள்தான் என்பது பளிச்சென்று தெரிகிறது.

உணவும், உடையும், இருப்பிடமும் சுற்றுப்புற சூழலும் இயற்கைக்கு முரணான சம்பவங்களும் மனித வாழ்க்கையை பெருமளவு பாதித்து அவன் உயிர் வாழ்வதற்கான ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடுகிறது. விளைவு மனித இனத்தின் குறுகிய அழிவுகள். இயற்கை வளங்கள் மிகைத்து சுகாதாரக் கெடுதிகளை மிக சொற்பமாக இருந்தபோது மனிதர்கள் நீண்ட காலம் வாழ்ந்துள்ளார்கள். அதாவது இயற்கை வளங்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் போதெல்லாம் மனிதனை வாழவைக்கும் ஜீன்கள் கெட்டுப்போகாமல் இருந்து, அவனை நீண்டகாலம் வாழ வைத்தன. இயற்கை மாறுவதன் விளைவால் மனித உடம்பில் அணுக்களில் மாற்றம் ஏற்படுத்துவதால் இன்றைய மனித வாழ்க்கை சுருங்கிப்போய்விட்டது. இயற்கை மாற்றத்தின் விளைவில் நம்மைவிட நமது நெருங்கிய வருங்கால சந்ததிகள் பாதிக்கப்படுவார்கள். என்பது நிதர்தன உண்மை. எப்படி? என்பதை விளங்குவோம்.

DNA என்ற ஜீன்களின் உள்மூலக்கூறுகள்தான் புரதம் தயாரிக்கும் வேலையைச் செய்கிறது. இது ஒழுங்காக நடக்கும் காலமெல்லாம் மனித இனம் இறைவனின் வரம் பெறுகிறது எனலாம் (ஆதிகால மனிதர்கள் இந்த வரம் பெற்றவர்கள்தான்) இது தொடரமுடியாமல் பல இடையூறுகள் பல வழிகளில் வந்து புரத உற்பத்தியை நாசம் செய்யும் பணியைச்செய்கின்றன.

திடீர் மாற்றக் காரணிகள் இவைதான் என்று பட்டியலிட்டுக் கூறமுடியாத அளவிற்கு தொடராக வருபவை. இவைகள் மொத்தமாக வேதியல் காரணிகள், பௌதீகக் காரணிகள் எனப்பகுதிப் படுத்தலாம். இதில் பௌதீகக்காரணிகளின் விளைவு மனித இனத்தை அழிக்கவல்லது. இதற்கு சரியான உதாரணமாக கதிர்வீச்சுக்களைக் குறிப்பிடலாம். நமது நாட்டில் கல்பாக்கத்தில் உள்ள அணு உலைப்போன்று மின் உற்பத்திக்காக உலகமெங்கும் 400க்கும் மேலான அணு உலைகள் உள்ளன. இந்த இடங்களில் விபத்து ஏற்படும் போதெல்லாம் அதன் விளைவு மிகக் கடுமையாக இருந்துள்ளது. 1979, 1986களில் அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் நடந்த அணு உலை விபத்துக்களின் விளைவால் இன்றுவரை பல்லாயிரக்கணக்கான சதுர கீ.மீ கள் மனித வாழ்விற்கு உபயோகமற்றுக் கிடக்கின்றன. அணு உலைகளிலிருந்தும் வெளிப்படும் கதிரியக்கங்களால் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மனித இனத்தை மொத்தமாக அழிக்கும் சக்திப்பெற்ற அணுகுண்டுகளால் உலகில் மறக்க முடியாத காயங்கள் ஏற்பட்டுள்ளன.

1945களில் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகாஷாகி ஆகிய இடங்களில் அமெரிக்காவால் வீசப்பட்ட அணுகுண்டுகள் அந்த நிமிடமே ஐந்துமைல் சதுரப் பரப்பளவை சுடுகாடாக்கியது கட்டிடங்கள் பொடியாயின. அந்த நிமிடத்தில் காற்றின் வெப்பநிலை ஆயிரம் மில்லியன் டிகிரியாகியது. அதிலிருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சு ஒரு நிமிடத்திற்கு ஒருலட்சத்து எண்பது மைல் வேகத்தில் பரந்து மனிதர்களைப் பிணமாக்கின. சமீபத்தில் பொக்ரானில் பரிசோதனை செய்யப்பட்ட அணுகுண்டுகளால் அதன் சுற்றுப்புற மக்களுக்கு ஏற்பட்ட கடும் பாதிப்புகளை நாம் அறிவோம். போபால் விஷவாயு கசிவிலிருந்துகூட மனிதர்கள் தப்பவில்லை. இந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் மனித உடம்பின் ஜீன்கள் நிலைத்தடுமாறிப் பாதிப்புக்குள்ளாகின்றன. இந்த பாதிப்புக்குள்ளானவர்கள் மூலம் சந்திகளுக்குக் கடத்தப்படும் ஜீன்கள் ஒரு பாரம்பரிய மக்களையே குறைபாடுள்ளவர்களாக்கி விடுகிறது.

உயர் சக்தி கதிர் வீச்சுக்களால் மட்டும் இத்தகைய பாதிப்ப என்றில்லை. குறைந்த அலைவரிசையுள்ள மின்காந்தக் கதிர்களான எக்ஸ் மற்றும் காமாக்கதிர்கள். புற ஊதாக்கதிர்களும் கூட உயிரினங்களின் செல்களில் மாற்றங்களை ஏற்படுத்தி விடுவது நவீன ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கதிரியக்கத்தின் கெடுதிகளால் ஜீன்களை காவு வாங்கும் ரத்தப்புற்று நோய் போன்ற புற்று நோய்கள் அதிகம் வருகின்றன. விண்ணிலிருந்து மனிதன் மீது கொட்டப்படும் கதிரியக்கங்களும், மண்ணில் வியாபித்து நிற்கும் கதிரியக்கங்களும் மனித ஜீன்களோடு மல்லக்கட்டுவது நடக்காமல் இல்லை. மண்ணிலிருக்கும் கதிரியக்கங்கள் தாவரங்களில் புகுந்து அவற்றை உட்க்கொள்ளும் கால் நடைகளில் நுழைந்து அதன் தசைகளிலும், பால் சுரப்பிகளிலும் நுழைந்து அவற்றை சாப்பிடும் மனிதனின் உள்ளேயும் நுழைந்து பல வில்லங்கங்களை விளைவிக்கின்றன.

ஆரோக்கிய கெடுதிகளோடு, புரதக்குறைப்பாடுகளை உருவாக்கி அவற்றை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தும் வேலையை இவை சர்வ காலமும் செய்கின்றன. டெலிவிஷன். கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் திரைகள், ரேடியம் உள்ள வாட்ச்கள் உட்பட கதிரியக்கம் வெளிப்பட்டு மனிதனை அழிக்கும் வேலையைச் செய்கின்றன.

தன்னிலிருந்து மனிதன் எங்கும் தப்பிச் செல்ல முடியாத அளவிற்கு கதிரியக்கத் தாக்குதல் தொடர்கிறது. அது தொடரும் காலமெல்லாம் மனித ஜீன்களைப் பதம் பார்ப்பது தடைபடாது. இதுபோன்ற கணக்கிலடங்க கதிர்வினைக் காரணிகள் அவை சிறியதாகவோ பெரியதாகவோ துவங்கிய காலமெல்லாம் மனித இனத்தின் ஆரோக்கியம், வாழ்நாள் போன்றவற்றில் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்பட்டு இன்றைக்கு மனிதன் மிகக் குறுகிய வாழ்க்கைக்கு முன் தள்ளப்பட்டுள்ளான்.

குருட்டுத்தன்மை, செவிட்டுத்தன்மை, உடல் பலவீனம் என்று உடம்பில் ஏற்படும் அனைத்துக் கோளாறும் ஜீன் பலவீனத்தின் பிரதிபளிப்புகளேயாகும். மனித உடம்பில் நோய் ஏற்படும் போது இந்த நோய்க்கான காரணம் எந்த ஜீனில் உள்ளது என்று கண்டறிந்து அந்த ஜீன் (செல்) சரிசெய்யப்பட்டு விட்டால் வந்த நோயின் தாக்கம் இல்லாமல் போய்விடும். நோய்கள் குறைந்தால் மனிதன் நீண்டக் காலம் வாழ்வான். (அகால மரணங்கள் மட்டும் விதிவிலக்காகும்)

கண்டறியப்பட்ட இந்த நோய்களுக்கான காரணிகளை சரிப்படுத்தினால் மனிதன் நீண்டகாலம் வாழ்வது சாத்தியமாகும். இதை இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் சூசகமாக இப்படிக் கூறியுள்ளார்கள்.

(மனிதர்களே) மருத்துவம் செய்யுங்கள், ஏனெனில் மரணம் என்ற நோயைத்தவிர எல்லா நோய்களுக்கும் இறைவன் மருந்தை உருவாக்கியுள்ளான். நூல்கள்: அபூதாவூத், இப்னுமாஜா, ஹாக்கிம்.

பின்பொரு முறையும் கூறினார்கள், இறைவன் எந்த நோய்க்கும் அதற்குரிய மருந்தை உருவாக்காமல் இல்லை. நூல்கள்: புகாரி, இப்னுமாஜா.

ஜீன்களை புளு பிரிண்ட் எடுத்து எந்த நோய்களையும் குணப்படுத்தலாம் மரணத்தைத்தவிர என்ற நவீன விஞ்ஞான தத்துவத்தை தத்ரூபமாகச் சொல்கின்றன இந்த நபிமொழிகள். எனவே திருக்குர்அனின் நேரடி ஆதாரத்திலும் நபிமொழிகளின் சூசகமான அறிவிப்புகளிலும் இந்த ஆயிரம் ஆண்டுகள் வாழ்க்கை சாத்தியம்தான் என்ற விளங்கும் விஞ்ஞான ஆதாரம் கிடைக்கிறது.

இதில் இன்னும் முதன்மையாகக்கூட நாம் சில விஷயங்களை சிந்திக்கலாம். மன நிலைபாதிப்புகள், நோய்கள், உடலியலைப் பாதிக்கும் இன்னபிற காரணங்கள் இல்லாத நிலையில் மனிதன் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி வாழும் சூழ்நிலைகூட உருவாகலாம். இதற்கு முன்னுதாரணமாக ஈஸா(அலை) அவர்களைக் குறிப்பிடலாம், அவர்கள் இதுவரை வாழ்கிறார்கள்.

முஸ்லிம், கிறித்துவர்களின் நம்பிக்கைப்படி இறுதி காலத்தில் மீண்டும் உலகிற்குத் திரும்பி வருவார்கள். இரண்டாயிரம் வருடங்களாக அவர்கள் உயிர் வாழும் நிலையை இறைவன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். இந்த பூமியில் இல்லாத உடலியலை பாதிக்கும் சூழல் இல்லாத ஒரு இடத்தில் இன்னும் உயிர் வாழ்கிறார்கள். இந்த பூமிக்கு இறுதியில் வந்து உடலைப்பாதிக்கும் வேதியல் காரணிகளுக்கு அவர்களின் உடலும் உட்படுத்தப்பட்ட பிறகுதான் அவர்கள் மரணிப்பார்கள். இயேசு மிக நீண்டக்காலமாக எப்படி உயிர்வாழ்வார்கள் என்பது அன்றைக்கு (சென்ற நூற்றாண்டின் மத்தியப் பகுதிவரைக்கூட) ஆச்சரியமான ஒன்றுதான். இன்றைக்கு அது அறிவியல் நிரூபணமாக உள்ளது. எனவே நீண்டக் காலம் வாழத்துவங்கி பின்னர் பல்வேறு காரணங்களால் தன் வாழ்வை சுருக்கிக் கொண்ட மனித சமுதாயம் மீண்டும் தனது பழைய நிலையை அடையக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. இது மெய்பிக்கப்படும் தருணங்களில் டார்வினின் மனிதனும் பரிணாம உயிரிதான் என்ற தியரி மொத்தமாக காலாவதியாகி விடும்.

முஸ்லிம்களால் வாழ முடியுமா?

இப்படியொரு சந்தேகம் முஸ்லிம்களுக்கு உடனடியாகயெழும் காரணம்.

எனது சமுதாயத்தின் சராசரியான வயது அறுபது முதல் எழுபது வரையாகும். ஒரு சிலர் விதிவிலக்குப் பெறலாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்கள்: திர்மிதி, இப்னுமாஜா. சந்தேகத்திற்கு இதுவே அடிப்படையாகும்.

இது முரணாகத் தோன்றினாலும், இதர ஆதாரங்கள் இந்த முரண்பாட்டை அகற்றி விடுகிறது. தலை சிறந்த முஸ்லிமான ஈஸா(அலை) வாழும் முன்னுதாரணத்தோடு சேர்த்து நபி(ஸல்) அவர்களின் இன்னும் ஒரு அறிவிப்பை நோக்குவோம்.

அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் சிறந்தவர் யார்? என்று ஒரு மனிதர் கேட்டார் அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''எவருடைய ஆயுள் அதிகமாகி அவரது செயல்பாடுகளும் அழகுற அமைகிறதோ அவர்தாம் என்றார்கள், எவருடைய ஆயுள் அதிகமாகி செயல்கள் கெட்டதாக அமைகிறதோ அவரே மனிதர்களில் கெட்டவர் என்றும் கூறினார்கள். நூல்கள்: திர்மிதி, அஹ்மத், தாரமி, தப்ரானி.

நீண்ட காலம் வாழும் சாத்தியக் கூறுகளை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது. அறுபது அல்லது எழுபது வயது என்று அறிவிக்கப்படும் செய்தியில் ஒரு சிலர் விதி விலக்குப் பெறலாம் என்ற கூற்றும் இதை மெய்ப்பிக்கிறது.

பொதுவாக மருத்துவம் என்பது எல்லோரையும் சென்றடையக் கூடியதல்ல, பயனளிப்பவர்களில் (அணு நகல் வரை படத்தின் மூலம்) முஸ்லிம்களும் அடங்கலாம், ஒரு சிலர் வாழவும் செய்யலாம், மற்றவர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறிய சராசரி வயதுடையவர்கள் என்பதை விளங்கினால் முரண்பாடுகள் எதுவும் இல்லை (இறைவன் மிக்க அறிந்தவன்)

நன்றி : http://www.idhuthanislam.com


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8972
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum